Published:Updated:

ஊரடங்கு துயரங்கள்! - கைவிடப்பட்டது சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல... நாங்களும்தான்!

சுற்றுலாத்தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுலாத்தலங்கள்

இடையில் சில மாதங்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன சுற்றுலாத்தலங்கள்.

ஊரடங்கு துயரங்கள்! - கைவிடப்பட்டது சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல... நாங்களும்தான்!

இடையில் சில மாதங்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன சுற்றுலாத்தலங்கள்.

Published:Updated:
சுற்றுலாத்தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுலாத்தலங்கள்

சுற்றுலா செல்லுமிடங்களில் நாம் இவர்களைப் பார்த்திருப்போம்... எப்போதும் துறுதுறுவென்று உற்சாகமாக வலம்வரும் இவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் பட்டையைக் கிளப்புவார்கள். ஆயிரமாண்டு காலத்து வரலாறு, வார்த்தைகளில் விளையாடும். சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டியாக அன்றாடக்கூலியில் வாழ்க்கையை நகர்த்தியவர்கள், இன்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கிறார்கள்!

இடையில் சில மாதங்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன சுற்றுலாத்தலங்கள். குற்றால அருவியின் இரைச்சலைத் தாண்டி கனக்கிறது ஆளரவமற்ற நிசப்தம். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு இங்கெல்லாம் அடர்பனியைக் காட்டியிலும் அடர்த்தியாகியிருக்கிறது வெறுமை. தினமும் தனது குதிரையுடன் அழுது புலம்புகிறான் குதிரையோட்டி.

ஊரடங்கு துயரங்கள்! - கைவிடப்பட்டது சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல... நாங்களும்தான்!

ஊட்டியின் தாவரவியல் பூங்கா, ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கிறது. ஊட்டியைச் சேர்ந்த டூரிஸ்ட் கைடு ஜான் பாஸ்கோ, ‘‘இங்கே டூரிஸ்ட் கைடு 100 பேரு இருக்கோம். வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் எதுவுமே கட்ட முடியலை. தெனமும் சாப்பாட்டுக்கு வழி தேடுறதே பெரும்பாடா இருக்கு. டூரிஸ்ட் கைடு ஒருத்தர் கட்டட வேலைக்குப் போயி, அந்த வேலை தெரியாம மாடியிலருந்து கீழே விழுந்து இறந்துட்டாரு. நிலைமை சரியாகுற வரைக்கும் மாசா மாசம் கவர்மென்ட் ஏதாவது நிவாரணம் கொடுத்தா நல்லாயிருக்கும்’’ என்றார் தவிப்புடன்.

சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் சிறு வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்திருக்கிறார்கள்... ஊட்டி தாவரவியல் பூங்காவைச் சுற்றிலும் வரிசைகட்டியிருக்கும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. படகு இல்லம், பைக்காரா, தொட்டபெட்டா, கொடநாடு வியூ பாயின்ட், குன்னூர் சிம்ஸ் பார்க் உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் காற்றுவாங்குகின்றன. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்ற நீலகிரிக்கு இதைவிட பெரும் சோகம் வேறென்ன இருக்க முடியும்?

ஊரடங்கு துயரங்கள்! - கைவிடப்பட்டது சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல... நாங்களும்தான்!

பூக்கூடையுடன் தாவரவியல் பூங்காவின் கேட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அன்னலட்சுமி பாட்டி. ‘‘சின்ன வயசுலருந்து இந்த கார்டன் வாசல்லதான் பூ வியாபாரம் செஞ்சேன். காலையிலருந்து சாயங்காலம் வரைக்கும் உக்காந்தா இருநூறு ரூபா கெடைக்கும். புள்ளைங்களை எதிர்பார்க்காம நிம்மதியா கஞ்சி குடிச்சேன். இப்போ ஆச்சு ஒண்ணரை வருஷம்... கையில காசு இல்லாம, மருந்து மாத்திரைக்கும்கூட அடுத்தவங்களை எதிர்பார்க்குற மாதிரி ஆகிப்போச்சு. கார்டனை இன்னைக்காவது தொறப்பாங்களா? யாராச்சும் பூ வாங்குவாங்களான்னு தெனமும் வந்து வந்து பார்த்துட்டுப் போறேன். ரொம்ப கஷ்டமா இருக்குப்பா’’ என்று நா தழுதழுக்க, கரங்கள் நடுங்கியபடி சொன்னபோது நெஞ்சம் கனத்துப்போனது!

கொடைக்கானலில் குதிரை ஓட்டிகளின் நிலைமை படு மோசம்... ‘‘எங்க வயிறு காய்ஞ்சாலும் பரவாயில்லை. எங்களுக்குச் சோறு போடுற குதிரை உசுரைக் காப்பாத்தணும். வருமானம் இல்லாம, குதிரைங்களைப் பராமரிக்க முடியலை. சில பேரு 100 மூட்டை கோதுமைத் தவுடு கொடுத்து உதவுனாங்க. அதையும் மீறி, போன வருஷம் ஆறு குதிரைங்களும், இந்த வருஷம் நாலு குதிரைங்களும் செத்துப்போச்சு. அரசாங்கத்துக்கிட்ட உதவி கேட்டு பெட்டிஷன் கொடுத்து ஓஞ்சுட்டோம்... எதுவும் நடக்கலை’’ என்று விரக்தியுடன் சொல்லும் பாண்டியராஜன், குதிரை ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்!

பாலன், ஜான் பாஸ்கோ, பாண்டியராஜன்
பாலன், ஜான் பாஸ்கோ, பாண்டியராஜன்

மாமல்லபுரத்துக்குச் சென்றபோது ஐந்து ரதம் வளாகத்துக்கு வெளியே மரத்தடியில் முடங்கியிருந்தார் பாலன். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக டூரிஸ்ட் கைடாக வலம்வந்தவரை முடக்கிப்போட்டிருக்கிறது கொரோனா ஊரடங்கு. ‘‘மாமல்லபுரத்துக்கு டூரிஸ்ட்டுகள் வர, கடுமையான கட்டுப்பாடுகள் விதிச்சுட்டாங்க. தினமும் வெளிநாட்டுக்காரங்களால நிரம்பிவழியும் இந்த இடம். ஒரு நாளைக்கு ஒருத்தர், ரெண்டு பேரை அட்டெண்ட் பண்ணாலே போதும்... ஓரளவு வருமானம் கிடைக்கும். இப்ப டூரிஸ்ட்டுகள் சொற்ப அளவுல வந்தாலும், வழக்கமான கூட்டம் இல்லை... ஒண்ணரை வருஷமா பொழப்பைத் தள்ள முடியாம தவிக்குறோம். டூரிஸ்ட் கைடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் லோன் தர்றதா மத்திய அரசு சொன்னதோட சரி. எதுவும் நடக்கலை. நிஜமாவே சொல்றேங்க... புள்ளகுட்டிங்க எல்லாம் பட்டினியில கிடக்குறதைப் பார்க்க சகிக்காமத்தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்” என்று சொல்லும்போதே அவர் குரல் உடைந்துபோனது!

அன்னலட்சுமி
அன்னலட்சுமி

சுற்றுலாவை நம்பியிருக்கும் இவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவாரா தமிழக முதல்வர்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism