Published:Updated:

பழங்குடியாக பிறந்தது எங்க தப்பா..? - மலைத் தீவில் தவிக்கும் வாகப்பனை பழங்குடிகள்!

வாகப்பனை பழங்குடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
வாகப்பனை பழங்குடிகள்!

எஸ்டேட்ல இலை பறிக்கிறோம். ரேஷன் கடையில அரிசி வாங்குறதுக்காக இன்னைக்கு வேலைக்குப் போகலை.

பழங்குடியாக பிறந்தது எங்க தப்பா..? - மலைத் தீவில் தவிக்கும் வாகப்பனை பழங்குடிகள்!

எஸ்டேட்ல இலை பறிக்கிறோம். ரேஷன் கடையில அரிசி வாங்குறதுக்காக இன்னைக்கு வேலைக்குப் போகலை.

Published:Updated:
வாகப்பனை பழங்குடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
வாகப்பனை பழங்குடிகள்!

பழங்குடியினரின் நிலையை நன்கறிந்த அமைச்சரின் தொகுதியிலேயே, சாலை வசதி எதுவுமின்றி தனித்துவிடப்பட்ட தீவாகத் தவித்துவருகிறது வாகப்பனை எனும் பழங்குடி கிராமம்!

கோத்தகிரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மலை கிராமத்துக்குச் செல்ல, யானைகள் உலவும் காட்டில் 8 கிலோமீட்டர் தூரத்தை நடந்து மட்டுமே கடக்க முடியும். சாலை வசதி எதுவும் இல்லாததால், வாகப்பனை பழங்குடிகள் பூர்வீக நிலத்தை விட்டுவிட்டு, கூலிகளாக நகரங்களை நோக்கித் தஞ்சமடைந்துவருகிறார்கள் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.

பழங்குடியாக பிறந்தது எங்க தப்பா..? - மலைத் தீவில் தவிக்கும் வாகப்பனை பழங்குடிகள்!
பழங்குடியாக பிறந்தது எங்க தப்பா..? - மலைத் தீவில் தவிக்கும் வாகப்பனை பழங்குடிகள்!

இதையடுத்து ‘நீலகிரியின் தனித் தீவு’ என அரசு அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்படும் வாகப்பனை கிராமத்தை நோக்கிப் பயணித்தோம். கோத்தகிரியிலிருந்து கூட்டடா வரை அரசுப் பேருந்துப் பயணம். கூட்டடாவிலுள்ள தனியார் தேயிலைப் பெருந்தோட்டத்தின் செக்போஸ்ட்டிலிருந்து தொடங்குகிறது, வாகப்பனை நோக்கிய சாகச நடைப்பயணம். பெரு மரங்களுக்கு நடுவில் பாசி படர்ந்து நீளும் அந்த நடைபாதை நெடுகிலும் யானை மற்றும் கரடிகளின் எச்சங்கள். கிடுகிடுக்கும் மலைச்சரிவில் பாறை, புதர்களுக்கிடையே கவனத்துடன் காலடி எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினோம்.

தலைச்சுமையுடன் வாகப்பனை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார் ஆலம்மாள் எனும் பெண்மணி. “எஸ்டேட்ல இலை பறிக்கிறோம். ரேஷன் கடையில அரிசி வாங்குறதுக்காக இன்னைக்கு வேலைக்குப் போகலை. மழை வந்துட்டா அரிசியை வாங்கிக்கிட்டு இவ்வளவு தூரம் தூக்கிட்டுப் போக முடியாதுல்ல. சாயங்காலம் வழியெல்லாம் யானை நிக்கும். 6 மணிக்கு மேல உயிர் போற அவசரமா இருந்தாலும் வீட்டைவிட்டு வெளிய வர முடியாது. கர்ப்பவதிகளுக்கு வயித்து வலின்னாக்கூட விடிஞ்சுதான் தொட்டில் கட்டி ஆம்பளைங்க தூக்கிட்டுப் போவாங்க.

பழங்குடியாக பிறந்தது எங்க தப்பா..? - மலைத் தீவில் தவிக்கும் வாகப்பனை பழங்குடிகள்!

காலையில 9 மணிக்கு எஸ்டேட்ல இருக்கணும்‌. அதனால வீட்டு வேலையையெல்லாம் அவசரமா முடிச்சுட்டு 8 கிலோமீட்டர் நடந்தே வருவோம். அதுவே களைப்பாகிடும். அதோட நாள் முழுக்க வேலை செஞ்சு சாயங்காலம் வீடு திரும்ப மறுபடியும் 8 கிலோமீட்டர் நடக்கணும். எதுக்குடா இந்த ஊர்ல பொறந்தோம்னு தோணுது. நடக்க முடியாம ஏகப்பட்ட குடும்பங்கள் வீடு வாசலை விட்டுட்டு டவுன் பக்கம் கூலி வேலைக்குப் போயிட்டாங்க. நாங்களும் பார்க்காத அதிகாரிங்க இல்லை. கும்புடாத சாமிங்க இல்லை. ஆனா, ரோடு மட்டும் வந்த பாடில்லை. பழங்குடியாகப் பிறந்தது எங்க தப்பா?” என்று கேள்வி கேட்டவாறே தலையில் இருந்த அரிசிச் சுமையை இறக்கி பாறை மீது வைத்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்
அம்ரித்
அம்ரித்

நம்மிடம் பேச்சைத் தொடங்கிய மற்றொரு பெண், “எங்க நிலைமை வேற யாருக்கும் வரக் கூடாதுங்க. எங்க பிள்ளைங்களைக்கூட படிப்புக்காக சொந்தக்காரங்க வீட்டுலயும், ஹாஸ்டல்லயும் கொண்டு விடுறோம். எங்க ஊர் ஆளுங்களுக்கு யாரும் பொண்ணுகூட தர மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் எதுக்குங்க அரசாங்கம்..?” என்றார் விரக்தியாக. வழிநெடுக அவர்களது ஆதங்கங்களைக் கேட்டபடியே வாகப்பனை வந்து சேர்ந்தோம்.

பாழடைந்து, கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் அங்கன்வாடிக் கட்டடம் ஒன்றே அந்த கிராமத்தின் நிலையை எடுத்துரைத்தது. ஊர் மூப்பன் பாலன் நம்மிடம், ‘‘150 குடும்பங்களுக்கும் அதிகமா இருந்தோம். ஆனா, இன்னைக்கு 30 குடும்பங்கள்தான் இருக்கோம். இதுலயும் எத்தனை குடும்பம் எத்தனை நாளுக்கு இங்க இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. என் கண்ணு முன்னாடியே எங்க மக்கள் ஊரைக் காலி பண்ணிட்டு வெளியே போறதைப் பார்க்க முடியலை. எதுவுமே பண்ண முடியாத மூப்பனா இருக்கேன். விளையுற காபி கொட்டையைக்கூட ரோடு வசதி இல்லாததால சந்தையில கொண்டுபோய் சேர்க்க முடியலை. அடிமாட்டு விலைக்கு வந்து வாங்கிட்டுப் போறாங்க. உடம்பு முடியாதவங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்க்குறதுக்குள்ள எங்க உசுரே போகுது. இந்த அரசாங்கத்துக்கிட்ட ரோடு ஒண்ணுதான் கேக்குறோம். அது இல்லாமத்தான் எந்த வசதியும் எங்க ஊருக்கு வந்து சேர மாட்டேங்குது.கோத்தகிரிக்குப் போறதே எங்களுக்குப் பெரும் கனவா இருக்கு. எங்க பசங்க எப்படி படிப்பாங்க... நாங்க எப்படி வாழுறது... சொல்லுங்க” எனக் கண்ணீர் வடித்தார்.

ஆலம்மாள்
ஆலம்மாள்
மூப்பன் பாலன்
மூப்பன் பாலன்

இந்த விவகாரத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ்-ஸின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “வாகப்பனை மக்களின் கஷ்டம் எனக்கும் தெரியும். அவர்களுக்கு இது நீண்டகாலப் பிரச்னையாக இருக்கிறது. அந்த கிராமத்துக்குச் சாலை அமைக்கச் சாத்தியக்கூறு இருக்கிறதா எனக் கள ஆய்வு செய்துவருகிறோம். ஆய்வின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பல்லாண்டுகளாகத் தொடரும் வாகப்பனை மக்களின் துயர் குறித்து வனத்துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ-வுமான ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘இந்த கிராமத்துக்குச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நிதி கேட்டிருக்கிறேன். நிதி கிடைத்ததும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிடும்” என்றார் நம்பிக்கையோடு.

வாகப்பனை மலை கிராமம் நோக்கி சாலையும் எதிர்காலமும் சீக்கிரம் செல்லட்டும்!