Published:Updated:

`துணையில்லாம இந்தக் குழந்தைகளால இருக்க முடியாது!' - மருத்துவ உதவிக்காக கலங்கும் ஏழைப் பெற்றோர்

குழந்தைகளுடன் மோகனப்பிரியா - செந்தில்குமார்
குழந்தைகளுடன் மோகனப்பிரியா - செந்தில்குமார்

``சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டதால் ஏதோ ஜீன் பிரச்னை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.''

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அடுத்துள்ளது கிளிக்கூடு. இங்குள்ள கவுதரசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் - மோகனப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு காவியாஶ்ரீ மற்றும் நிரஞ்சன் என 2 குழந்தைகள் உள்ளனர். பெயின்டிங் வேலை செய்யும் செந்தில்குமார், அவரின் தாய்மாமன் மகளான மோகனப்பிரியாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மோகனப்பிரியா கர்ப்பமடைந்தார். குழந்தை பிறக்கப்போவதை எண்ணி இருவீட்டாரும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்து வந்தநிலையில், அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது வழக்கமான குழந்தையைப்போல் அழாமல் இருக்கவே, மருத்துவர்கள் போராடி குழந்தையைக் காப்பாற்றினர்.

குழந்தையுடன் செந்தில்குமார்
குழந்தையுடன் செந்தில்குமார்

“பிறந்த குழந்தை உடனே அழாததால், அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தநாளம் முறையாக வேலை செய்யவில்லை, அதனால் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியுள்ளது” என மருத்துவர்கள் கூறினர். குழந்தையின் மீது அளவற்ற பாசம் கொண்ட மோகனபிரியாவும் அவரின் கணவரும் அந்தக் குழந்தையை பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். இப்போது குழந்தைக்கு 7 வயது ஆகிறது. ஆனால், அவர் உடல் வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மோகனப்பிரியா மீண்டும் கருவுற்றார்.

முதல் குழந்தைபோல் இல்லாமல், இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூடுதலாகக் கவனம் செலுத்தினார். மருத்துவ ஆலோசனைகளின்படி செயல்பட்டனர். ஆனாலும் அவர்களின் கனவில் இடி விழுந்தது. இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தையும் மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் இருக்கவே அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். ஆனாலும், தங்களது கவலைகளைப் பிள்ளைகளிடம் காட்டாமல் மிகவும் நேர்த்தியாகப் பராமரித்து வருகிறார்கள். கணவரின் வருமானம் குடும்பத்துக்குப் போதாத நிலையில், குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

Vikatan

இந்நிலையில், நம்மிடம் பேசிய மோகனப்பிரியா, “பெற்றோரின் சம்மதப்படி மாமனைத் திருமணம் செய்துகொண்டேன். சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டதால் ஏதோ ஜீன் பிரச்னை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவுக்கே பத்தல. அதனால் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு மிகுந்த சிரமப்படுகிறோம்.

குழந்தைகள் இருவரும் துணையில்லாமல் இருக்க முடியாது. தலை நிற்கல. அதனால் தானாக அவர்கள் எதையும் செய்ய முடியாத சூழல். அதனால் பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டு பராமரித்து வருகிறோம். இதனால் என்னால் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. அவர் செய்யும் பெயின்டிங் வேலையும் அவ்வப்போது சரியாகக் கிடைப்பதில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

குழந்தையுடன் மோகனப்பிரியா
குழந்தையுடன் மோகனப்பிரியா

எங்கள் ஊரில் அங்கன்வாடியில் சமையல் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அந்த வேலை கிடைத்தால்கூட குழந்தைகளை அங்கன்வாடி கொண்டு சென்றுவிட்டு அருகில் இருந்து கவனித்துக்கொள்ள முடியும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்துள்ளேன். நல்ல முடிவு சொல்வார் எனக் காத்திருக்கிறேன். பிள்ளைகளின் மருத்துவச் செலவுக்குக்கூட வழியில்லாமல் பலநாள் நாங்க பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது” எனக் கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு