Published:Updated:

ஒதுக்கிவைத்த தலைவர்கள்... சாட்டையை சுழற்றிய கலெக்டர்! - ஃபாலோ அப்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பங்கள்
ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பங்கள்

நாப்பது வருஷத்துக்கு மேல என் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிருந்ததையும், எங்க அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாதுன்னு என்னை மிரட்டுனவங்க பத்தியும் எழுதியிருந்தீங்க.

பிரீமியம் ஸ்டோரி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களை ஊரிலிருந்து ஒதுக்கிவைத்த கொடுமையை கடந்த 26.09.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில் “அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாது! ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்...” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, ஊருக்குள் அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ஊர்த் தலைவர்களை எச்சரித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களை ஊரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.

கட்டுரை வெளிவந்ததுமே மண்ணச்சநல்லூர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்த மாவட்ட கலெக்டர் சிவராசு, “இந்தப் பிரச்னையை தீர விசாரித்து விரைவில் தீர்வுகாண வேண்டும்” என்று உத்தரவிட்டார். அத்துடன், போலீஸாரை அந்தக் கிராமத்துக்கு அனுப்பி கள நிலவரத்தை ரிப்போர்ட்டாகப் பெற்றார். அடுத்த சில நாள்களில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் தலைமையில் ஈச்சம்பட்டியில் நடந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், அவர்களை ஒதுக்கிவைத்ததாகக் கூறப்படும் ஊர்த்தலைவர் மற்றும் பட்டயத்தார்களும் கலந்துகொண்டார்கள்.

ஒதுக்கிவைத்த தலைவர்கள்... சாட்டையை சுழற்றிய கலெக்டர்! - ஃபாலோ அப்...

இந்தக் கூட்டத்தில், ‘‘ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்களை உடனடியாக ஊருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது. அப்படி ஏதேனும் புகார் வந்தால், கண்டிப்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்ததுடன், மேற்கண்ட நிபந்தனைகளை ஊர்த் தலைவர்களிடம் கைப்பட எழுதியும் வாங்கியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த செளந்தரராஜன் நம்மிடம், “இதுக்கு முன்னாடி எத்தனையோ மனு எழுதிப் போட்டிருக்கோம்... ஆனா, எதுவும் நடக்கலை. நாப்பது வருஷத்துக்கு மேல என் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிருந்ததையும், எங்க அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாதுன்னு என்னை மிரட்டுனவங்க பத்தியும் எழுதியிருந்தீங்க. கூடவே, என்னை மாதிரி பாதிக்கப்பட்டிருந்த 30 குடும்பங்கள் பத்தியும் எழுதியிருந்தீங்க. ஜூ.வி-யில செய்தி வந்ததுக்குப் பிறகுதான் அதிகாரிங்க ஊருக்குள்ள வந்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஊருக்கு வெளியே தங்கியிருந்த பாதிக்கப்பட்ட தரப்பினரையும் விசாரிச்சாங்க. நாங்க எல்லா உண்மையையும் சொன்னோம். அதுக்கு அப்புறம்தான் பட்டயத்தார்களை எச்சரிச்சு, கிராமத்துல நடக்குற எல்லா நல்லது, கெட்டதுகள்லயும் நாங்க கலந்துக்குறதைத் தடுக்கக் கூடாதுனு உத்தரவிட்டிருக்காங்க. நாப்பது வருஷம் கழிச்சு, தாய் மண்ணுல சுதந்திரமா மூச்சுவிடுற மாதிரி இருக்கு” என்றார் நிம்மதியுடன்!

சிவராசு
சிவராசு

மாவட்ட கலெக்டர் சிவராசு நம்மிடம், “மனிதனை மனிதனாகப் பார்க்கவேண்டிய காலகட்டத்தில் சாதிய வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரித்துப் பார்ப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கிராமத்தில் மீண்டும் யாரையேனும் ஒதுக்கிவைத்தாலோ, பாகுபாடு காட்டினாலோ குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று எச்சரித்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் தேவையான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

பாரதி சொன்ன ‘வாழும் முறைமையடி பாப்பா’ என்பது இதுதானே... அந்தக் கிராமத்தில் சமூகநீதி தழைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு