சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பழந்தமிழ்க் கருவி... புதிய இசை!

பிரவேகா, தருண்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரவேகா, தருண்

கல்லூரியிலேயே பெயர்தான் வைக்கலை, மத்தபடி ஒரு இசைக்குழுவாகத்தான் செயல்பட்டுட்டு வந்தோம்.

ருணுக்குச் சொந்த ஊர் மதுரை. பிரவேகா சென்னை இளைஞர். ஓசூர்க் கல்லூரி வாழ்க்கை இருவரையும் நண்பர்களாக்குகிறது. அதற்குப் பிறகான அவர்களின் இசையும் இசை சார்ந்த பயணத்தையும் அவர்களின் வார்த்தைகளிலேயே கேட்கலாம்...

‘`கல்லூரியில் தருண் எனக்கு ஜூனியர். ஆனா +2 படிக்கிறப்பவே கிடார் வாசிக்கத் தெரிஞ்சுட்டார். மதுரையில ‘புளூ பேர்ட்ஸ்’ ராஜசேகர்னு ஒருத்தர் இருந்திருக்கார். தனியிசைப் பாடல்களைப் பாடிட்டிருந்த அவரைப் பார்த்துத்தான் கிடார் வாசிக்கணும்கிற ஆர்வம் வந்திருக்கு.

என்னைப் பொறுத்தவரைக்கும் பாட மட்டும் செய்வேன். ஒரே கல்லூரி, ஒரே படிப்புன்னு சூழல் எங்களை நண்பர்களாக்க, அங்க தருணுடைய கிடாரும் என்னுடைய பாட்டும் சேர்ந்துக்கிடுச்சு. பிறகென்ன, கல்லூரியளவுல, இன்டர்காலேஜ் கல்ச்சுரல்லன்னு எங்கேயும் எங்களுடைய புரோகிராம் மிஸ் ஆகாது’’ என பிரவேகா நிறுத்த, தொடர்ந்தார் தருண்.

பழந்தமிழ்க் கருவி... புதிய இசை!

‘`கல்லூரியிலேயே பெயர்தான் வைக்கலை, மத்தபடி ஒரு இசைக்குழுவாகத்தான் செயல்பட்டுட்டு வந்தோம். இன்னும் சிலரும் எங்ககூட இணைஞ்சாங்க. படிப்பும் பாட்டுமா அந்தக் காலங்கள் முடிய, சென்னை வந்து ஒரு `டூ இன் ஒன்’ ஸ்டூடியோ திறந்தோம். அதாவது, படிப்பு சம்பந்தமான கிராபிக்ஸ் வேலைகளும் அங்கதான். இசை தொடர்பான முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் அங்கதான். அந்தச் சூழல்லதான் எங்களுடைய `ஒத்தச்செவுரு’ எழுப்பப்பட்டது’’ என்றார்.

அதென்ன `ஒத்தச்செவுரு?’

“அந்த நாள் நல்லா ஞாபகமிருக்கு. அன்னைக்கு நானும் பிரவேகாவும் மதுரை வைகையாத்துப் பக்கத்துல இருக்கோம். வழக்கம்போல அவரு பாடல்களை எடுத்துவிட, அங்கன விளையாடிட்டிருந்த பசங்கதான் எங்களுக்கு ஆடியன்ஸ். அப்பதான் `குரங்கன்’ இசைக்குழு கேபர் வாசுகி, தேன்மாகிட்ட இருந்து எங்களுக்கு போன். ‘மியூசிக் பேண்டு’ல அவங்க எங்களுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.‘உங்க `பேண்டு’க்கு ஒரு பேர் வைப்போம். என்ன பேர்னு சொல்லுங்க’ன்னாங்க. பக்கத்துல ஒரு ஒத்தச்சுவர் கண்ணுல பட்டுச்சு. ‘ஒத்தச்செவுரு’ன்னு வெச்சுட்டோம்’’ என்கிற தருணும் பிரவேகாவும் சேர்ந்து ‘உரு’ என்கிற பெயரில் இசைக்கருவிகள் தயாரிக்கிற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

பழந்தமிழ்க் கருவி... புதிய இசை!

‘`கிடார் வாசிப்பில் ஆர்வம் அதிகமான ஒரு நாள். `லாப்ஸ்டீல் கிடார்’னு ஒருவகை கிடார் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். ஆனா அந்த கிடார் இந்தியாவுல எங்கயுமே இப்ப கிடைக்காதுன்னு சொன்னாங்க. ‘அதை நாமே தயாரிச்சா என்ன’ன்னு தோண, அந்த முயற்சியில இறங்கினேன். புதுச்சேரி ஆரோவில்ல கிடார் செய்கிற ஒருத்தருடைய அறிமுகம் கிடைக்க, ஆறு மாசம் அவர்கிட்ட பயிற்சி எடுத்துட்டு, சில கிடார்களை நானே தயாரிச்சேன். அந்த வேலையும் பிடிச்சிருந்தது. நான் செஞ்ச கிடார்களுக்கு வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்கத் தொடங்குச்சு.

பழந்தமிழ்க் கருவி... புதிய இசை!

அப்பதான், எதுக்கு மேற்கத்திய இசைக்கருவிகளைத் தேடிப் போகணும், நம்மகிட்டயே முன்னாடி எத்தனையோ இசைகருவிகள் இருந்திருக்கே’ன்னு தோணுச்சு. அவற்றைத் தேடுகிற முயற்சியில நிறைய இடங்களுக்குப் பயணிச்சோம். நிறைய பேரைச் சந்திச்சோம். அப்பதான் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய `செங்கோட்டி யாழ்’ பத்தின தகவல் கிடைச்சது. அதை மீட்டெடுக்கத் தொடங்கினோம்’’ என்ற தருண், தன் எட்டு மாத உழைப்பில் மீட்டெடுத்த அந்த அழகான அந்த யாழை லாகவமாகத் தன் மடியில் வைத்து சில நிமிடங்கள் மீட்டுகிறார்.

தொடர்ந்தவர், ‘இது மாதிரி நம்மகிட்ட நிறைய இசைக்கருவிகள் இருந்து மறைஞ்சிருக்கு. அவற்றையெல்லாம் மீட்டெடுக்கணும்கிற ஆசை இருக்கு. அப்படி மீட்டெடுக்கிறப்ப, அந்தக் கருவியின் இசையை இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி மார்டனைஸ் பண்ணிப் பயன்படுத்தணும்னு நினைச்சிருக்கோம். அதோடு, இந்த மாதிரியான இசைக்கருவிகளை இசைக்கப் பயிற்சி தர்றது குறித்தும் யோசிச்சிட்டு வர்றோம். அதேபோல சினிமா இதைப் பயன்படுத்துதோ இல்லயோ, எங்க இசைக்குழுக்களில் பயன்படுத்தலாம்னு இருக்கோம்” என்கிறார்.

செங்கோட்டி யாழைத் தொடர்ந்து அடுத்து ‘பஞ்சமுக வாத்தியம்’ பழங்கால இசைக்கருவி குறித்த தேடலில் இறங்கியுள்ளார்கள் இருவரும்.