Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!

கூடங்குளம் அணு உலை பகுதியில் நில அதிர்வு
கூடங்குளம் அணு உலை பகுதியில் நில அதிர்வு

கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனால் மக்கள் அச்சத்துடன் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கூடங்குளம் பகுதியில், தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. அதே பகுதியில் மேலும் இரு அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.

Vikatan

அத்துடன், மகேந்திரகிரி மலையடிவாரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ உந்தும வளாகம் செயல்பட்டுவருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைக்கொண்ட பகுதியில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மதியம் 3:30 மணிக்கு லேசான நில அதிர்வை உணர்ந்திருக்கின்றனர். அதனால் அச்சத்துடன் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்து ஒருவருக்கொருவர் இது பற்றி விசாரித்துக்கொண்டனர். அணு உலையில் பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ள அணு விஜய் பகுதியிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

கெபிஸ்டன்
கெபிஸ்டன்

இது குறித்து இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த கெபிஸ்டன் கூறுகையில், ``மதியம் வீட்டில் இருந்தபோது திடீரென சிறிய அதிர்வை உணர முடிந்தது. சில விஎச்ச்டிகளுக்கு மட்டுமே அதிர்வு இருந்தது. உடனே வெளியே வந்துவிட்டோம்.

வீடுகளிலிருந்து பலரும் அச்சத்துடன் வெளியே ஓடிவந்தார்கள். அணு உலை இருக்கும் இடத்துக்கு அருகில் இந்த அதிர்வு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்களுக்குக் கூடுதல் அச்சம் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

அணு உலை அமைந்துள்ள கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் ஏற்கெனவே நிலத்தியல் ஆய்வுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அணு உலைகளை எதிர்த்துப் போராடிய காலத்தில், அவர்கள் தெரிவித்த கருத்துகளை உண்மையாக்கும் வகையில், தற்போது அங்கு நில அதிர்வு ஏற்பட்டிருப்பது, கூடங்குளத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு