Published:Updated:

திரும்பிய பக்கமெல்லாம் சுற்றித் திரிகிறது!'- அச்சத்தில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள்

காலையில் தவிடு, புண்ணாக்கு கொடுத்து பால் கறந்து அனுப்பினால் மீண்டும் அடுத்த நாள் காலையில் தவிடு புண்ணாக்கு தேடி வீட்டிற்குப் போகிறது.

ஏற்காடு
ஏற்காடு ( எம்.விஜயகுமார் )

ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காட்டில் தற்போது ஜில் க்ளைமேட் நிலவினாலும் சுற்றுலாப் பயணிகளால் ஆசுவாசமாக சுற்றிப்பார்க்க முடிவதில்லை. காரணம், ஏற்காட்டில் திரும்பிய பக்கமெல்லாம் மாடுகள் சுற்றித் திரிகிறது. இந்த மாடுகளால் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலும், இடையூறும் ஏற்படுவதோடு விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாடு
மாடு

இதுபற்றி ஏற்காடு இளைஞர் மன்றக் கூட்டமைப்பு தலைவர் பாபு கூறுகையில்,``கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து ஒரு நாளைக்குக் குறைந்தது 10,000-த்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வாகனங்கள் மற்றும் டூ வீலர் மூலமாக புதிய அனுபவத்தைப் பெற வருகிறார்கள்.

Vikatan

ஏற்காடு டவுன் பகுதிகளில் பலரும் மாடுகள் வளர்க்கிறார்கள். அவர்கள் யாரும் மாடுகளை வீட்டில் கட்டிப் போட்டு வளர்ப்பதில்லை. காலையில் தவிடு, புண்ணாக்குக் கொடுத்து பால் கறந்து அனுப்பினால் மீண்டும் அடுத்த நாள் காலையில் தவிடு புண்ணாக்கு தேடி வீட்டிற்குப் போகிறது. இரவு பகலாக தெருக்களில் கேட்பாரற்று மாடுகள் கும்பல் கும்பலாகச் சுற்றித் திரிகின்றன.

மாடுகள்
மாடுகள்

ஏற்காடு பஸ் நிலையம், காந்திபூங்கா, அண்ணா பூங்கா, பரிசல் துறை, சேர்வராயன் கோயிலுக்குச் செல்லும் வழி, ஒண்டிக்கடை லேக் பகுதிக்குச் செல்லும் வழி, பக்கோடா பாயின்ட் செல்லும் வழி, நாகலூர் செல்லும் வழி, சேலத்திலிருந்து ஏற்காட்டிற்குச் செல்லும் மலைப்பாதை மற்றும் ஏற்காட்டில் உள்ள பிரதான சுற்றுலாத் தலங்களில் குறுக்கு மறுக்காக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அச்சமடைகிறார்கள்.

சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் இந்த மாடுகளால் பெரும் இடையூறு ஏற்படுகிறது. திடீர் திடீரென வாகனத்தின் குறுக்கே ஓடி வருவதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளன. இதில் மாடுகள் உயிரிழப்பதோடு, பயணிகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதுபற்றி ஏற்காட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்றார். இதுபற்றி விளக்கம் கேட்பதற்காக ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசுந்தருக்கு போன் செய்தோம்.

பாபு
பாபு

ஆனால், அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் பேச முடியவில்லை. அவர் விளக்கமளித்தால், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாரா இருக்கிறோம்.