Published:Updated:

எத்தனை போலீஸ் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை! - திருச்சி அகோரி சாமியார் ‘தில்’

திருச்சி அகோரி சாமியார்
பிரீமியம் ஸ்டோரி
திருச்சி அகோரி சாமியார்

சதுரகிரி மலையில் வசிக்கும் பாலுசாமியிடம் முறையாகத் தொழிலைக் கற்றுக்கொண்டு, மேலதிகச் சக்திகளைப் பெறுவதற்காக, காசிக்குச் சென்றுவிட்டேன்.

எத்தனை போலீஸ் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை! - திருச்சி அகோரி சாமியார் ‘தில்’

சதுரகிரி மலையில் வசிக்கும் பாலுசாமியிடம் முறையாகத் தொழிலைக் கற்றுக்கொண்டு, மேலதிகச் சக்திகளைப் பெறுவதற்காக, காசிக்குச் சென்றுவிட்டேன்.

Published:Updated:
திருச்சி அகோரி சாமியார்
பிரீமியம் ஸ்டோரி
திருச்சி அகோரி சாமியார்

“15 வயதிலேயே காசிக்குச் சென்று அகோரியாக மாறிவிட்டேன்” என்கிறார், திருச்சியின் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கும் ‘சாமியார்’ குருமணிகண்டன். திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ‘ஜெய் அகோர காளி கோயில்’ என்ற பெயரில் கோயில் கட்டி பேய் ஓட்டுதல், பில்லி சூனியம் அகற்றுதல் போன்ற மாந்திரீக வேலைகளைச் செய்துவருகிறார். “அமாவாசை, பெளர்ணமி போன்ற நாள்களில் நள்ளிரவில் திகிலூட்டும்படியாக பூஜை நடத்துகிறார்” என்கிறார்கள். காமெடியாக, சர்ச்சையாக எனப் பலவிதமாக சாமியாரைப் பற்றி செய்திகள் அடிபடுகின்றன. அப்படி என்னதான் ‘சித்து வேலைகள்’ செய்துகொண்டிருக்கிறார் என அவரைச் சந்தித்தே கேட்டுவிட நேரில் சென்றோம்...

உய்யக்கொண்டான் ஆற்றங்கரையை ஒட்டிய மரங்கள் நிறைந்த மண்பாதையில் சென்றால், வருகிறது அந்தக் கோயில். ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்ததால், நாம் வந்திருக்கும் தகவலைச் சொல்லிவிட்டு, சாமியாருக்காகக் காத்திருந்த வேளையில் சாமியாரின் பக்தர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர், தனது மொபைலில் இருந்த வீடியோ ஒன்றைக் காட்டினார். அதில் நீண்ட ஜடா முடி, தலையில் கொண்டை, உடல் முழுக்க திருநீறு, சிவப்பேறிய கண்களுடன் யாக குண்டத்தில் தீ வளர்த்துக்கொண்டிருந்தார் குருமணிகண்டன். அவரைச் சுற்றி, இடுப்பில் கோவணமும் தலைப்பாகையும் மட்டுமே அணிந்து உடல் மற்றும் முகமெங்கும் திருநீறு பூசியிருந்தார்கள் ஏழெட்டு அகோரி சாமியார்கள். அத்தனை பேரும் இளைஞர்கள்... மிரட்சியோடு நாம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சாமியார் அழைப்பதாகத் தகவல் வந்தது. உள்ளே சென்றதும் சில நொடிகள் நம்மை உற்றுநோக்கியவர், அந்த ஏரியாவே அதிரும்படி திடீரென பயங்கரமாகச் சத்தமிட்டு, எதையோ உச்சரித்தார். பிறகு, “ம்ம்... ஆகட்டும், என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள்” என்றார் பந்தாவாக!

எத்தனை போலீஸ் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை! - திருச்சி அகோரி சாமியார் ‘தில்’

“முதலில் நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா?”

“நானா? நான்தான் எல்லாம். எல்லாமும் நானே. என்னால் எதுவும் செய்ய முடியும்... போதுமா?”

“சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்தைச் சொல்லுங்கள் சாமி?”

“சதுரகிரி மலையில் வசிக்கும் பாலுசாமியிடம் முறையாகத் தொழிலைக் கற்றுக்கொண்டு, மேலதிகச் சக்திகளைப் பெறுவதற்காக, காசிக்குச் சென்றுவிட்டேன். அங்குதான் நான் முழுதாகச் சித்தி பெற்றேன். பிறகு அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் எனப் பல மாநிலங்களுக்குச் சென்று பல மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தேன். அதன் பிறகே காளிதேவி கட்டளைக்கிணங்க இந்த இடத்தில் கோயில் அமைத்தேன்.”

‘‘சுடுகாட்டில் அகோரிகளுடன் அமர்ந்து பூஜை செய்வதுபோல் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறீர்களே..?’’

“அந்த போட்டோ பழையது. சூரிய கிரகணத்தில் பூஜை செய்தபோது எடுத்தது. சுடுகாட்டில் பெண்களும், ஒரு சிறுவனும் உட்கார்ந்திருப்பது போல் இன்னொரு போட்டோ வைரல் ஆனது பார்த்தீர்களா... அதுதான் சமீபத்தில் எடுத்தது. பொதுவாக, ஒவ்வொரு கிரகணத்தின்போதும் பூமி தனது சக்தியை இழந்துவிடும். அந்த நாள்களில் காளியின் முன்பு காலச்சக்கரத்தில் சாதுக்கள் அமர்ந்து மந்திரங்களைச் சொன்னால், பூமிக்கும் எங்களுக்கும் சக்தி கிடைக்கும்.’’

‘‘கோயிலைச் சுற்றி இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்பதாகச் சொல்கிறார்களே?”

‘‘தீராப்பசிகொண்ட பேய்களை ஓட்டுறது, பில்லி சூனியம் அகற்றுவது என்று யாராலும் தீர்க்க முடியாத பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன். பேயை ஓட்டும்போது பெண்கள் எழுப்பும் சத்தம்தான் அது. இந்த 15 வருடங்களில இப்படி 700-க்கும் மேற்பட்ட பேய்களை ஓட்டியிருக்கேன். ஆனால், நான் குழந்தைகளை பலி கொடுக்கிறேன் என்றெல்லாம் தவறான செய்திகளைச் சிலர் பரப்புகிறார்கள். உயிரைப் பறிக்க எனக்கு அதிகாரம் கிடையாது. நான் ஒரு சாது. ஆசாபாசங்களிலிருந்தும் மனித வாழ்விலிருந்தும் விடுபட்டவன்.”

‘‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அம்மாவின் பிரேதத்தின்மீது அமர்ந்து பூஜை செய்ததுடன், அடக்கம் செய்யவிடாமலும் தடுத்தீர்களாமே?”

‘‘அம்மாவின் ஆத்மா சாந்தி அடைவதற்காக அந்த பூஜையைச் செய்தேன். உடலை எரிப்பதற்கு முன்பாக அவர்களின் தொப்புள் மீது, சாதுக்களின் ஆசனவாய் படும்படி அமர்ந்து மந்திரங்களைச் சொன்னால் ஆன்மா நிம்மதியாக வெளியேறும். பூமியில் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் அந்த மந்திரங்கள் மூலம் நிறைவேறி, அவர்களின் ஆன்மா பூமியில் ஆவியாகச் சுற்றாமல் நேரடியாகச் சொர்க்கத்துக்குச் செல்லும். காசியில் இந்த பூஜையைப் பலமுறை செய்திருக்கிறேன். அங்கெல்லாம் இந்த பூஜையின்போது அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை பயபக்தியோடு வணங்குவார்கள். ஆனால், தமிழகத்தில்தான் திசைதிருப்பிவிட்டார்கள். பல இடையூறுகளைச் செய்தார்கள்!”

எத்தனை போலீஸ் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை! - திருச்சி அகோரி சாமியார் ‘தில்’

“மாந்திரீகப் பயிற்சி கொடுக்கிறீர்களாமே?”

“நான் கற்றுக்கொண்ட மந்திரங்கள் என்னுடன் மட்டும் போய்விடக் கூடாது; அது மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். அதற்காக என்னிடம் விரும்பி வருபவர்களுக்கு மாந்தீரிக வகுப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன்!”

“ஆனால், போலீஸார் உங்களைக் கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறதே?”

“எங்களது கோயிலைச் சுற்றி 26 கேமராக்கள் உள்ளன. யார் யார் என்ன செய்கிறார்கள் என்பது அதில் பதிவுசெய்யப்பட்டுவருகிறது. எங்கள் டிரஸ்ட் கணக்கு வழக்குகளையும் சரியாக வைத்திருக்கிறோம். எத்தனை போலீஸார் வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. மடியில் கனம் இருந்தால்தானே மனதில் பயம் வரும்?!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism