Published:Updated:

தூய்மைப் பணியாளர்களை துரத்தும் துயரங்கள்!

- பாலியல் சீண்டல்... குறைந்த சம்பளம்... நிச்சயமற்ற வேலை...

பிரீமியம் ஸ்டோரி

சென்னை நகரை ஓர் இரவு 10 மணிக்கு மேல் வலம்வந்து பாருங்கள்... ரோட்டுக்கடைகளில் பெரிய பிளாஸ்டிக் வாளியிலிருந்து எச்சில் இலைகளை அப்படியே சாலையோரம் கவிழ்த்துவிடுவார்கள். அதிலிருந்து கசியும் கழிவுநீர் சாலையெங்கும் கோலம் போடும். பெயருக்குத்தான் குப்பைத்தொட்டி. பலரும் அதில் குப்பைகளைப் போடுவதில்லை. குப்பைத்தொட்டிக்கு வெளியே குவிந்துகிடக்கின்றன குப்பைக் குன்றுகள். மதுக்கடைகளின் வாசல்கள் என்றால் சொல்லவே வேண்டாம்... உடைந்தும் உடையாமலும் காலைப் பதம் பார்க்கக் காத்திருக்கின்றன காலி மதுபாட்டில்கள். தெருவோரங்களிலும் பிளாட்பாரங்களிலும் சிறுநீர், மலம் கழிப்பவர்களெல்லாம் தனி ரகம். ஆனால், விடிந்து பார்த்தால் வானத்தைப்போலப் பளிச்சிடுகிறது நகரம். காரணம், தூய்மைப் பணியாளர்களின் அயராத உழைப்பு. சென்னையில் காவல்துறையினர் மட்டுமல்ல... 24 மணி நேரமும் வலம்வந்து நகரத்தைச் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கை அத்தனை துப்புரவாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. நிரந்தரமில்லாத பணிச்சூழல், சம்பளம் குறைப்பு, பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் சீண்டல்கள்... என தினம் தினம் இவர்களைத் துரத்துகின்றன துயரங்கள்!

தூய்மைப் பணியாளர்களை துரத்தும் துயரங்கள்!

சென்னையில் நாள்தோறும் சேகரமாகும் சுமார் ஆயிரம் டன் குப்பைகளை அப்புறப்படுத்தி, தெருக்களைச் சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் சுமார் ஆறாயிரம் பேர் மாநகராட்சியின் நிரந்தரப் பணியாளர்கள். சுமார் ஐந்தாயிரம் பேர் மாநகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார்கள். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஏழு மண்டலங்களில் ‘உர்பேசர் சுமீத்’ நிறுவனமும், நான்கு மண்டலங்களில் ‘ராம்கி’ நிறுவனமும் ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்திவருகின்றன. மீதமிருக்கும் நான்கு மண்டலங்களில் மட்டும் மாநகராட்சி நேரடியாகத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுகிறது.

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலைகளின்போது உயிர் பயத்தில் ஊரே அச்சத்தில் முடங்கிக்கிடக்க... உயிரைப்பணயம் வைத்து அரசு மருத்துவமனைகளிலும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் முன்களப் பணியாளர்களாக இவர்கள் ஆற்றிய சேவையை மறக்க முடியாது. அவர்களில் பலரும் உயிரிழந்த நிலையில், ‘இழப்பீடு கொடுக்கவேண்டியிருக்குமே’ என்கிற ஓரவஞ்சனை காரணமாக அது தொடர்பான புள்ளிவிவரங்கள்கூட அரசுத் தரப்பில் அதிகாரபூர்வமாக இல்லை. இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியெல்லாம் நம்மிடம் விவரித்தார் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசன்...

“கடந்த 2017-ம் ஆண்டிலேயே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 624 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதை இன்னும் அமல்படுத்தாமல், ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கும் குறைவாகத்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். விடுமுறை நாள்களில் பணியாற்றினால் இரட்டிப்பு சம்பளம், போனஸ் என எதையுமே அமல்படுத்த வில்லை. கழிவறை, உடை மாற்றும் அறை என்று பெண்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படாத நிலையிலும், அதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அவர்கள் பணிபுரிகிறார்கள்.

பாலியல் சீண்டல்... தற்கொலை முயற்சி!

சமீபகாலமாக பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொந்தரவுகளும் எழுந்துள்ளன. மாநகராட்சியின் 14-வது மண்டலத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றும் அஸ்வின்குமார் என்பவர் பெண் தொழிலாளி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இது பற்றி அந்தப் பெண் பலமுறை எச்சரித்தும் பலனில்லை. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் விசாகா கமிட்டியிடம் முறையிட்டு, போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்த பிறகே அந்த சூப்பர்வைசர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், டிரான்ஸ்ஃபர் மட்டுமே செய்திருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் வறுமையில் வாடுபவர்கள் என்பதாலேயே ஏளனமாகப் பார்க்கிறார்கள். அந்த சூப்பர்வைசர் மீது விசாரணை நடத்தி, போலீஸில் புகார் அளித்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் மட்டுமே இருக்கும் விசாகா கமிட்டியை மண்டலம்தோறும் அமைக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவுகட்ட முடியும்’’ என்றார்.

தூய்மைப் பணியாளர்களை துரத்தும் துயரங்கள்!

பாலியல் சீண்டலுக்குள்ளான பெண்ணுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசியபோது, ‘‘தனியார் நிறுவனத்தின் சார்பில் சூப்பர்வைசராக இருக்கும் அஸ்வின்குமார், எப்போதுமே இரட்டை அர்த்த வசனங்களையும், இழிவான வார்த்தைகளையுமே பயன்படுத்துவார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் வேலை பார்க்கிறோம். பள்ளிக்கரணைப் பகுதியில் பணிபுரியும் அந்தப் பெண், கடந்த வாரம் அதிகாலை 6 மணிக்கு முன்பாகவே பணிக்கு வந்துவிட்டார். அவரை மட்டும் அலுவலக அறைக்கு வரச் சொன்ன அஸ்வின்குமார், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பித்துவந்தவர், எங்களிடம் சொல்லி அழுதார். உடனடியாக, அஸ்வின்குமாரை முற்றுகையிட்டு நியாயம் கேட்டோம். அவரோ அலட்சியமாகப் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லியும் பலனில்லை. மறுநாள் அந்தப் பெண் வேலைக்கு வந்தபோதும் அஸ்வின்குமார், ‘என்னை எதுவும் செய்ய முடியாது... அட்ஜஸ்ட் செய்துதான் ஆக வேண்டும்’ என்று அடாவடியாகப் பேசவே... மனமுடைந்தவர் அந்தப் பெண் எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். இதையடுத்து, நாங்கள் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்த பிறகே அஸ்வின்குமாரை டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்கள்” என்றார் வேதனையுடன்!

அஸ்வின்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘சீருடை அணிவது, நேரத்துக்கு வருவது உள்ளிட்ட விஷயங்களில் கறாராக இருந்தேன். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு என்மீது பாலியல் புகாரைச் சொல்லியிருக்கிறார். போலீஸிலும் என்மீது புகார் அளித்துள்ளார்கள். இந்த விவகாரத்தைச் சட்டப்படி சந்திப்பேன்’’ என்றார்.

“முழுசா சம்பளத்தை வாங்குனதில்லை!”

ஆற்காடு சாலையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தூய்மைப் பணியாளரிடம் பேச்சுக்கொடுத்தோம்... ‘‘பேட்டரி குப்பை வண்டி ஓட்டுறவங்களுக்கு 10,300 ரூபா மாச சம்பளம். ஸ்வீப்பருங்களுக்கு 9,485 ரூபா சம்பளம். ஆனா, ஒரு மாசம்கூட நாங்க முழுசா சம்பளத்தை வாங்குனது கிடையாது. வீக்லி ஆஃப் எடுத்துட்டு, மறுநாள் லீவு போட்டாக்கூட ரெண்டு நாள் சம்பளத்தைப் பிடிச்சுடுறாங்க. இ.எஸ்.ஐ., பி.எ.ஃப் போகத்தான் 9,485 ரூபாய் சம்பளம்னு சொன்னாங்க. ஆனா, அதுலயே மேலும் பிடித்தம் செஞ்சு இ.எஸ்.ஐ., பி.எ.ஃப்-னு காரணம் சொல்றாங்க. சூப்பர்வைசருங்க எல்லாம் மாசம் 25,000 ரூபா சம்பளம் வாங்குறாங்க. அவங்களுக்கும் மாசா மாசம் கமிஷன் கொடுக்கணும். யூனிஃபார்ம், சோப்பு, துடைப்பம் எல்லாத்தையும் நிர்வாகம்தான் கொடுக்கணும். யூனிஃபார்ம் சீக்கிரமே கிழிஞ்சுடுது. பலருக்கு சைஸ் செட் ஆகுறதில்லை. கைக்காசு போட்டுத்தான் புதுசு எடுத்துக்கிறோம். சோப்பும் கொடுக்கறதில்லை. கொரோனாவுக்குப் பின்னாடி கை கிளவுஸ், மாஸ்க் கொடுக்குறோம்னு சொன்னாங்க. சில பகுதிகளைத் தவிர பல இடங்கள்ல அது வரலை. துடைப்பத்தையே நாங்கதான் வாங்கிப் பயன்படுத்துறோம்” என்றவர், புதுத்தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்...

சீனிவாசன், ககன்தீப் சிங் பேடி
சீனிவாசன், ககன்தீப் சிங் பேடி

இரவுகளில் குறையும் திருட்டு பயம்!

“போலீஸ் ரவுண்ட்ஸ் வர்றாங்களோ இல்லையோ எங்க ஆளுங்கதான் சிட்டி முழுக்க நைட் டூட்டி பார்க்குறாங்க. நைட் 9 மணிலிருந்து விடியக்காலை 5 மணி வரைக்கும் நாங்க நாலஞ்சு பேரா கூட்டமா வேலை செய்யறதாலதான் ஊருக்குள்ள திருட்டு பயம் குறைஞ்சிருக்கு. எங்களைப் பார்த்து திருட வர்றவங்ககூட பின்வாங்கிடுறாங்க. அதே மாதிரி குடிச்சுட்டு கலாட்டா பண்றவங்களைக்கூட நாங்க விரட்டியிருக்கோம்” என்றார்.

மேற்கண்ட பிரச்னைகள் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டோம். “சம்பளம் குறைப்பு பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் புகார் விவகாரம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அது சென்சிட்டிவான விவகாரம் என்பதால், விசாரணை முடிந்த பிறகே கருத்து கூற முடியும். மற்றபடி சீருடை, சோப்பு உள்ளிட்ட அவர்களுக்கான பொருள்களை முழுமையாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். துப்புரவுப் பணியாளர்கள் தங்களது குறைகளை எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என்றும் கூறியிருக்கிறேன்” என்றார்.

நகரம் பளிச்சிட்டால் மட்டும் போதாது; தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையும் பளிச்சிட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு