Published:Updated:

`என்னது 189 வழக்குகளா..?' - இளைஞரை அதிரவைத்த போக்குவரத்து போலீஸார்

சாலை விதிகளை மீறிவிட்டதாக, சண்டீகரைச் சேர்ந்த இளைஞருக்கு எதிராக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Representative Image
Representative Image

புதிய மோட்டார் வாகன சட்டம், இம்மாதம் முதல் தேதியில் அமலுக்கு வந்தது. சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்குபவர்கள், சாலையில் பயணிக்க தரமற்ற வாகனங்களை வைத்திருப்போர்மீது காவல்துறையினர் கண்டிப்பு காட்டி வருகின்றனர். புதிய வாகன சட்டத்தின்படி அபராதத் தொகை அதிகம் என்பதால், முறையான ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்கின்றனர். இதுவரை இன்சூரன்ஸ் எடுக்காத வாகன ஓட்டிகள், அபராதத்தொகையை தவிர்ப்பதற்காக இன்சூரன்ஸ் எடுக்கத் தொடங்கினர். இதனால், இன்சூரன்ஸ் விநியோகம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. சில இடங்களில் காவல்துறையினர் தவறாக அபராதம் விதிப்பதாகச் செய்திகளும் வரத் தொடங்கியுள்ளன.

Traffic Police
Traffic Police

சட்டீஸ்கர், செக்டார் 33/34 பகுதியில், போக்குவரத்து காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செக்டார் 39 பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்ற இளைஞர், தனது இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். சாலை விதிகளை மீறி யூ- டர்ன் எடுத்ததால், போலீஸார் அவரை வழிமறித்தனர். வாகன எண்ணை குறித்துக்கொண்ட காவல்துறையினர், அவருக்கு ரூ.300 அபராதம் விதித்து அதற்கான ரசீதைக் கொடுத்துள்ளனர். அந்த ரசீது நீதிமன்றத்துக்குச் சென்றது. அப்போதுதான், சஞ்சீவ் வாகனத்தின்மீது 189 ரசீதுகள் அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்ட சஞ்சீவ் அதிர்ச்சியடைந்தார். ``நான் எப்போதும் வாகனத்தை கவனமாகத்தான் இயக்குவேன். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தபின்னர், நான் மேலும் ஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிவருகிறேன். இத்தனை ரசீதுகள் எனக்கு எதிராக இருப்பது குறித்து அறியவில்லை. இது, செகண்ட் ஹேண்டு வாகனம். இதை வாங்கியே ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இந்த அபராதத் தொகைகுறித்து இதுவரை ஏன் என்னிடம் அறிவுறுத்தவில்லை?” என்கிறார் சஞ்சீவ்.

Representative Image
Representative Image

சஞ்சீவின் இரு சக்கர வாகனத்தின்மீது 2017 -2019 ஆண்டு வரை 189 போக்குவரத்து மீறல் தகவல் ரசீது ( Traffic violation information slip) பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளும் சிசிடிவி கேமரா மற்றும் பொதுமக்கள் போட்டோ அனுப்பியதன் மூலம் வழக்கு பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் ஆன்லைன் ரசீதாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய போக்குவரத்து காவலர்களோ, ``நிலுவையில் உள்ள டி.வி.ஐ.எஸ் ( Traffic violation information slip) கொண்ட வாகனங்கள் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள், இந்த வாகனத்தை விற்கவோ மாற்றவோ முடியாது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் புதுப்பிக்க முடியாது'' என்கின்றனர்.