Published:Updated:

திருடுவதற்குப் பயிற்சி... டார்கெட்டைக் கடந்தால் இன்சென்டிவ்...

உமாபதி, விநாயகம், சரவணன், நரேஷ், உமர் பாருக்
பிரீமியம் ஸ்டோரி
உமாபதி, விநாயகம், சரவணன், நரேஷ், உமர் பாருக்

சென்னையில் சிக்கிய செல்போன் திருடர்கள்!

திருடுவதற்குப் பயிற்சி... டார்கெட்டைக் கடந்தால் இன்சென்டிவ்...

சென்னையில் சிக்கிய செல்போன் திருடர்கள்!

Published:Updated:
உமாபதி, விநாயகம், சரவணன், நரேஷ், உமர் பாருக்
பிரீமியம் ஸ்டோரி
உமாபதி, விநாயகம், சரவணன், நரேஷ், உமர் பாருக்

அரசுத் தேர்வுக்கு கோச்சிங் கொடுப்பதைப்போல செல்போன் திருட கோச்சிங் கொடுத்திருக்கிறான் சென்னையைச் சேர்ந்த பிரபல வழிப்பறித் திருடன் உமாபதி. இவனிடம் சேர்ந்து, திருடத் தேர்வாகிவிட்டால் முறையான சம்பளம், ஞாயிறு விடுமுறை, டார்கெட்டைத் தாண்டினால் ஊக்கத்தொகை என்று அசால்ட் காட்டியிருக்கிறான். போலீஸாரே இந்தப் பின்னணிகளைக் கேட்டு “யார்ரா நீ!” என்று அதிர்ந்துபோயிருக்கின்றனர்!

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு, சென்னையில் செல்போன்கள் திருட்டுச் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்தன. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையங்களில் புகார்கள் வந்து குவிந்தன. செல்போன் திருடர்களைப் பிடிக்க, கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டதையடுத்து வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், துணை கமிஷனர் கார்த்திகேயனின் தனிப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் சரவணகுமார், பிரதீப், ராஜேஷ், சந்திரன், மகேந்திரன் ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

உமாபதி, விநாயகம், சரவணன், நரேஷ், உமர் பாருக்
உமாபதி, விநாயகம், சரவணன், நரேஷ், உமர் பாருக்

அரசுப் பேருந்தைப் பின்தொடரும் ஆட்டோ!

தனிப்படை போலீஸார், முதலில் திருடப்பட்ட செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்கள் அடிப்படையில் ஆய்வுசெய்தனர். அதன் மூலம் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பிறகு புகார்தாரர்களிடம், திருட்டுப்போனது குறித்து விசாரித்தபோது, பெரும்பாலும் பயணத்தின்போது, அதுவும் அரசுப் பேருந்துகளில் செல்லும்போதே செல்போன் திருடப்பட்டிருப்பதை அறிந்தனர். பிறகுதான் இந்த வழக்கு வேகம் பிடித்தது. எப்படி அவர்களைப் பிடித்தனர் என்பதை, தனிப்படை போலீஸார் நம்மிடம் விரிவாக விவரித்தனர்.

“அரசுப் பேருந்துகளில்தான் கைவரிசை காட்டுகிறார்கள் என்பதை அறிந்ததும், எங்கள் குழுவைச் சேர்ந்த சிலர் பயணிகளைப்போலப் பல்வேறு தடங்களில் பயணித்தோம். இன்னொரு குழு சென்னையில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் இடங்களில் சிலரைப் பிடித்து விசாரித்தது. விசாரணையில், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 33 வயதாகும் உமாபதி என்பவன்தான் திருட்டுக் கும்பலுக்குத் தலைவன் என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக உமாபதியையும் அவனின் கூட்டாளிகளையும் பிடிக்கத் திட்டமிட்டோம்.

ஆனால், அவன் திருடும் ஸ்டைலை முழுமையாக அறிய, அவனை ரகசியமாகக் கண்காணித்தோம். கடந்த வாரத்தில் ஒருநாள், சென்னை பிராட்வே, பாரிமுனை ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் தன்னுடைய கூட்டாளிகளான விநாயகம் (45), நரேஷ் (20) ஆகியோருடன் உமாபதி அரசுப் பேருந்தில் ஏறினான். அவர்கள் ஏறிய அரசுப் பேருந்தைப் பின்தொடர்ந்து ஆட்டோ ஒன்றும் சென்றது. அந்த ஆட்டோவை இரண்டு பைக், ஒரு காரில் தனிப்படை போலீஸ் சரவணக்குமார் தலைமையில் ஒரு டீம் பின்தொடர்ந்தது.

திருடுவதற்குப் பயிற்சி... டார்கெட்டைக் கடந்தால் இன்சென்டிவ்...

ஆறு மாதங்களில் ஆயிரம் செல்போன்கள்!

உமாபதியின் கூட்டாளிகளில் ஒருவன், ஓடும் பேருந்திலிருந்து திடீரென்று கீழே இறங்கி ஆட்டோவில் ஏறினான். பின்னர் ஒவ்வொருவராக பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோவில் வீடுகளுக்குத் திரும்பினார்கள். வீட்டையும் அடையாளம் கண்டுகொண்டோம். சில மணி நேரத்தில் உமாபதி, விநாயகம், நரேஷ், ஆட்டோ டிரைவர் சரவணன் அனைவரையும் மடக்கிப்பிடித்தோம். உமாபதியைக் கைதுசெய்து 108 செல்போன்களைப் பறிமுதல் செய்தோம். அப்போது, உமாபதியின் செல்போன் நம்பருக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உமர் பாரூக், “வாட்ஸ்அப்ல போன் மாடலெல்லாம் பார்த்துட்டேன். எதுக்கு, எவ்ளோ ரேட்டுனு அனுப்பியிருக்கேன். கேஷ் ரெடி. எப்போ போன் கைக்குக் கிடைக்கும்?” என்று எதிர்முனையில் பேசினான். உமர் பாரூக்கிடம் உமாபதியை பேசச் செய்து வரச்சொல்லி, அவனையும் கைதுசெய்தோம். உமாபதியிடம் விசாரித்தபோது, கடந்த ஆறு மாதங்களில் ஆயிரக்கணக்கான செல்போன்களைத் திருடி, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. கடந்த 2018-ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக உமாபதி, சரவணன், நரேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு, கொரோனாவால் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் உமாபதி, பெயின்ட்டிங் வேலைக்குச் சென்றிருக்கிறான். மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட பிறகு, தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து செல்போன் திருட்டைத் தொடர்ந்திருக்கிறான்.

திருடுவதற்குப் பயிற்சி... டார்கெட்டைக் கடந்தால் இன்சென்டிவ்...

திருட்டுப் பயிற்சி... சிறப்பு ரூல்ஸ்!

உமாபதியின் திருட்டு ஸ்டைல் தனி ரகம். ஒரு குறிப்பிட்ட பிராண்டின் செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்களை எளிதாக மாற்றிவிடலாம். எனவே, அந்த பிராண்ட் செல்போன்களைக் குறிவைத்தே திருடி வந்திருக்கிறது இந்த டீம். காலை 7 மணி முதல் 10 மணி வரை என மக்கள் கூட்டமாகப் பயணிக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே இந்தக் கும்பல் திருட்டில் ஈடுபடும். பெண்கள் சென்சிட்டிவானவர்கள் என்பதால், ஆண் பயணிகளை மட்டுமே குறிவைத்துத் திருடுவார்கள். இப்படி சிறப்பு ரூல்ஸ்களோடு, செல்போன்களை எப்படித் திருடுவது என உமாபதி, தன்னுடைய கூட்டாளிகளுக்கு ‘சூது கவ்வும்’ ஸ்டைலில் பயிற்சியளிப்பது வழக்கம். பஸ் ஸ்டாண்டில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போதே போன் மாடலை கவனிக்க வேண்டும். பிறகு, இரண்டு பேர் பார்ட்டியின் பக்கம் நெருக்கமாக நிற்க வேண்டும். செல்போனை எடுத்ததும், படியில் நிற்கும் ஆளிடம் உடனே கொடுக்க வேண்டும். அவன் இறங்கி, பின்னால் வரும் ஆட்டோவில் ஏறித் தப்பிக்க வேண்டும். இதற்கு அவனது ஆட்களையே பயணி மாதிரி ஏறவைத்து - திருடவைத்து டிரெய்னிங் கொடுத்திருக்கிறான். ஒரு பேருந்தில் ஒரு செல்போன்தான் திருட வேண்டும். காலை 7 முதல் 10 என மூன்று மணி நேரம் மட்டுமே வேலை. அதன் பிறகு சாதாரணமாக நடமாட வேண்டும். யாரிடமும் இந்தத் திருட்டுத் தொழிலைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. வேறு திருட்டுகளில் ஈடுபடக் கூடாது. ஒருநாள் 10 போன்கள் டார்கெட். டார்கெட்டைத் தாண்டினால், ஊக்கத்தொகை. இப்படி, கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் ஸ்டைலில் நடந்திருக்கிறது திருட்டு. தினமும் 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை திருட்டு செல்போன்கள் மூலம் சம்பாதித்த உமாபதி, வடசென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களோடு சந்தோஷமாக இருந்திருக்கிறான்” என்றனர்.

திருடுவதற்குப் பயிற்சி... டார்கெட்டைக் கடந்தால் இன்சென்டிவ்...

நான்கு வருடங்களுக்கு முன்பு அண்ணாசாலை காவல் நிலையத்தில் குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்டவனை, தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தாலே இந்தத் திருட்டுகளைத் தவிர்த்திருக்க முடியுமே! தவிரவும், ஒரு உமாபதி மட்டும்தான் இதில் குற்றவாளியா... மற்றவர்களை எப்போது நெருங்கப்போகிறது போலீஸ்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism