Published:Updated:

"ஆசிரியர் மட்டுமல்ல, ஆய்வாளரும் கூட!" - டாக்டர் இரா.நாகசாமி

கிருஷ்ணமூர்த்தியோடு நிறைய பயணம் செய்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாசிரியர் வரலாற்று நிபுணராகவும் இருந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

பிரீமியம் ஸ்டோரி
தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களோடு எனக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு உண்டு. பத்திரிகையாளராக, வரலாற்றாய்வாளராக அவரது அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் அருகிலிருந்து கண்டு வியப்படைந்திருக்கிறேன். அவர் காலமாகிவிட்டார் என்பதை இப்போதுவரை இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

கிருஷ்ணமூர்த்தியோடு நிறைய பயணம் செய்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாசிரியர் வரலாற்று நிபுணராகவும் இருந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். வரலாற்றில் தான் கண்டடைந்த உண்மைகளை எவ்வித சார்பும் கலப்புமின்றி அப்படியே வெளியிடுவார். அவருடைய மொழி மிகவும் எளிமையானது. ‘வரலாற்றை இருண்மையில்லாமல் எளிய மொழியில் சொன்னால்தான் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையும்’ என்பார்.

மிக இளம் வயதிலேயே பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்புக்கு வந்துவிட்டார் கிருஷ்ணமூர்த்தி. அவர் உள்ளே வந்தபோது தமிழ் இதழியலில் கடும் போட்டி இருந்தது. எந்தச் சூழலிலும் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தனித்துவமாக தலைப்புகள் தந்து வாசகர்களை ஈர்த்தார். தமிழ் இதழியலில் மொழி மறுமலர்ச்சியை உருவாக்கியதில் கிருஷ்ணமூர்த்தியின் பங்கு முக்கியமானது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் செய்தியாளர்கள் தரும் செய்திகளை முழுமையாக வாசித்து, எளிமைப்படுத்துவார். அவர் கைபட்டு வெளியே வரும் செய்தி இலகுவாக இருக்கும். மொழியில் நிறைய மாற்றங்கள் செய்தார். அதேநேரம் எந்த இலக்கண மரபையும் அந்தச் செய்தி மீறியிருக்காது.

அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. ஆனாலும் அவருக்கு வரலாற்றின்மீதுதான் முழுமையான ஆர்வம் இருந்தது. ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் அவர் சேகரிப்பில் இருந்தன. பணியில்லாத நேரங்களில் நூல்களுக்குள் மூழ்கியிருப்பார்.

குறிப்பாக நாணயவியல் ஆய்வில் கிருஷ்ணமூர்த்தியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவராக நாணயங்களைத் தேடிக் கண்டடைந்து அதுகுறித்து ஆய்வு செய்து எழுதியது ஒரு வகை. முன்பு கண்டறியப்பட்ட நாணயங்களை மேலாய்வு செய்து கூடுதல் செய்திகளை வெளிக்கொண்டு வந்தது இன்னொரு வகை. இரண்டிலும் கிருஷ்ணமூர்த்தி தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்.

நாணயங்கள் என்பவை வரலாற்றுச் சின்னங்கள். அவற்றின் அருமை தெரியாமல் பழைய இரும்பு வியாபாரிகளிடம் பேரீச்சம்பழத்துக்கு விற்றுவிடும் நிலைதான் இருந்தது. ஊர் ஊராகச் சுற்றி அதுமாதிரியான நாணயங்களை விலைகொடுத்து வாங்கி, அவை எந்த உலோகத்தால் செய்யப்பட்டவை, என்ன எழுத்துகள் இடம்பெற்றுள்ளன, எந்த அரசனால் வெளியிடப்பட்டவை, எந்தக் காலத்தைச் சார்ந்தவை என்பதையெல்லாம் ஆய்வு செய்து இதழ்களில் எழுதுவார். நாணயவியல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

ஒரு நாட்டின் வரலாறானது, பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. நாணயங்கள் வழி ஒரு நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்வது ஆதாரபூர்வமானதாக இருக்கும். நாணயங்கள் வழியாக காலத்தைக் கண்டடைவதும் எளிது.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி
ஆர்.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால மன்னர்களாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்றோர் கற்பனைப் பாத்திரமல்ல... அவர்கள் தமிழ்நிலங்களை ஆட்சி செய்த வேந்தர்களே என்பதற்கு ஆதாரமாக அவர்களது நாணயங்கள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டார்.

தென்னிந்திய நாணயச் சங்கம் உருவாக்கி ஏராளமான இளைஞர்களை நாணய சேகரிப்பு நோக்கி ஈர்த்தவர். தமிழ்க்காசுகள் மட்டுமல்ல, ரோமானியக் காசுகள், கிரேக்கக் காசுகள் பற்றியும் ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். ஆண்டுதோறும் நாணயவியல் சங்கத்தைக் கூட்டி பலரையும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் சமர்பிக்க வைத்து நூல்களாக வெளியிடுவார். இந்தியாவில் மட்டுமன்றி, உலகளாவிய நாணய ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கௌரவப்படுத்தி, தமிழ்நாட்டு நாணயங்கள் குறித்து ஆய்வு செய்ய ஊக்குவித்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தியின் சிறப்பு, அவர் அணுகுவதற்கு எளியவர்; பழகுவதற்கு இனியவர். எவ்வளவு பதற்றமான சூழலாக இருந்தாலும் சாந்தமாக இருப்பார். கனிவோடு பேசுவார். பெரும்பாலும் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. தவறுகளைச் சுட்டிக்காட்டும்போதும் உறுதி இருக்குமேயொழிய கோபம் இருக்காது.

கிருஷ்ணமூர்த்தி இந்திய வரலாற்றுக்கும் இதழியலுக்கும் பல புதிய சாத்தியங்களை உருவாக்கித் தந்திருக்கிறார். அழுத்தமான பல ஆதாரங்களைத் தமிழ் வரலாற்றுக்குச் சேர்த்து வைத்திருக்கிறார். வரலாற்றில் என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு