22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மாற்றத்தை நாமே தொடங்க வேண்டும்!

Namitha Ammu
பிரீமியம் ஸ்டோரி
News
Namitha Ammu

வழிகாட்டி

`` `திருநங்கையெல்லாம் மாடலிங் பண்ண வர்றீங்களா'ன்னு நிறைய பேர் சிரிச்சு அவமானப்படுத்தியிருக்காங்க. என்னை நிராகரிச்சவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். இன்னிக்கு வெற்றியாளராக நிற்கிறேன்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் திருநங்கை நமீதா அம்மு.

முத்திரக்கனி இயக்கும் நாடோடிகள்-2 படத்தில் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகப் பதவியேற்ற பிரித்திகா யாசினியின் ரோலில் நடிக்கிறார். அந்தப் படத்தில் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த `மிஸ் டிரான்ஸ் இந்தியா' என்ற பட்டத்தைத் தொடர்ந்து ஸ்பெயினில் நடைபெற உள்ள `மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல்' பிரிவுக்குத் தேர்வாகி சர்வதேச அளவில் தடம் பதித்துக்கொண்டிருக்கிறார் நமீதா அம்மு.

``சொந்த ஊர் சென்னை. மற்ற திருநங்கைகளுக்கு முன்மாதிரியா இருக்கணும்கிறது என் ஆசை. அதனால் மாடலிங் துறையைத் தேர்வு செய்தேன். 120 கிலோவில் இருந்து 60 கிலோவாக எடையை குறைச்சேன். கிடைத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன். நான் சம்பாதித்த பணத்தைச் சேமிச்சு ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறினேன். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டிலும் ஏத்துக் கிட்டாங்க.

நமீதா அம்மு
நமீதா அம்மு

மிஸ் கூவாகம்தான் என் முதல் வெற்றி. அதை வெளிச்சமாக வெச்சுகிட்டு மாடலிங் வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். சில இடங்களில் என் தோற்றத்தைப் பார்த்துட்டு பொண்ணுன்னு நினைச்சு வாய்ப்பு தருவதாகச் சொல்லுவாங்க. திருநங்கைன்னு சொன்னதும் வெளியே அனுப்பிடுவாங்க. ஆனால், என் விடாமுயற்சியால், திருநங்கைகளுக்கான மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா பட்டங்களை ஜெயிச்சேன். அதன் மூலமாக திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டிகளில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஒரு திருநங்கை, உலக அழகிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கேன்.

என் புகைப்படத்தைப் பார்த்துட்டு சமுத்திரக்கனி சார் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. ஒரு தைரியமான திருநங்கையாக நடிச்சிருப்பதோட, உணர்ச்சிமிக்க ஒரு பாட்டும் பாடியிருக்கேன். அந்தப் படம் நிச்சயம் எனக்கான அடையாளமாக இருக்கும்” என்கிற நமீதாவின் எதிர்காலத் திட்டம் என்ன?

``இப்போ நிறைய ஃபேஷன் ஷோக்களுக்கு `ஷோ ஸ்டாப்பராக போயிட்டிருக்கேன். மாடலிங்கிலும் பிஸி. திருநங்கைகளுக்கான ஒரு மாடலிங் ஸ்கூல் ஆரம்பிச்சு, அவங்களுக்கு வழிகாட்டணும்கிறது தான் அடுத்த திட்டம்.

சில வருஷங்களுக்கு முன் சமுதாயத்துக்குப் பயந்து படிப்பை பாதியில் விட்டேன். இன்னிக்கு படிப்பைத் தொடர முடியாத நிறைய திருநங்கைகள் படிக்க உதவி பண்ணிட்டிருக்கேன். என்னை மாதிரி எல்லா திருநங்கைகளும் தங்களின் அடையாளத் துக்காக உழைக்கத் தயாரா இருக்காங்க. வாய்ப்பு தரத்தான் நாம தயாராக இல்லை. மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவோமே!” என்கிறார் நமீதா அம்மு.