Published:Updated:

மறுபடியும் எங்களை நாடோடி ஆக்கிடாதீங்க... கதறும் நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்!

நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்

எங்க நரிக்குறவர் பரம்பரையில் இதுவரைக்கும் ஊனமான குழந்தை பிறந்ததே இல்லீங்க. ஆனா, இப்பல்லாம் எங்க குழந்தைங்க ஊனமா பொறக்குதுங்க

மறுபடியும் எங்களை நாடோடி ஆக்கிடாதீங்க... கதறும் நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்!

எங்க நரிக்குறவர் பரம்பரையில் இதுவரைக்கும் ஊனமான குழந்தை பிறந்ததே இல்லீங்க. ஆனா, இப்பல்லாம் எங்க குழந்தைங்க ஊனமா பொறக்குதுங்க

Published:Updated:
நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்

“காலங்காலமா மருந்துக்குக்கூட ஆஸ்பத்திரி நிழலை மிதிக்காத நாங்க இப்போ ஆஸ்பத்திரியே கதியா கெடக்குறோம்... எங்க குழந்தைங்ககூட ஊனமாப் பொறக்குதுங்க... அத்தனைக்கும் காரணம் டயர் கம்பெனிதான் சாமி...” என்று கதறுகிறார்கள் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ‘காரை’ ஊராட்சியில் வசிக்கும் நாடோடி சமூக மக்கள்!

ஊர் ஊராகச் சென்று பாசி மணி, ஊசி விற்றும், கயிறு மேல் நடந்து வித்தை காட்டியும் நாடோடிகளாக வாழ்ந்துவந்தவர்கள் நரிக்குறவர் மற்றும் ‘டோப்ரா’ எனப்படும் கழைக் கூத்தாடி இன மக்கள். இவர்களில் 200 குடும்பத்தினர் நிரந்தரமாகத் தங்கியிருக்க 1957-ல் காரை ஊராட்சியில் இடம் ஒதுக்கித் தந்தவர் அப்போதைய திருச்சி ஆட்சியர் மலையப்பன். எனவே, ‘மலையப்பன் நகர்’ என்று அவரது பெயரிலேயே இப்பகுதி அழைக்கப்படுகிறது. இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு அருகே, கடந்த 2008-ல் தொடங்கப்பட்ட எம்.ஆர்.எஃப் டயர் கம்பெனியால்தான் இவ்வளவு பிரச்னையும் என்கிறார்கள் இந்த மக்கள்.

மறுபடியும் எங்களை நாடோடி ஆக்கிடாதீங்க... கதறும் நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்!

இது குறித்துப் பேசுகிற ‘தமிழ்நாடு நரிக்குறவர் கள் கூட்டமைப்பு’ தலைவர் காரை சுப்பிரமணி, “எங்க குடியிருப்புகளுக்கும், அந்த டயர் கம்பெனிக்கும் இடையே வெறும் 300 மீட்டர் தூரம்தான் இருக்கும். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீரை எங்க குடியிருப்பு பகுதிக்குள்ளதான் விடுறாங்க. இதனால, நிலத்தடிநீர் கெட்டுப்போய் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீரும் விஷமாயிருச்சு. மலையப்பன் நகர் மட்டுமில்லாம சுத்திலும் இருக்குற பல கிராமங்களும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. 500 டன் நிலக்கரியை ஆலைக்குக் கொண்டுவந்து எரிச்சு, கரன்ட் தயாரிச்சு தொழிற்சாலையை இயக்குறாங்க. நிலக்கரியை எரிக்கும்போது காத்துல பரவுற கருந்தூசி கலந்த நச்சுப்புகையால, குழந்தைங்க முதல் பெரியவங்க வரைக்கும் நோய்வாய்ப்பட்டு, சீக்கிரமே சாவை நோக்கிப் போறோம். கடந்த ஜூலை மாசம் சுதாங்கிற பொண்ணு நுரையீரல் பிரச்னையால மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துட்டாங்க. அப்புறம் செங்கமலை, கருணா நிதின்னு ரெண்டு பேர் கேன்சர் வந்து செத்துப்போனாங்க” என்றவர் அருகில் இருந்த பிஞ்சுக் குழந்தையைச் சுட்டிக் காட்டியபடி தொடர்ந்து பேசினார்.

“எங்க நரிக்குறவர் பரம்பரையில் இதுவரைக்கும் ஊனமான குழந்தை பிறந்ததே இல்லீங்க. ஆனா, இப்பல்லாம் எங்க குழந்தைங்க ஊனமா பொறக்குதுங்க. இந்த நிலையில், ஆலையை விரிவாக்கம் பண்ணி எங்க எல்லை வரைக்கும் வந்துட்டாங்க. ‘ஆலையின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யச் சொல்லுங்க, நிலக்கரி எரிக்கிறதைத் தடுங்க’னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்துட்டு ஆலைக்கு வெளியே நின்னு கோஷம் போட்டோம். இதுக்காக, வழிப்பறிக் காரங்க மேல போடுற பிரிவுல, எங்க மேல கேஸ் போட்டுருக்காங்க. கம்பெனி விரிவாக்கத்துக்கு கருத்துக்கேட்பு கூட்டம்கூட நடத்தாம, அதைச் சுட்டிக்காட்டும் எங்கள்மீது வழக்கு போடுறது நியாயமா.... எங்களை மறுபடியும் ஊரைவிட்டு வெளியேற்றி நாடோடியா அலையவிட நினைக்குறாங்களா?” என்றார் கொந்தளிப்பாக.

மறுபடியும் எங்களை நாடோடி ஆக்கிடாதீங்க... கதறும் நரிக்குறவ, கழைக் கூத்தாடி மக்கள்!

மூச்சுத்திணறலால் அவதிப்படும் செல்லம் மாள், “அதிகாலை மூணு மணிக்கெல்லாம் கரும்புகை ஊரையே சூழ்ந்துடுது. நாத்தமெடுக்கும் கரும்புகையையும், அதுல கலந்திருக்கும் ரப்பர் தூளையும் சுவாசிக்கிறதால மூச்சுவிடக்கூட முடியாமப்போயிருச்சு. நாடோடியா வாழ்ந்த காலத்துல ஆரோக்கியமா இருந்தோம். இப்போ வீட்டுக்கு ரெண்டு பேர் நுரையீரல் பிரச்னையால அவஸ்தைப்படுறோம். எங்க வீட்டுக்காரருக்குப் புற்றுநோய் வந்ததால் போன வாரம் இறந்துட்டார். எனக்கும் சரியா மூச்சுவிடக்கூட முடியலை சாமி...” என்று கண்ணீர் வடித்தார்.

ஆலைக்கு எதிராக போராடத் தயாராகும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை நம்மிடம் பேசுகையில், “தொழிற்சாலை வரும் முன்பே இங்கே குடியிருப்பு இருக்கிறது. ஏக்கர் கணக்கில் இங்குள்ள இடங்களை வளைத்துப்போட்டிருக்கிற எம்.ஆர்.எஃப் கம்பெனி, நிலக்கரிக்கு பதிலாக சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து ஆலையை இயக்கலாம். அதை விட்டுவிட்டு கந்தக அமிலம், கார்பன் மோனாக்ஸைடு, பாதரசம், ஆர்சனிக் போன்ற விஷ வாயுக்களை வெளியேற்றும் நிலக்கரியைப் பயன்படுத்துவதால்தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

காரை சுப்பிரமணி, செல்லதுரை
காரை சுப்பிரமணி, செல்லதுரை

எம்.ஆர்.எஃப் கம்பெனியின் மேனேஜர் நாதன் என்பவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டபோது, ‘‘தண் ணீரைச் சூடேற்றுவதற்காக மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்துகிறோம். மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்திய அளவில் மட்டுமே புகை வெளியேறுகிறது. மற்றபடி, அவர்கள் சொல்வதுபோல கரும்புகையெல்லாம் வெளிப்படுவ தில்லை. சிலர் பொய்யான தகவலைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்” என்றார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியாவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு சென்றோம். ‘‘பொதுமக்கள் அளித்துள்ள புகார் குறித்து விசாரிக்கிறோம். அந்தப் பகுதி மக்களில் சிலருக்கு நோய் ஏற்பட்டிருப்பது தொடர்பாக மருத்துவக்குழு ஆய்வு செய்யும். ஆலையில் விதிமீறல் ஏதும் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

நாடோடி மக்களுக்கு, ஒரு கலெக்டரால் கிடைத்த குடியிருப்பைப் பாதுகாத்துக் கொடுக் கும் கடமை இன்றைய கலெக்டருக்கு இருக்கிறது!