Published:Updated:

இரண்டாம் முறைதான் மரணம் வென்றது!

தா.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
தா.பாண்டியன்

சி.மகேந்திரன்

இரண்டாம் முறைதான் மரணம் வென்றது!

சி.மகேந்திரன்

Published:Updated:
தா.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
தா.பாண்டியன்
பிப்ரவரி 25-ம் தேதி இரவு ஏழு மணிக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்கிறேன். கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் மரணத்தின் நுழைவாயிலில் இருக்கிறார்.

மூச்சு ஓட்டத்தை அளந்து சொல்லும் கருவியும் இதயத்தில் ரத்த ஓட்டத்தை அளந்து சொல்லும் கருவியும் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். அவரது வாழ்வின் இறுதிப் போராட்டம் பற்றிய தகவல்களை, இவை கணக்கிட்டு உடனுக்குடன் தந்துகொண்டிருக்கின்றன.

‘சில மணி நேரங்களில் மரணம் நிகழ்ந்துவிடும்’ என்பதை மருத்துவர்கள் மறைபொருளில் தெரிவிக்கிறார்கள். கவலையில் உடல் சோர்ந்துவிடுகிறது. மரண பயமற்ற அவருக்கு மரணித்துப்போவதில் சம்மதமில்லை. போராடுவதற்காக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இரவு முழுவதும் போராடிப் பார்க்கிறார். தா.பா-வால் இந்தமுறை மரணத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. மரணத்தின் நெருங்கிய சந்திப்பு அவருக்குப் புதியதல்ல. சென்றமுறை மரணத்தால் அவரை வெற்றிகொள்ள முடியவில்லை.

1991 மே 21-ம் தேதி. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பு. ராஜீவ் காந்தி இறந்துவிடுகிறார். உடல் முழுவதும் குண்டுச் சிதறல் காயங்களுடன் மருத்துவமனையில், பல நாள்கள் மூச்சுப் பேச்சற்ற நிலையில் இருந்தார் தா.பா. பேச்சாளர்களுக்கு நாக்கும், எழுத்தாளர்களுக்குக் கைவிரல்களும் அடிப்படையானவை. அவரால் பேச முடிந்தது. ஆனால் எழுத முடியவில்லை. அவருடைய மன வலிமையும் விடா முயற்சியும், விரல்களைச் செயல்படுத்த வைத்தன. அதன் பின்னர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி முடித்தார்.

ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை பல்வேறு புரட்சிகர அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. 1948-ம் ஆண்டு. தா.பா-வுக்கு வயது 15. தந்தை, தாய் இருவரும் ஆசிரியர்கள். சமூகத்தில் மதிப்பு மிகுந்த குடும்பம். அண்ணன் சீனி விக்டர் மூலமாக, மதுரை அமெரிக்கன் கல்லூரியிலிருந்து சில மாணவர்கள் அவரைச் சந்திக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம் அது. தடை செய்யப்பட்ட புத்தகங்களை அவருக்கு வாசிக்கக் கொடுக்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் போலீஸ் வந்து நிற்கிறது. இரண்டு பேருடன் மூன்றாவது நபராக அவரையும் போலீஸ் வேனில் ஏற்றுகிறார்கள், ‘அரசாங்கத்தைக் கவிழ்க்க மூன்று சுண்டெலிகள் முயற்சி- முறியடிக்கப்பட்டு கைது’ என்ற செய்தி கிண்டல் தொனியில் மறுநாள் செய்தித்தாளில் வெளிவருகின்றது.

நீதிமன்றத்தில் நீதிபதியால் மூவரும் விசாரிக்கப்படுகிறார்கள். நீதிபதி, அந்தச் சிறுவர்களைப் பார்க்கிறார். ‘மகன் தந்தைக்காற்றும் உதவி’ என்ற திருக்குறளைச் சொல்லுமாறு கேட்கிறார் நீதிபதி. மற்றவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. தயக்கமின்றி சரியான உச்சரிப்போடு, பிழையின்றி தா.பா. சொல்லி விடுகிறார். “நீ நன்றாகப் படிக்கக்கூடியவன். திறமையானவன். உன்னை விடுதலை செய்கிறேன்” என்று கூறுகிறார். இவ்வாறாகத்தான் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.

தோழர் தா.பாண்டியன் அவர்களின் அரசியல் சிந்தனைகள் வித்தியாசமானவை. மண்மனம் கமழும் பண்பாட்டு வேர்களைக் கொண்டவை. தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் புரிந்துகொள்வதில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஆரம்பம் முதலே ஒரு நெருக்கடி இருந்துவந்தது. சிங்காரவேலர், ப.ஜீவானந்தம். ஏ.எஸ்.கே. அய்யங்கார் போன்றவர்கள் சாதி முதலானவற்றை அகற்றுவதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை நன்கு உணர்ந்திருந்தார்கள். ‘வர்க்க வேறுபாட்டை முழுமையாக அகற்ற வேண்டும் எனில், பொதுவுடமை மற்றும் திராவிட சித்தாந்தங்கள் உரிய புரிதலுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்கள். அதற்கு பலத்த எதிர்ப்பும் இருந்தது. சிங்காரவேலர் போன்றவர்களின் பாதையில் இறுதி மூச்சு வரை நின்று செயல்பட்டவர்தான் தா.பாண்டியன்.

தா.பாண்டியன்
தா.பாண்டியன்

மார்க்சியப் புரிதலுடன், தமிழின் மீதும், தமிழரின் மீதும் அவர் கொண்ட ஈடுபாட்டிற்கு ஈழத்தமிழர் போராட்டம் சிறந்த உதாரணம். ஈழத் தமிழர்களுடைய போராட்டம், தமிழகத்தில் மட்டுமே கொதிநிலையில் இருந்தது. அதை இந்தியப் போராட்டமாக மாற்றிய அரசியல் திறன் தோழர் தா.பா-வுக்கு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவரோடு இணைந்து துணைச் செயலாளராகப் பணியாற்றினேன்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ‘தமிழர்கள்மீது இலங்கை அரசு தொடுத்துள்ள யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தைத் தோழர் தா.பா முன்மொழிந்தார். உலகளவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவனத்திற்கு, ஈழத்தமிழர் பிரச்னையை எடுத்துச் செல்ல அதன் மூலம் வழிகிடைத்தது. இதைப் போலவே, மற்றொரு முக்கியமான பிரச்னை. இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிகழ்த்திவரும் தமிழக மீனவர் படுகொலை. அப்பொழுது தா.பாண்டியன் முன் வைத்த கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ‘தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும்’ என்றார் அவர். அதுகுறித்த விவாதம் அன்றைய நாடாளுமன்றம் வரை சென்றது.

தோழர் தா.பாண்டியனின் மரணம் மிகவும் கலக்கமடைய வைத்துவிட்டது. முதல்முறை தப்பியவரால் இரண்டாம் மரணத்தில் தப்ப முடியவில்லை என்றாலும், அவரின் வாழ்க்கை மரணங்களைக் கடந்த அர்த்தமுள்ள பன்முகம் கொண்டு இன்னமும் நம்மிடம் உயிர்ப்புடன் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism