Published:Updated:

“கவுரதையா வாழ்ந்தவ, பிச்சைக்காரி ஆகிட்டேன்!”

வீதிக்கு வந்த முதியோர்
பிரீமியம் ஸ்டோரி
வீதிக்கு வந்த முதியோர்

வீதிக்கு வந்த முதியோர்... கொரோனா செய்த சதியோ...

“கவுரதையா வாழ்ந்தவ, பிச்சைக்காரி ஆகிட்டேன்!”

வீதிக்கு வந்த முதியோர்... கொரோனா செய்த சதியோ...

Published:Updated:
வீதிக்கு வந்த முதியோர்
பிரீமியம் ஸ்டோரி
வீதிக்கு வந்த முதியோர்
கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் மனதை உலுக்கிய நிகழ்வு இது... ஸ்ரீரங்கம் அம்மா மண்டபப் படித்துறைக்கு வந்த வயதான தம்பதியர், தங்கள் நகைகளைக் கழற்றி அங்கிருந்த உண்டியலில் போட்டனர். பிறகு, காவிரி ஆற்றைப் பார்த்து நெக்குருகி வணங்கியவர்கள், விறுவிறுவென ஆற்றில் இறங்கிவிட்டார்கள். தலை முழுகத்தான் அவர்கள் ஆற்றில் இறங்கியிருக்கிறார்கள் என்று அருகிலிருந்தவர்கள் நினைக்க... தம்பதியரோ வாழ்க்கையையே முடித்துக்கொள்ள ஆற்றில் மூழ்கியிருக்கிறார்கள். நிமிடங்கள் கடந்தும் அவர்கள் வெளியே வராததால், பதறிப்போன மக்கள் ஆற்றில் குதித்து, தம்பதியரை மீட்டிருக்கிறார்கள். அதன் பிறகே, அந்தத் தம்பதியர் தங்கள் மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தற்கொலை முயற்சியை நாடியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது ஓர் உதாரணம் மட்டுமே. கொடிய கொரோனா காலகட்டம் பாசங்களையும் நேசங்களையும் அறுத்தெறிந்து, உறவுகளையே வீதியில் தள்ளியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேலைகளையும் வாழ்வாதாரங்களை யும் இழந்து, அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே வழியில்லாத பல குடும்பங்களிலிருந்து வயதான பெற்றோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்... சில இடங்களில் தங்கள் குழந்தைகள் படும் சிரமத்தைப் பார்த்துச் சகிக்க இயலாமல், தாங்களும் அவர்களுக்குச் சுமையாக இருக்க வேண்டாம் என்றெண்ணி தாங்களாகவே வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். இப்படியான கண்ணீர்க் கதைகளில், நமக்குத் தெரிந்தவை சில மட்டுமே. கோயில் படிகளிலும், பேருந்து நிலைய நடைமேடைகளிலும், கடற்கரையிலும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் நமக்குத் தெரியாத கண்ணீர்க் கதைகள் ஏராளம். நெல்லை மாநகரில் அப்படிச் சிலரைச் சந்தித்தோம்...

இரு மகள்கள், ஒரு மகன் எனக் கணவருடன் சுத்தமல்லிப் பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தார் லட்சுமி அம்மாள். கொரோனா பேரலை அவரை மாநகராட்சியின் ஆதரவற்றோர் மையத்தில் முடக்கியிருக்கிறது. ‘‘எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டோம். என் புருஷன் சமையல் வேலை செஞ்சுதான் குடும்பத்தையே கரையேத்தினாரு. புகையும் கரியும் ஒத்துக்காம அவருக்கு நோவு வந்துடுச்சு. அவரோட வைத்தியச் செலவுக்காக வீட்டையும் வித்துட்டோம். ஏழு மாசத்துக்கு முன்னாடி அவரும் செத்துட்டாரு. என் மகன் வீட்டுலதான் தங்கியிருந்தேன். கொத்தனார் வேலை பார்த்திட்டிருந்த வனுக்கு, ஊரடங்கால வேலை இல்லாமப் போயிடுச்சு.

“கவுரதையா வாழ்ந்தவ, பிச்சைக்காரி ஆகிட்டேன்!”

தினமும் அவனுக்கும் அவன் பொஞ்சாதிக்கும் சண்டை. அன்னாட வயித்துப் பொழப்புக்கே காசில்லாத நிலைமையில என்னைவெச்சுதான் சண்டை வருதுன்னு எனக்கும் புரிஞ்சது. அதேசமயம், அவனாலயும் என்னை வெளியே போன்னு நேரடியாச் சொல்ல முடியலை... ஆனா, ஒவ்வொரு தடவையும் சண்டை வர்றப்ப, அவங்க என்னைப் பார்க்குற பார்வை இருக்கே... அப்பல்லாம் செத்துடலாம்னு தோணும் கண்ணு. பையன் வீட்டுலயே இப்படின்னா கட்டிக் கொடுத்துட்ட பொண்ணுங்க வீட்டுல போய் நிக்க முடியுமா? எனக்கு அந்த நெல்லையப்பனைவிட்டா யாரு இருக்கா? அதான் அவன் கோயிலுக்கே போயிட்டேன். அங்கிருந்து புளியம்பட்டி அந்தோணியார் கோயிலு, ஆத்தங்கரை பள்ளி வாசல், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்னு கையேந்தி வயித்தைக் கழுவுனேன். ஒருநாள் ரோட்டுல ஓரமா உட்கார்ந்திருந்தப்ப, என் பேத்தியோட டீச்சர் என்னைப் பார்த்துட்டு அதிர்ச்சியாகிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்கதான் என்னை இங்கே சேர்த்தாங்க...” என்றார் கண்ணீர் வழிய.

வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வெள்ளத்தாய்க்கு நேர்ந்தது இன்னும் கொடுமை... ‘‘எங்களோடது விவசாயக் குடும்பம். விவசாயத்துல சம்பாதிச்சதை வெச்சுதான் ரெண்டு பையன்களுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் செஞ்சுவெச்சோம். வீட்டுக்காரர் இறந்த பிறகு பிள்ளைங் களுக்கு சொத்தையெல்லாம் எழுதி வெச்சுட்டேன். எல்லாத்தையும் வித்துத் தின்னுட்டாங்க. கொரோனா காலத்துல, அவங்க யாருமே என்னை கவனிக்கலை. சரியா சோறுகூட போடலை... அதைக் கேட்டதுக்கு, அடிச்சு, கையைக் காலை உடைச்சு விரட்டிட்டாங்க. ஆறு மாசம் தர்மாஸ்பத்திரியில கிடந்தேன் தம்பி. அப்புறம் இந்த இல்லத்துக்கு வந்துட்டேன். ஒரு காலத்துல கவுரதையா வாழ்ந்தேன். இன்னைக்குப் பிச்சைக்காரி மாதிரி ஆயிட்டேன். என்னிக்கு இந்த உசுரு போய்ச்சேரும்னு தெரியலை...” என்றபடியே கதறியழத் தொடங்கினார்.

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமன் என்ற முதியவர், ‘‘எனக்குக் கல்யாணம் ஆகலை. என் தம்பி குடும்பத்தோட பூர்வீக வீட்டுல இருந்தேன். ஹோட்டல்களுக்கு தண்ணி பிடிச்சுட்டு வந்து சப்ளை செய்வேன். கொரோனாவால வேலை போயிடுச்சு. கூலி வேலை செஞ்சுக் கிட்டிருந்த தம்பிக்கும் வருமானம் இல்லை. அவனோட பிள்ளை குட்டிங் களுக்கே ஒழுங்கா சாப்பாடு கிடைக்கலை... மனசு ரொம்ப உறுத்திச்சு. வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். பசியோட பஸ் ஸ்டாண்ட்ல படுத்துக் கிடந்தப்பதான், இந்த மையத்தைச் சேர்ந்தவங்க என்னை மீட்டு இங்கே சேர்த்தாங்க. இப்ப வயிறார சோறு கிடைக்குறதால நிம்மதியா இருக்கேன்’’ என்றார்.

லட்சுமி அம்மாள் - ராமன் - வெள்ளத்தாய்
லட்சுமி அம்மாள் - ராமன் - வெள்ளத்தாய்

ஒன்றல்ல... இரண்டல்ல... ஆதரவற்றோர் இல்லங்களில் இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன மனதை அறுக்கச் செய்யும் கண்ணீர்க் கதைகள். போரும், நோயும், பேரிடர் களுமான உலக வரலாற்றின் இருளடைந்த பக்கங் களில் அழிக்க முடியாத ஒன்றாக இடம்பிடித்திருக் கிறது கொரோனா நாட்கள். மாட மாளிகையிலிருந்தவர்களையும்கூட வீதியில் தள்ளி வாழ்வும் தாழ்வுமாகப் பந்தாடுகிறது வாழ்க்கை. யாரை நோவதென்று தெரியவில்லை... பெற்ற பிள்ளைகளா, பெற்றெடுத்த பெற்றோரா? உங்களிடம் இருக்கிறதா விடை?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism