Published:Updated:

மருத்துவர் ஜீவானந்தம் என்னும் மகத்துவ மனிதர்!

`குக்கூ’ சிவராஜ்

பிரீமியம் ஸ்டோரி
ரு முறை, ஒரு கார்பரேட் மருத்துவமனை நிர்வாகம் இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கில் ‘இணைப்பு மருத்துவமனைகள்’ தொடங்குவதாகத் தகவல் வெளியானது. அதையறிந்த டாக்டர் ஜீவா, “இது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. மக்களோட பங்களிப்புல சொசைட்டி ஹாஸ்பிட்டல்ஸ நாம உருவாக்கணும். அவங்களோட சின்னப் பங்களிப்பு இருந்தாக்கூடப் போதும். ஆனா அது நிச்சயமா இருக்கணும்” என்றொரு திட்டம் சொன்னார். அப்படித் தொடங்கப்பட்ட மருத்துவமனைகள்தான் ஈரோடு ட்ரஸ்ட் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் மருத்துவமனை என எல்லாமே. தஞ்சாவூர், ஊத்துக்குளி மற்றும் வெவ்வேறு ஊர்களில் அந்தத்திட்டம் விரிவாகிப் பரவியது.

டாக்டர் ஜீவா, பன்முக ஆளுமையுடைய ஒரு மனிதர். மருத்துவம், சூழலியல், சேவை மற்றும் எழுத்துப்பணியில் இவர் ஆற்றியுள்ள தொண்டுகள் அளவற்றவை. இந்தியாவில் இன்று எழுந்துள்ள பல முக்கிய சூழலிய இயக்கங்களுக்கு முன்னோடி அவர்தான். ஈழத்தில் நடந்த முந்தைய போரில் பாதிக்கப்பட்ட நிறைய போராளிகளுக்கு டாக்டர் ஜீவா சிகிச்சையளித்துக் காப்பாற்றியிருக்கிறார். ‘காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்துப் பெறாத தத்துவம் இந்தியாவில் வெல்லாது’ என்னும் விடாப்பிடியான கொள்கையோடு இறுதிவரை இயங்கிய நம்பிக்கைக்காரர்.

கட்சி, சித்தாந்தம் என எவ்வித பேதமும் யார்மீதும் அவருக்குக் கிடையாது. எவரால் எளிய மனிதர்களுக்கு நல்லது நிகழ்ந்தாலும், அவரின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளும் மனிதராகவே எப்போதுமிருந்தார். இலக்கு என்பது செயலாகவும், இணக்கம் என்பது பாதையாகவும் அவருக்கிருந்தது.

ஈரோடு ட்ரஸ்ட் ஹாஸ்பிட்டல் தொடங்கி சில ஆண்டுகளான காலகட்டத்தில், அங்கிருக்கும் மாநில அமைச்சருக்கும் டாக்டருக்கும் ஒரு முரண் உண்டானது. அந்த மருத்துவமனை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, பொக்லைன் மூலம் இடிக்க வந்தார்கள். “ஒருத்தரும் வெளிய வராதீங்க. நான் பாத்துக்கிறேன்” எனச் சொல்லி, டாக்டர் ஜீவா தன்னந்தனி ஆளாக மருத்துவமனை முன்பாகப் போய் நின்றார். கட்டடத்தை இடிக்க நெருங்கிய நிலையிலும்கூட அங்கேயே நின்றிருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அம்முயற்சி கைவிடப்பட்டது. “மக்கள் சேர்ந்து நடத்துற தர்ம ஆஸ்பத்திரி இது. அதிகாரத்தால இது அழிஞ்சிடக்கூடாது” எனச் சொல்லி எங்கள் எல்லோரின் நம்பிக்கையையும் அணையாமல் வளர்த்தெடுத்தவர் ஜீவா.

அவருடன் நடந்த ஓர் உரையாடலில் சொன்ன ஒரு சம்பவத்தை வாழ்நாளில் எப்போதுமே மறக்கமுடியாது. “எங்க அப்பாவும் அம்மாவும் முதல்முறையா சந்திச்ச மரம் ஒண்ணு இருக்கு. கொஞ்ச காலம் கழிச்சு, காத்தடிச்சோ வேறு ஏதோ காரணத்தினாலோ அந்த மரம் கீழே விழுந்திருச்சு. சேதி கேள்விப்பட்ட எங்க அப்பா முந்நூறு, நானூறு கிலோமீட்டர் தாண்டிப்போய் அந்த மரத்த வீட்டுக்கு எடுத்துட்டுவந்து ஒரு கட்டிலா மாத்துனாரு. நான் உட்பட, என் தலைமுறையோட தொடக்கமே அந்தச் சந்திப்பும், அந்த மரத்தோட இருப்பும்தான்” என்று கண்கலங்கிய டாக்டரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். டாக்டருடைய அப்பா பெயர் வெங்கடாசலம். அவ்வளவு கல்வி நிறுவனங்களை உருவாக்கிய மாபெரும் மனிதர். ஆனால், அந்நிறுவனங்களுக்குள் எவ்வகையிலும் அதிகாரம் செலுத்தாமல், விலகிநின்று உயர்த்திவிட்டார். அந்த குணத்தன்மை டாக்டர் ஜீவாவுக்கு அப்பாவிடமிருந்தே வந்திருக்க வேண்டும்.

நம்மாழ்வாரை, சூழலியல் சார்ந்த நிகழ்வுகளில் பரவலாகப் பங்கெடுக்க வைத்தமைக்கான தொடக்கம், டாக்டர் ஜீவா உருவாக்கிக் கொடுத்ததுதான். மேலும், இலக்கியவாதிகளுக்கும் சூழலியல் சார்ந்தவர்களுக்கும் எவ்விதமான நேரடித்தொடர்பும் இல்லாமலிருந்த காலகட்டத்தில், இலக்கியவாதிகளை அழைத்துவந்து சூழலியல் தொடர்பான கூடுகைகளில் ‘சோலை சந்திப்பு’ என்ற பெயரில் பங்கேற்கச் செய்தார். தமிழ்ச்சூழலில் இன்றைய பல்வேறு சூழலியல் இயக்கங்களுக்கான முதல் வேர் ஊன்றியவர்களுள் டாக்டரும் ஒருவர்.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

அப்படியான ஒரு சோலை சந்திப்பில் நம்மாழ்வாரிடம் டாக்டர் ஜீவா அவர்கள், “ஈரோடு, கோவைல இயற்கை விவசாயப் பொருள்களோட உற்பத்தி அதிகம். ஆனா, அத சந்தைப்படுத்த அங்க வாய்ப்பில்லாம இருக்கு. எப்படி நாம சொசைட்டி அடிப்படையில ஹாஸ்பிட்டல் உருவாக்குனோமோ, அதேமாதிரி சொசைட்டி அடிப்படையிலான பசுமை அங்காடிகளை உருவாக்கணும்” எனச் சொல்லி ஒரு திட்டத்தை உருவாக்கினார். ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட தொகை தந்து அதில் இணைந்துகொள்ள வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, அந்தத் திட்டத்திற்கு முதன்முதலாகத் தொகையளித்தவர் உதயச்சந்திரன். அங்காடிக்கான இடத்தினையும் அவரே ஏற்பாடு செய்துகொடுத்தார்.

நிறைய இலக்கியவாதிகளின் மகன் அல்லது மகள்களைக் கல்விபெறச் செய்தது, அவர்களுக்கான மருத்துவச் செலவை கவனித்துக்கொண்டது என... வெளியில் சத்தமில்லாமல் அவ்வளவு சாத்தியங்கள் டாக்டர் ஜீவாவால் நிகழ்ந்திருக்கின்றன. நம் சமகாலத்தில் தோன்றிய முக்கியமானதொரு செயல்விசை அவர். செயலூக்கியாக நிறைய இளையமனங்களை வழிப்படுத்தியவர்.

டாக்டர் ஜீவாவின் மூச்சு, காற்றில் கலந்துவிட்டது என்கிற யதார்த்தத்தை எப்படி நம்புவது என்பதறியாமல் நான் குமைந்துகொண்டே இருக்கிறேன். அவருடைய கண்களும் அதுகொண்ட கனிவும்...

ஜீவாவும் அவர் நண்பர்களும் இணைந்து உருவாக்கிய, காவிரிக்கரைப் படுகையில் அமைந்துள்ள ‘ஆத்மா’வில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஆத்மா அமைப்பின் லோகோவை டாக்டர் கைப்பட தாளில் வரையும்போது நான் அவருடன் இருந்திருக்கிறேன். அவரின் கனவு நினைவான அதே இடத்தில் அவருடைய தகனம் நிகழ்வது தாளமுடியாத அழுகையைத் தருகிறது.

எளியவர்களுக்காக வாழ்ந்த நிறைவாழ்வு அவருடையது. நோய்தீர்ந்து ஆயுசுமீண்ட ஆயிரமாயிரம் இருதயங்கள் சிந்திய கண்ணீரும், கரங்கூப்பும் நன்றியும் ஜீவாவை சாவில்லாத மனிதராக நிலைநிறுத்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு