Published:Updated:

ஊரடங்கு துயரங்கள்! - சலவை தொழிலாளர்களின் கண்ணீர் கறை!

சலவை தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
சலவை தொழிலாளர்

இன்றைக்கு எங்கள் பிரச்னைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லக்கூட யாருமில்லை. எங்களுக்குத் தமிழக அரசு, உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்

ஊரடங்கு துயரங்கள்! - சலவை தொழிலாளர்களின் கண்ணீர் கறை!

இன்றைக்கு எங்கள் பிரச்னைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லக்கூட யாருமில்லை. எங்களுக்குத் தமிழக அரசு, உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்

Published:Updated:
சலவை தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
சலவை தொழிலாளர்

அடி மேல் அடிவாங்கித் தேய்ந்துகிடக்கும் சலவைக்கல்போல, துயருற்றுக்கிடக்கிறது சலவைத் தொழிலாளிகளின் வாழ்க்கை!

கொரோனா ஊரடங்கு காலத்தில், மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் சலவைத் தொழிலாளர்கள். தங்களின் முக்கிய வாடிக்கையாளர்களான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் துறை ஊழியர்கள், மாணவர்கள் என எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியதால் வேலையின்றி, வருமானமின்றி பரிதவித்தார்கள். இன்னமும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்துதான் வேலை செய்கிறார்கள். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும்கூட, சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு மீளவே இல்லை.

ஊரடங்கு துயரங்கள்! - சலவை தொழிலாளர்களின் கண்ணீர் கறை!

தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்து லட்சம் சலவைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.2,000, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு தவணைகளாக வழங்கப்பட்ட ரூ.4,000 தவிர, சலவைத் தொழிலாளர்களுக்கென தனியாக எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வாழ்வாதாரமற்ற சூழலில், கடன் வாங்கி அன்றாட நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

‘‘ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பெரிதாக வேலை இல்லை. முன்பெல்லாம் தினமும் 200 துணிகள் அயர்ன் செய்ய வரும். இப்போது 50 துணிகள்கூட வருவதில்லை. முன்பு வாஷிங் செய்ய தினமும் 40 துணிகள் வரும். இப்போது ஐந்து துணிகள் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது’’ என்று வேதனையுடன் கூறுகிறார் பெரம்பூரில் சலவையகம் நடத்திவரும் வீரமணி.

ஊரடங்கு துயரங்கள்! - சலவை தொழிலாளர்களின் கண்ணீர் கறை!

சலவைத் தொழிலாளர்களின் உண்மைநிலையை அறிய சென்னை சேத்துப்பட்டு, பட்டாளம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள ‘டோபி கானா’ எனப்படும் சலவைப் பணிமனைகளுக்குச் சென்றோம்...

பட்டாளம் சலவைப் பணிமனை வெறிச்சோடிக் கிடந்தது. அங்கு வேலை செய்துகொண்டிருந்த சில தொழிலாளர்களிடம் பேசினோம். ‘‘பட்டாளம் டோபி கானாவுல 120 குடும்பங்கள் இருக்கோம். காலைல நாலு மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்குவோம். அத்தனை கல்லுலயும் ஆள் இருக்கும். சாயங்காலம் வரைக்கும் அவ்வளவு பிஸியா இருப்போம். இப்ப பாருங்க... மொத்தமா காலியாகக் கிடக்குது. யாருக்கும் வேலையே இல்லை’’ என்று விரக்தியாகப் பேசினார் ஒரு பெண் தொழிலாளி.

பட்டாளம் சலவைப் பணிமனை சங்க நிர்வாகியான கிருஷ்ணன், ‘‘லாட்ஜ், ஹோட்டல், திருமண மண்டபங்கள்லருந்துதான் பெரும்பாலும் துணிகள் வரும். கொரோனாவால லாட்ஜ், ஹோட்டல்களை மொத்தமா மூடிட்டாங்க. திருமண மண்டபங்கள்ல நிகழ்ச்சிகள் குறைஞ்சுட்டதால, அங்கிருந்தும் வேலை வர்றதில்லை. லாண்டரிக் கடைகள்லருந்து அப்பப்போ துணிகளைக் கொண்டு வந்து தருவாங்க. ஆனா, போன வருஷம் ஏழு மாசமா லாண்டரிகள் மூடியே கிடந்துச்சு. அதனால, அங்கேயிருந்தும் எங்களுக்கு வேலை வரலை. ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால நிரம்பி வழிஞ்சும்கூட, அங்கிருந்தும் எங்களுக்கு வேலை வர்றதில்லை. ஏன்னா... ஆஸ்பத்திரிகள்ல சொந்தமாக வாஷிங் மெஷின்களைப் போட்டு ஃபேக்டரி மாதிரி நடத்துறாங்க. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கத்துக்கிட்டருந்து எந்த உதவியும் கிடைக்கலை. எங்க நிலைமையைக் கருத்துல எடுத்து, சலவைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்கணும்’’ என்றார்.

ஊரடங்கு துயரங்கள்! - சலவை தொழிலாளர்களின் கண்ணீர் கறை!

கொரோனா பாதிப்பைவிட, கார்ப்பரேட் வருகை தங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் சலவைத் தொழிலாளர்கள் கவலையுடன் சொல்கிறார்கள். சேத்துப்பட்டு சலவைப் பணிமனையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி ரமேஷ், ‘‘ஒருபுறம் கொரோனா, இன்னொரு புறம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை என ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறோம். எங்களுக்கு வந்துகொண்டிருந்த மருத்துவமனை ஆர்டர்களையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துவிட்டன. நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். திடீரென எங்கள் தொழிலில் இறங்கி, ‘மாசு கட்டுப்பாடு வாரியச் சான்றிதழ் வைத்திருக்கிறோம்’, ‘கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை வைத்திருக்கிறோம்’ என்றெல்லாம் சொல்லி, எங்களுக்கு வரவேண்டிய ஆர்டர்களை அபகரித்து, எங்கள் வாழ்வாதாரத்தைக் காலி செய்கிறார்கள். தமிழக அரசு இதில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்’’ என்றார்.

சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். ஆனாலும், கிடைத்த வேலைகளைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். பட்டதாரிகளில் பலர், சலவைத் தொழிலையே தொடர்கிறார்கள். சலவைத் தொழிலாளர்களுக்கு எனத் தனி நல வாரியம் கிடையாது. உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில்தான் இவர்களும் இருக்கிறார்கள். நல வாரியம் குறித்த விழிப்புணர்வும் இவர்களில் பெரும்பான்மையோருக்கு இல்லை. அதனால், பெரும்பாலான சலவைத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை.

ஊரடங்கு துயரங்கள்! - சலவை தொழிலாளர்களின் கண்ணீர் கறை!

சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், ‘‘ஒருகாலத்தில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சி.ஆர்.கோலப்பா எம்.எல்.சி-யாக இருந்தார். மாநில அளவில் சங்கம் நடத்திய ஜானகிராமன், எத்திராஜு ஆகியோர் எங்கள் பிரச்னைகளை எழுதுவதற்காகப் பத்திரிகை நடத்தினார்கள். ஆனால், இன்றைக்கு எங்கள் பிரச்னைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லக்கூட யாருமில்லை. எங்களுக்குத் தமிழக அரசு, உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அரசுப்பணியில் எங்கள் சமூகத்துக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றார். அவரின் கண்களில் வெளிப்பட்ட எதிர்காலத்துக்கான ஏக்கமும், வாழ்வின் நெருக்கடியில் உருவாகியிருக்கும் கோபமும் நமக்கு நன்றாகப் புரிந்தது.

சலவைத் தொழிலாளர்களின் கண்ணீர்க் கறையைத் துடைக்குமா, நீக்குமா தமிழக அரசு?