Published:Updated:

பாத்திரம் கழுவுவது முதல் பாலியல் வன்கொடுமை வரை... ஆர்டர்லி காவலர்களின் கண்ணீர் கதை

ஆர்டர்லி காவலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்டர்லி காவலர்கள்

‘மென்சஸ்’ என்று சொன்ன பிறகும் அந்தக் காவலரை சோதித்திருக்கிறார்.

பாத்திரம் கழுவுவது முதல் பாலியல் வன்கொடுமை வரை... ஆர்டர்லி காவலர்களின் கண்ணீர் கதை

‘மென்சஸ்’ என்று சொன்ன பிறகும் அந்தக் காவலரை சோதித்திருக்கிறார்.

Published:Updated:
ஆர்டர்லி காவலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்டர்லி காவலர்கள்

‘‘காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்... அதிகாரிகளின் வீட்டு வேலைகளைச் செய்வதற்கா..?’’ என்று ஆர்டர்லி முறையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

தன் வீட்டு வேலைகளைச் செய்ய, துறை சார்ந்த நபர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ‘ஆர்டர்லி முறை’ ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து அதிகார வர்க்கத்தின் வழக்கம். இன்றைக்கும் காவல்துறையில் இந்த ‘ஆர்டர்லி’ முறை மிகக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கே நடைபெறும் கொடுமைகளை வெளியுலகத்துக்குச் சொல்ல முடியாமல் மனம் புழுங்கிக்கொண்டிருக்கும் காவலர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினோம்...

சென்னையில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் நம்மிடம் பேசியபோது, ‘‘ஆயிரம் கனவுகளோடு போலீஸ் வேலைக்கு வந்தேன் சார். ஆனால், டிரெயினிங் முடிந்ததும் ஐ.பி.எஸ் ஆபீஸர் ஒருவரின் வீட்டுக்கு, ‘ஆர்டர்லி’யாக அனுப்பிட்டாங்க... அங்கு எனக்கு நடந்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது’’ என விம்மியவர், அதிரவைக்கும் அந்தச் சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

பாத்திரம் கழுவுவது முதல் பாலியல் வன்கொடுமை வரை... ஆர்டர்லி காவலர்களின் கண்ணீர் கதை

``குற்றவாளிகளை எப்படிப் பிடிக்கணும், கேஸ்களை எப்படி விசாரிக்கணும், துப்பாக்கியை எப்படி கையாளணும் என்றெல்லாம் டிரெயினிங்கில் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால், ஸ்டேஷன்ல ஒரு மாசம்தான் வேலை பார்த்தேன். திடீரென ஒருநாள், இன்ஸ்பெக்டர் என்னைக் கூப்பிட்டு, ‘உனக்கு நாளையிலிருந்து ஐயா வீட்ல வேலை, ஏட்டய்யாகிட்ட விவரம் சொல்லியிருக்கேன் கேட்டுக்க...’ என்றார்.

அடுத்த நாள், ஈ.சி.ஆரில் இருக்கும் அந்தப் ‘பிரகாச’ ஐயாவின் சொந்த பங்களாவில் எச்சில் பாத்திரங்களைக் கழுவும் வேலைக்கு அனுப்பு னாங்க. ஏற்கெனவே அந்த வேலையை 10 வருஷமாக செய்துகொண்டிருந்த, ஏட்டம்மாவை ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டு, ‘ஃபிரஷெரான’ என்னை அந்த வேலைக்குப் போட்டாங்க. ஒருநாள் ஐயா படுக்கையறையில் இருந்தபடி, டீ கொண்டுவரச் சொன்னார். உள்ளே சென்றபோது, அவருடைய பார்வை வழக்கத்துக்கு மாறாக இருந்தது. ‘உனக்கு மேரேஜாகிட்டா...’ என்று கேட்டபடியே கையைப் பிடிச்சாரு. நான் தட்டி விட்டதும், கன்னத்துல ஓங்கி அடிச்சுட்டாரு. ‘உனக்கு யார் டிரெயினிங் கொடுத்தது...’ என்று கோபமாகக் கேட்டபடி மீண்டும் கையைப் பிடிச்சாரு. மறுபடியும் தட்டிவிட்டுட்டு அழுதபடியே நான் என் அறைக்கு வந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் போன் வந்தது. ‘உன்னை ஐயா சஸ்பெண்ட் செஞ்சுட்டாரு. நாளைக்கு ஆபீஸ்ல போய்ப் பாரு’ன்னு சொன்னாங்க.

என்னோட விஷயம் அரசல் புரசலாக மற்ற பெண் போலீஸாருக்கும் தெரியவர... ஒரு சிலர், என்னைத் தனியா அழைச்சு, ‘இதெல்லாம் தப்பில்லை. இங்க சகஜம்தான்’ என்று அட்வைஸ் செஞ்சாங்க. குடும்பச் சூழல், வேலை எனப் பல காரணங்களால், நானும் ஆபீஸரோட விருப்பப்படி நடந்துக்கிட்டேன். அவரு, டிரான்ஸ்ஃபராகி டெல்லிக்குப் போனதும் வேறு ஆபீஸர் வீட்டுக்கு ஆர்டர்லியாக அனுப்பிட்டாங்க. என் இருபது வருட சர்வீஸ்ல முதல் ஆறு வருஷம் ஆர்டர்லியாகவே கழிஞ்சுடுச்சு. இப்பதான் நிம்மதியா வேலை பார்க்குறேன்” என்றார் வேதனை கலந்த குரலில்.

இன்னொரு பெண் காவலரின் கண்ணீர்க் கதையை அச்சிலேயே ஏற்ற முடியாது. போதையிலிருந்த ஓர் பந்தா அதிகாரி, ‘மென்சஸ்’ என்று சொன்ன பிறகும் அந்தக் காவலரை சோதித்திருக்கிறார்.

ஆர்டர்லியாகப் பணியாற்றும் ஆண் காவலர் ஒருவர் நம்மிடம், ``ஃபர்ஸ்ட் டூட்டியே ஆபீஸர் வீட்டு நாயைக் குளிப்பாட்டுறதுதான். ஆபீஸரைவிட அவர்கள் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு ஜோக்கர் மாதிரி நடத்துனாங்க. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருந்தேன். பொறுக்க முடியாமல் ஒருநாள் எதிர்த்து பேசிவிட்டதால், அங்கிருந்து ஆயுதப்படைக்கு மாத்திட்டாங்க” என்றார்.

இந்தப் பிரச்னை குறித்துப் பேசுகிற வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர், ``The Police Forces (Restriction of Rights) Act - 1966 சட்டப்படி போலீஸார் யூனியன் அமைக்கக் கூடாது. கட்சி, பொது அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது போன்ற தடைகள் இருக்கின்றன. இந்தத் தடை காரணமாகத்தான் ஆர்டர்லி காவலர்கள், தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஆர்டர்லியாக இருக்கிறார்கள். முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வீட்டில், ஆர்டர்லி காவலர்கள் பணியாற்றியது தொடர்பாக நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ஆர்டர்லி காவலர்களைக் காவல் நிலையப் பணிக்குத் திரும்ப’ உத்தரவிட்டது நீதிமன்றம். தேசிய காவல் ஆணையம், 1979-ல் வெளியிட்ட முதல் ரிப்போர்ட்டில் (Chapter 4 -ல்) ஆர்டர்லி நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. போலீஸ் கமிஷனின் அந்தப் பரிந்துரையைப் பின்பற்றினாலே இந்தக் கொடுமைக்கு ஒரு விடியல் கிடைத்துவிடும்” என்றார்.

அலெக்ஸிஸ் சுதாகர்
அலெக்ஸிஸ் சுதாகர்

காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் மட்டுமல்லாமல், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் ஆர்டர்லி முறை ‘செக்யூரிட்டி’ என்ற பெயரில் நடைமுறையில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்தும் சக ஊழியர்களை அடிமைபோல் நடத்தும் அதிகாரிகள் திருந்தவில்லை.