Published:Updated:

‘‘வாழ்வோ சாவோ... இனி எல்லாமே எங்க ஊருலதான்...”

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கலங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

உணவகங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானம் எனப் பல்வேறு பணிகளுக்காகத் தமிழகம் வந்து தங்கியிருந்த வட மாநிலப் பணியாளர்கள், இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சந்தித்த இன்னல்கள் ஏராளம். பல நாள்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு நடந்தும், லாரிகள் மூலமும், அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில்கள் மூலமும் ஒருவழியாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழிலகங்கள் இயங்கத் தொடங்கியிருக்கும் நிலையில், சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் திரும்பப் பணிக்கு வருவார்களா என்று தொழிலக உரிமையாளர்களும் காத்துக்கிடக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அகில இந்திய சிகை மற்றும் அழகுக்கலை சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துலட்சுமி, ‘‘தமிழகத்துல இருக்குற பார்லர்கள், சலூன்கள்ல பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலப் பணியாளர்கள் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. கொரோனா ஊரடங்கால் சலூன்கள் திறக்கலை. அதனால, நிறைய பேர் வேலை இல்லாம இருந்தாங்க. சில முதலாளிகள், தங்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாங்க.

‘‘வாழ்வோ சாவோ... இனி எல்லாமே எங்க ஊருலதான்...”

எங்க சலூன்லகூட 25 பேர் வேலை பார்த்தாங்க. பணப் பிரச்னைகளைத் தாண்டி, தங்களோட குடும்பத்தினரைப் பார்க்கப் போகணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. `சென்னையில இருந்து ரயில் புறப்படுது’னு சொன்னதும், எல்லாரும் ஊருக்குப் போயிட்டாங்க. எப்போ வருவாங்கன்னு சொல்லிட்டுப் போகலை. வருவாங்களான்னும் தெரியலை.

உள்ளூர் ஆளுங்களை வேலைக்குவெச்சா அடிக்கடி லீவு கேட்பாங்க; ஆள் மாறிக்கிட்டே இருப்பாங்க. வேலை பாதிக்கும். அதனால, கூடுதலா அட்வான்ஸ் பணம் கொடுத்தாவது அவங்களைத் திரும்பக் கூப்பிடும் எண்ணத்துலதான் நிறைய பேர் இருக்காங்க’’ என்றார்.

சென்னை சேப்பாக்கத்தில், வெளி மாநிலப் பணியாளர்களுடன் இயங்கிய ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரிடம் இது தொடர்பாகப் பேசினோம். ‘‘எங்க ஹோட்டல்ல 16 மகாராஷ்டிரா ஆளுங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்க. தங்க இடம் கொடுத்து, சாப்பாடும் கொடுத்துருவோம். மாசம் 10,000 ரூபா சம்பளம். அடிக்கடி லீவு போட மாட்டாங்க. சொல்ற வேலைகளைச் செய்வாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா ஊரடங்கு அறிவிச்ச நேரம், முதல் பத்து நாளைக்கு எல்லாருக்கும் சாப்பாடு போடுறதுல சிரமம் ஏற்படலை. அதுக்கப்புறம் எனக்கே வியாபாரம் இல்லை. என் குடும்பமே சாப்பாட்டுக்குத் தவிக்கும்போது, நான் எப்படி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட முடியும்... ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து, `ஊருக்குப் போங்க’னு சொல்லிட்டேன். வெளி மாநிலத்து ஆளுங்க இல்லைன்னா பெரிய இழப்புதான். தீபாவளிக்கு அப்புறம் திரும்ப வருவாங்கனு எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

‘‘வாழ்வோ சாவோ... இனி எல்லாமே எங்க ஊருலதான்...”

சென்னையிலிருந்து லாரி மூலம் உத்தரப்பிரதேசம் சென்று சேர்ந்த அக்தரிடம் பேசினோம். ‘‘சென்னையில கோரைப்பாய் வியாபாரம் பார்த்துட்டு இருந்தேன். ‘வெளியே வரக் கூடாது... வியாபாரம் பாக்கக் கூடாது’னு போலீஸ்காரங்க அடிச்சாங்க. அப்புறம் 60 பேரை ஒரு மண்டபத்துல தங்கவெச்சிருந்தாங்க. எங்களுக்குச் சாப்பாடுகூடப் போடலை. எத்தனை நாள்தான் சாப்பிடாம இருக்கிறது... `ஊருக்குப் போகணும்’னு சொன்னதுக்கு `இன்னைக்கு... நாளைக்கு...’னு சொல்லிச் சொல்லி அடைச்சேவெச்சிருந்தாங்க. அதான், மாதவரத்துல இருந்து லாரி பிடிச்சு உத்தரப்பிரதேசம் வந்துட்டோம்.

ஒரு லாரியில 120 பேர் ஏறி மூச்சுக்கூட விட முடியாம நாலு நாள் பயணம் செஞ்சு ஊருக்கு வந்தேன். லாரியில் பயணம் செய்ய ஒரு ஆளுக்கு 4,000 ரூபா கேட்டாங்க. என்கிட்ட பத்து ரூபாதான் இருந்துச்சு. கடன் சொல்லி ஊருக்கு வந்து, வீட்டுல வாங்கிக் கொடுத்தேன். லாரியில வந்த நாலு நாளும் பிஸ்கட்டைத் தவிர எதுவுமே சாப்பிடலை. அரசாங்கம், அது பண்றேன், இது பண்றேன்னு சொல்லி ஏமாத்திடுச்சு. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. இனி, தமிழ்நாட்டுக்கு வர்றதைப் பத்தி யோசிக்கக்கூட பயமாயிருக்கு’’ என்றார் வருத்தத்தோடு.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர் அக்‌ஷய்குமாரிடம் பேசினோம். ‘‘சாத்தூர்கிட்ட இருக்குற சிமென்ட் தொழிற்சாலையில 13 வருஷமா வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒரு நாளைக்கு பத்து மணி நேர வேலை. மூணு வேளை சாப்பாடு கொடுத்து 9,000 ரூபா சம்பளமா கொடுத்தாங்க. வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்குப் போகும்போது 5,000 ரூபாயைக் கையில் கொடுத்துவிடுவாங்க. எங்க ஊருல தொழில் எதுவும் இல்லாமதான் இங்கே வந்தோம். கம்பெனியில தமிழ் ஆளுங்களைவிட எங்களுக்குச் சம்பளம் கம்மிதான். ஆனாலும் நாங்கதான் நேரம் காலம் பார்க்காம உழைப்போம்.

ஊரடங்கு அறிவிச்சப்போ முதல் ஒரு வாரத்துக்கு மட்டும் மூணு வேளை சாப்பாடு போட்டாங்க. அப்புறம், ‘வேலையிருந்தா கூப்பிட்டு விடுறோம்’னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஊருக்குப் போறதுக்காக 2,000 ரூபா கேட்டோம். அதுகூட கொடுக்கலை. கையில காசில்லாம ஒரு மாசமா, ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே படாதபாடு பட்டிருக்கோம்.

சாத்தூர்ல இருந்து நடந்தே விழுப்புரம் வந்து, அங்கே இருந்து சிறப்பு ரயில் மூலமா ஊருக்கு வந்து சேர்ந்திருக்கேன். சாப்பாடு மட்டும் கொடுத்திருந்தா, ஊருக்குப் போகணும்னு யாரும் நினைச்சிருக்க மாட்டோம். எங்களுக்கும் வயிறு இருக்குல்ல... வாழ்வோ சாவோ, இனி எல்லாமே எங்க ஊருலதான்...” என்று கண்கலங்குகிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவார்களா... தொழிலக உரிமையாளர்களின் காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?