Published:Updated:

“ஸ்டாலின் ஐயாதான் எங்களுக்கு நல்லது பண்ணணும்!” - சென்னை மையத்தில் ஓர் இருண்ட ‘கிராமம்’!

 ‘ஜிப்ஸி’ காலனி
பிரீமியம் ஸ்டோரி
‘ஜிப்ஸி’ காலனி

- ‘ஜிப்ஸி’ காலனிக்கு விடியல் எப்போது?

“ஸ்டாலின் ஐயாதான் எங்களுக்கு நல்லது பண்ணணும்!” - சென்னை மையத்தில் ஓர் இருண்ட ‘கிராமம்’!

- ‘ஜிப்ஸி’ காலனிக்கு விடியல் எப்போது?

Published:Updated:
 ‘ஜிப்ஸி’ காலனி
பிரீமியம் ஸ்டோரி
‘ஜிப்ஸி’ காலனி

“அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி...” என்ற பாடல் வரிகளை அப்படியே கண்முன் நிறுத்துகிறது கோட்டூர்புரம் ஜிப்ஸி காலனி!

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், ஐஐடி., சென்னை பல்கலைக் கழக வளாகம், பிர்லா கோளரங்கம் இருக்கும் காந்தி மண்டப பிரதான சாலை ஜங்ஷனிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்தக் கோட்டூர்புர ஜிப்ஸி காலனி. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நெருக்கமாக 148 குடும்பங்கள் வசிக்கும் இந்த காலனியில் அடிப்படை வசதி எதுவும் இல்லை என்ற தகவலறிந்து நேரில் சென்றோம்.

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஓர் இருண்ட கிராமம் போல இருக்கிறது அந்த காலனி. பெரியார் அறிவியல் மையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பின் 20 அடி உயர சுற்றுச் சுவர்களுக்கு நடுவே இருந்தது அந்த குடியிருப்பு. ஆனால், பிரதான சாலை யிலிருந்து அங்கே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தெரு முனையில் சென்னை மாநகராட்சியின் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்காக வரையப்பட்ட சுவர் ஓவியத்தைக் கடந்து, காலனிக்குள் நுழைந் தால், முதலில் கண்ணில்பட்டது அலங்கோலமான ஒரு பொதுக் கழிப்பிடம். மொத்த குடியிருப்புக்கும் இந்த ஒரு கழிப்பிடம்தான்! தேர்தல் சமயத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலைக்கு மேல் எந்த அடிப்படை வசதியும் அங்கில்லை. ஒவ்வொரு வீடும் சுமார் 100 சதுர அடிகள்தான் இருக்கும். ஆனால், எந்த வீட்டுக்கும் பாதுகாப்பான மேற்கூரையோ, ஒழுங்கான தரைத்தளமோ இல்லை. கொட்டிக்கிடக்கும் கட்டடக் கழிவுகளே பல வீடுகளுக்குத் தரையாகவும், கிழிந்த கோணிகளே மேற்கூரையாகவும் இருக்கின்றன.

“ஸ்டாலின் ஐயாதான் எங்களுக்கு நல்லது பண்ணணும்!” - சென்னை மையத்தில் ஓர் இருண்ட ‘கிராமம்’!

கொரோனா காலத்தில், வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், இவர்களில் பலர் மின் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார் கள். அபராதத்தையும் செலுத்தாததால், ஓர் ஆண்டுக்கு முன்பாகவே 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பகலிலேயே நடமாடுகின்றன.

குடிநீர் பிரச்னை...

அங்குள்ள மக்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, தாகம் எடுக்க... அங்கிருந்த ஒருவரிடம் தண்ணீர் கேட்டோம். தன் 10 வயதுச் சிறுவனை பக்கத்துத் தெருவுக்கு அனுப்பி, தண்ணீர் கேன் வாங்கி வரச் சொன்னார் அவர். “ஏன் உங்கள் வீட்டில் தண்ணீர் இல்லையா?” என்ற கேட்டபோது, “நாங்க அடிபம்பு தண்ணியத்தான் குடிப்போம். அத நீங்க குடிச்சா, நேரா ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்” என்றார் அவர்.

காலனி தலைவர் மனோகர் நம்மிடம் பேசுகையில், “கிட்டதட்ட 5 தலைமுறையா இங்கதான் இருக்கோம். அடிப்படை வசதி மட்டும் வந்து சேரவே இல்ல. மெட்ரோ வாட்டர் டேங்க் போடச்சொல்லிக் கேட்டோம். பக்கத்து ஏரியாவுக்குத்தான் போட்டாங்க. அங்க எடுக்கப் போனா, திட்றாங்க. அதனால, இங்க இருக்குற அடிபம்பு தண்ணியதான் குடிக்கோம். ஒரு மெட்ரோ வாட்டர் கனெக்‌ஷன், இன்னொரு டாய்லெட், அஞ்சு தெருவுக்கும் லைட்டு, குடியிருக்கிற வீட்டுக்குப் பட்டா இதுதான் எங்க ரொம்ப நாளு கோரிக்கை. பட்டா தர்றதா சொன்னதால்தான் தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டோம். தளபதி ஸ்டாலின் செஞ்சி தருவாருன்னு நம்பிக்கிட்டு இருக்கோம்” என்றார்.

“ஸ்டாலின் ஐயாதான் எங்களுக்கு நல்லது பண்ணணும்!” - சென்னை மையத்தில் ஓர் இருண்ட ‘கிராமம்’!

அந்தப் பகுதியைச் சேர்ந்த விக்ரம், மாதவன் என்ற இரு இளைஞர்களிடம் பேசினோம். “பத்தாவது வரைக்கும் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்சோம். வீட்டுக் கஷ்டத்தால அதுக்கு மேல படிக்க முடியலை. குப்பை பொறுக்கப் போயிட்டோம். எங்களுக்கு 19 வயசு ஆகுது. ஏதாவது செஞ்சு மேல போயிரலாம்னு பார்த்தாலும், எங்க சாதியும், பொருளாதாரமும் அதற்குத் தடையா இருக்குது. எஸ்.டி சான்றிதழ் கிடைச்சா படிக்கிற பிள்ளைகளுக்கு சலுகையும், எங்கள மாதிரி தொழில் பண்ண நினைக்கிறவங்களுக்கு லோனும் கொடுப்பாங்கன்னு சொல்றாங்க. எஸ்.டி சான்றிதழ் கிடைச்சா எப்படியும் முன்னேறி விடுவோம்” என்றனர் நம்பிக்கையுடன்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

கெட்டவார்த்தையில் திட்டுகிறார்கள்...

அந்தப் பகுதியில் வசிக்கும் புஷ்பா, “எங்களுக்கு முதல்ல பாத்ரூம் வசதிதான் வேணும். இருக்குற ஒண்ணையும் கொஞ்ச நேரத்துல பூட்டிடுறாங்க. அதுக்கும்கூட நிம்மதியா போக முடியல. பக்கத்து ஏரியா பசங்க, பாத்ரூம் பக்கத்துலயே குடிச்சுட்டு தாயம், சீட்டு ஆடிக்கிட்டு இருக்காங்க. நாங்க அந்த வழியாப் போகும்போது, ‘ஏ குருவிக் காரி, இங்க பாரு’ன்னு, எங்க முன்னாடியே சிறுநீர் கழிச்சு, அசிங்கமா சைகை காட்டுறாங்க. ‘100 ரூபா தர்றேன் வர்றியா’ன்னு கேவலமாப் பேசுறாங்க. அமைதியாப் போனா, ‘ஏ... அவளுக்கு ஓகே-போல’ன்னும், எதுத்து பேசுனா, ‘குருவிக்காரிக்குப் பவுசப் பாரேன்’னும் பேசுறாங்க. நாங்கள் என்னதான் செய்ய... இந்தச் சாதியில பிறந்தது எங்க தப்பா?” என்றார் கண்ணீர் மல்க.

மனோகர், விக்ரம், மாதவன், புஷ்பா,
மனோகர், விக்ரம், மாதவன், புஷ்பா,

முதல்வரின் கவனத்துக்கு...

இந்த மக்களுக்காகக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி யாற்றிவரும் சமூக சேவகர் எஸ்.பிரபா வாசுகியிடம் பேசினோம். “தற்போது இந்த மக்கள் இருக்கும் இடம் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது. இந்த இடத்தை அண்ணா பல்கலைக்கழகம், குடிசை மாற்று வாரியத்துக்கு 2017-ம் ஆண்டே கொடுத்துவிட்டது. ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்த மக்களுக்கு உடனுக்குடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழக்கம் இல்லாத தால், பலரும் நோய் முற்றி இறந்துபோகிறார்கள். பல குழந்தைகள் மரபணு சார்ந்த நோய்த் தாக்கத்துக்கும் உள்ளாகியிருக் கிறார்கள். இன்னும் 10 ஆண்டுகள் இந்த நிலை நீடித்தால், இந்த இன மக்களே அழிந்து போவார்கள்” என்றார்.

மொத்த பிரச்னையையும் சைதாப் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியனிடம் சொல்லி தீர்வு கேட்டோம். ``அந்தப் பகுதி மக்களோடு ஒன்றோடு ஒன்றாகப் பழகிவருகிறேன். சமீபத்தில்கூட அங்கு நடைபெற்ற திருமணத்தில் நானும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கலந்துகொண்டோம். அந்தப் பகுதியில் சாலை அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள கழிவறையைத் தூய்மையாகப் பராம ரிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.பிரபா வாசுகி
எஸ்.பிரபா வாசுகி

அந்தப் பகுதி மக்கள் அவர்கள் வசிக்கும் இடத்துக்குப் பட்டா கேட்கிறார்கள். பல்கலைக்கழகம், இடத்தை குடிசை மாற்று வாரியத்துக்கு கொடுத்துவிட்டா லும் இன்னும் ‘ப்ராசஸ்’ முழுமையடையவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து உத்தரவு வந்தவுடன் அரசு சார்பில் அவர்களுக்குப் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஜிப்ஸி காலனிக்கு ‘விடியல்’ எப்போது?!