Published:Updated:

வேர்களைப் பிடுங்காதீர்!

வேர்களைப் பிடுங்காதீர்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேர்களைப் பிடுங்காதீர்!

ஜூ.வி 2020

பழங்குடியினர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் ச.தனராஜ்

ன ஆதாரங்களை மட்டுமே சார்ந்து நுகர்வு கலாசாரமின்றி எளிமையாக வாழும் பழங்குடிகளின் வாழ்வை மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது உலகமயமாக்கல். பொருளாதாரக் கோட்பாடுகள் எங்கெல்லாம் இயற்கை வளங்களைச் சூறையாடி, வியாபாரப் பண்டமாக்கி வருகின்றனவோ, அங்கெல்லாம் பூர்வகுடிகளின் நம்பிக்கைகள், வாழ்வியல் கூறுகள் முற்றாகச் சிதைக்கப்படுகின்றன. பழங்குடிகள் சந்தைக்காக உற்பத்தி செய்யாமல் சுயச்சார்புதன்மையுடன் இயற்கையைப் பாதுகாக்க நினைக்கிறார்கள், அதற்காகப் போராடுகிறார்கள். ஆனால், உலகமயத்தைத் தாங்கிப்பிடிக்கும் அரசுகள், நலத்திட்டங்கள் என்ற பெயரில் இந்த மண்ணின் மூத்தகுடிகளைக் கையேந்துவோராகவே வைத்திருக்க நினைக்கின்றன!

இந்தியாவில் 14 கோடி மக்கள் பட்டியல் பழங்குடி யினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள், சுமார் ஒன்பது லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் 70 சதவிகிதத்தினர் வனத்தைச் சார்ந்து வாழ்கிறார்கள். தேசிய அளவில் பழங்குடியினருக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் தமிழகத்தில் இல்லை. வனம் மற்றும் சமவெளிகளில் வாழும் பூர்வகுடிகளுக்கு பாரம்பர்ய உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்விடங்களிலிருந்து துரத்தப்படுகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தங்களுக்கென்று சுய ஆளுகையும், நிர்வாகமும், ஒழுங்கமைவும் வடிவமைத்து வாழ்ந்த பழங்குடிகள், இன்று அரசின் உதவித் திட்டங்களை மட்டும் நம்பி வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பழங்குடிகளின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அட்டவணைப் பகுதி 5-ல் இணைக்கப்படாமல் தனித்துவிடப்பட்டது பழங்குடியினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பழங்குடியினர் ஒன்றிய அளவில் வாழ்ந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் பரவலாக வாழும் பழங்குடியினருக்குப் பெரிய பயன்கள் எதுவும் இல்லை. எண்ணிக்கையில் சொற்பமாக வாழ்வோர் என்ற அற்ப காரணத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறார்கள்.

வேர்களைப் பிடுங்காதீர்!
வேர்களைப் பிடுங்காதீர்!

பாரம்பர்ய நிலம் அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல... கண்ணியம், கலாசாரம், பாரம்பர்ய வாழ்வு ஆகியவற்றையும் நிலமே உறுதிசெய்கிறது. அந்தப் பாரம்பர்ய நிலத்தை உறுதிப்படுத்தத்தான் வன நில அங்கீகாரச் சட்டம் 2006-ஐ அதன், உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். அதன்மூலம் கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்தப் பழங்குடி சமுதாய மக்களும் வேட்டையாடுதல், மரம் வெட்டுவதைத் தவிர அனைத்து வகையான உரிமைகளையும் பெற இயலும். பழங்குடி மக்களுக்குப் பட்டாவை சட்டபூர்வமாக வழங்குவதைத் தவிர்ப்பதற்காகவே பாதுகாக்கப்பட்ட வனச் சரணாலங்கள், வன உயிரினக் காப்பகங்கள் அறிவிக்கப்படுகின்றன. இவை எல்லாம் சம்பந்தப்பட்ட கிராம சபையின் ஒப்புதல் இல்லாமல் முறையற்ற வகையில் மாற்றப்படு கின்றன. இதன் நீட்சியாக வளர்ச்சிப் பணி, வன உயிர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதிச் சான்றிதழ் பெறுவதிலும் உள்ள சிக்கல் இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு, இன்னும் தொடரவே செய்கிறது. பழங்குடியினர் பட்டியலில் இல்லாதோர் ‘பழங்குடியினர் சான்றிதழ்’ பெற்று, இட ஒதுக்கீடு உரிமைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், உண்மையான பழங்குடி இனக்குழுக்கள் அரசின் பழங்குடியின ருக்கான பட்டியலில் இடம்பெறாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பழங்குடி பட்டியல் மறு ஆய்வுக்கு உட்படுத்தி பழங்குடி அல்லாதோரைப் பட்டியலிலிருந்து நீக்கி, தகுதியுள்ள, அங்கீகாரம் பெற இயலாமல் தவிக்கும் பழங்குடி இனக் குழுக்களைப் பழங்குடி பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும். மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய காடர், பளியர், முதுவர், மலை மலசர் உள்ளிட்ட பிற இனங்களைச் சேர்த்திட வேண்டும்.

வேர்களைப் பிடுங்காதீர்!
வேர்களைப் பிடுங்காதீர்!

பழங்குடியினருக்கான தொடக்கக்கல்வி அவர்களது தாய்மொழியில் வடிவமைக்கப்பட வேண்டும். அந்தக்கல்வி அவர்கள் வாழ்வியல் சார்ந்தும், வனம் சார்ந்தும் வடிவமைக்கப்பட வேண்டும். பழங்குடிகளுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வனத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பழங்குடிகளின் மனித வள ஆற்றலை காடு வளர்ப்பு திட்டங்களுக்கும் பல்லுயிர்ப் பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

தமிழக வனப்பகுதியில் பழங்குடிகள் சேகரிக்கும் தேன், மூலிகை, கிழங்கு, மரப்பட்டைகள், மஞ்சள், நெல்லிக்காய், கடுக்காய், நன்னாரி, குங்கிலியம் போன்ற சிறு வன மகசூல் பொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை இருந்தும், இடைத்தரகர் மூலமாகச் சொற்பமான விலைக்கே விற்பனை செய்கிறார்கள். இந்தப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப் பழங்குடியினர் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி, தொடர் பயிற்சியும் உதவியும் அளிக்க வேண்டும்.

வனத்துறையில் 50 சதவிகித காலியிடங்களைப் பழங்குடியினருக்கு அளிக்க வேண்டும். விவசாயம், வனவியல் கல்வி பெறும் மாணவர்கள் தங்களுடைய துறைகளில் 100 சதவிகித இட ஒதுக்கீடு தங்களுக்கே என வலியுறுத்தும்போது... வனத்திலேயே பிறந்து, வளர்ந்து காடுகள் குறித்து அறிவும், புரிந்துணர்வும் அதற்கு ஏற்ற உடல் வலிமையும் உள்ள பழங்குடியினருக்கே இதை ஏன் வழங்கக் கூடாது?

விலையில்லா மிக்ஸி, ஆடு, மாடு, வங்கிக்கணக்கில் முதியோர் ஓய்வுத்தொகை போன்ற திட்டங்கள் வனப்பகுதிக்கு ஏற்புடையது அல்ல. பழங்குடி கிராமத்துக்கான திட்டங்களை உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடி, செயல்படுத்த வேண்டும். பல பழங்குடி கிராமங்கள் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வருகின்றன. அதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு உதவிகள் மறுக்கப்படுகின்றன. இதைப் போன்ற முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளாவில் பழங்குடி மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தன்னார்வலர்கள் மாநில அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பண்டைய பழங்குடியினர் எனப்படும் தொல்குடியாக (PVTG) இருப்பின் எட்டாம் வகுப்பும், பிற வகை பழங்குடியாக இருப்பின் பத்தாம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். இவர்கள் பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளின் கல்வி, அங்கன்வாடி உள்ளிட்ட அரசு அமைப்புகள் செயல்படுவது குறித்து விளக்குகிறார்கள். மேலும், உள்ளூர் கிராமசபை மற்றும் அரசின் நல உதவி திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியலைத் தயாரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறார்கள். இப்படி சுமார் 14 ஆயிரம் பழங்குடி இளைஞர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கேரளாவைவிட எண்ணிக்கை யிலும் பரப்பளவிலும் அதிக அளவுள்ள தமிழகத்தில் இதுபோன்ற அமைப்பு இல்லாதது பெரும் குறை. ஆனால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகச் சுமார் 300-க்கும் மேற்பட்ட வனகிராமங்களில் மக்களுக்கு உதவி செய்கின்றேன் என்கிற பெயரில் நக்சல் தடுப்பு காவல் பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறார்கள். அரசுக்குத் தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவிப்பவர்களைச் சந்தேகத்திற் கிடமாக விசாரித்து அச்சம் உண்டாக்குகிறார்கள். இது, கிராமங்களில் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் சீர்குலைப்ப தாக உள்ளது.

“எங்களது பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் அறியாத வெளி நபர்கள் எங்கள் பகுதியில் தலையிட்டால் அதனால் எங்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கும். எங்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற திட்டங்களை வகுக்க முடிவதில்லை’’ எனும் பழங்குடிகளின் தொடர் கேள்வியை இனியும் புறக்கணிக்கக் கூடாது.