அரசியல்
அலசல்
Published:Updated:

முடிவை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு... மகனுடன் சிக்கும் பிரபல ரௌடி!

கே.என்.நேரு
பிரீமியம் ஸ்டோரி
News
கே.என்.நேரு

டெல்டா மாவட்டத்தில் பிரபல ரௌடிகளாக வலம்வந்த மணல் மேடு சங்கர், முட்டை ரவி ஆகியோர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர்

திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகியும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறிய நிலையில், அ.தி.மு.க ஆதரவாளரான டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரௌடிமீதும், அவரின் மகன்மீதும் போலீஸாரின் சந்தேகப் பார்வை வலுத்திருக்கிறது. இந்தச் சூழலில் சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகில் அக்தர், கடந்த 22.10.2022-ம் தேதி திருச்சிக்குச் சென்று, சிறப்பு புலனாய்வுக்குழுவினருடன் ஆய்வு நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

துப்பு துலங்கியது!

கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால், ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. சி.பி.ஐ விசாரணையிலும் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது.

முடிவை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு... மகனுடன் சிக்கும் பிரபல ரௌடி!

எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், முதற்கட்டமாக ராமஜெயம் கொலைக்கு முன்பாக டெல்டா மாவட்டத்தில் கோலோச்சிய ரௌடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் மூலம் அ.தி.மு.க ஆதரவாளரான பிரபல ரௌடிக்கும், அவரின் மகனுக்கும் ராமஜெயம் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. விரைவில், அந்தப் பிரபல ரௌடி, அவரின் மகன் மற்றும் கொலைக்குக் காரணமாக இருந்த அ.தி.மு.க புள்ளிகள் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

காட்டிக்கொடுத்த கார்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``டெல்டா மாவட்டத்தில் பிரபல ரௌடிகளாக வலம்வந்த மணல் மேடு சங்கர், முட்டை ரவி ஆகியோர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர். அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் ராமஜெயம் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முட்டை ரவியின் வலதுகரமான சாமி ரவியிடம் விசாரணை நடத்தினோம். கூடவே, ரௌடிகள், அரசியல் கட்சி ஆதரவாளர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக் கிறோம்.

ஷகில் அக்தர்
ஷகில் அக்தர்

ரௌடிகள் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்குக்குத் தேவையான சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன. எனினும், ராமஜெயம் கொலைக்கு அரசியல், முன்விரோதம், ரியல் எஸ்டேட், தனிநபர் தகராறு உள்ளிட்ட பல காரணங்கள் இருந்ததால் துப்பு துலக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன.

அதோடு கொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் தகவல்களைச் சரிபார்ப்பதிலும், ஆதாரங்களைச் சேகரிப்பதிலும் தொய்வு ஏற்பட்டது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் கிடைத்தன. பத்தாண்டுக்கு முன்பு பயன்படுத்திய செல்போன் இன்று பலர் கை மாறியிருக்கிறது. அவற்றை முறைப்படி விசாரித்துவருகிறோம். மேலும், ராமஜெயம் கொலை வழக்கில் டெல்டா மாவட்டத்தில் உள்ள சில ரௌடிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கிறது. அதில் ஒரு ரௌடி அளித்த தகவலின்படி, சிசிடிவி ஆதாரம் ஒன்று கிடைத்தது. அதில், ராமஜெயத்தின் சடலத்தை, குறிப்பிட்ட மாடல் மாருதி காரில் கொண்டுவந்து சாலை ஓரத்தில் வீசிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. ஆனால், அந்த காரின் பதிவு எண் சரியாகத் தெரியவில்லை. அதனால் தமிழகம் முழுவதும் அந்த மாடல் கார் வைத்திருப்பவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்தோம். ஆனால், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்!

இருப்பினும், எங்களின் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் டெல்டா மாவட்டத்தில் அ.தி.மு.க தலைமையோடு நெருங்கிய தொடர்பிலிருந்த ரௌடி, அவரின் மகன் இருவரும் எங்கள் சந்தேக வளையத்துக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். ஆனால், அவர்களின் விவரங்களைச் சொல்ல முடியாது” என்றார் விரிவாக.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகில் அக்தரிடம் பேசினோம். ``ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 20 ரௌடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இந்த வழக்கில் விரைவில் நல்ல தகவலைச் சொல்கிறேன்” என்றார் சுருக்கமாக.

நாம் விசாரித்தவரை போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும், அரசியல் சலசலப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால் உண்மையை வெளியில் சொல்ல தாமதிக்கிறார்கள். கடந்த வாரத்தில் அமைச்சர் கே.என்.நேருவிடம் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக டி.ஜி.பி ஷகில் அக்தர் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். பத்து ஆண்டுகளாகத் துப்புத் துலக்க முடியாமல் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கு அதன் முடிவை நெருங்குவது தெரிகிறது.