Published:Updated:

“ஊருக்காக உயிரைவிட்டாங்க... எங்க கண்ணீரைத் துடைக்க யாருமில்லை!”

சமூக ஆர்வலர் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
சமூக ஆர்வலர் குடும்பம்

- நிர்க்கதியில் நிற்கும் சமூக ஆர்வலர் குடும்பம்

“ஊருக்காக உயிரைவிட்டாங்க... எங்க கண்ணீரைத் துடைக்க யாருமில்லை!”

- நிர்க்கதியில் நிற்கும் சமூக ஆர்வலர் குடும்பம்

Published:Updated:
சமூக ஆர்வலர் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
சமூக ஆர்வலர் குடும்பம்

‘‘ ‘ஊருக்காக அப்பனும் புள்ளையும் ஓடுறீங்களே... உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, எங்களுக்கு யார் ஆதரவு?’னு நான் கேட்டா, என் கணவர் சிரிச்சு மழுப்பிடுவார். ஆனா நான் பயந்தது மாதிரியே ரெண்டு பேரையும் படுபாவிங்க கொன்னுட் டாங்களே... இப்போ தலைமகன்கள் இல்லாம குடும்பமே தள்ளாடுதே...” என்று விம்மி வரும் அழுகையை முந்தானையால் அடக்கியபடி, ஆற்றாமையோடு பேசுகிறார் தாமரை!

திருச்சி மாவட்டம், இனாம் புலியூரைச் சேர்ந்தவர் தாமரை. அவரின் கணவர் வீரமலை. இந்தத் தம்பதியின் மூத்த மகன் நல்லதம்பி. மேலும் இரு பெண்களும் இருக்கின்றனர். கரூர் மாவட்டம், முதலைப்பட்டியிலுள்ள 198.42 ஏக்கர் அளவுள்ள ஒரு ஏரியைச் சிலர் ஆக்கிரமித்த தால், அந்தப் பகுதியின் விவசாயம் பாதிக்கப்பட் டது. ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வீரமலையும் நல்லதம்பியும் சட்டப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஆத்திரமுற்ற ஆக்கிரமிப்பாளர்களால், தந்தையும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வீரமலை
வீரமலை
நல்லதம்பி
நல்லதம்பி

2019, ஜூலை 29-ம் தேதி நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கில் 2022, ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு வெளிவந்தது. அதில், நான்கு பேரை விடுதலை செய்த நீதிமன்றம், பெருமாள், ஜெயகாந்தன், சசிக்குமார், ஸ்டாலின், பிரபாகரன், பிரவீன்குமார் ஆகிய ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

தந்தையையும் மகனையும் பறிகொடுத்துவிட்ட அந்தக் குடும்பம், இடி விழுந்த வீடாக நொறுங்கிக் கிடக்கிறது. தென்னை மட்டையிலிருந்து ஈர்க் குச்சி எடுத்து துடைப்பம் செய்து, அதை விற்ப தன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்திவரும் தாமரையிடம் பேசினோம்...

தாமரை
தாமரை

‘‘என்னோட கணவரும் மகனும் விவசாயம் செஞ்சு, எங்களுக்குப் பழுதில்லாம கஞ்சி ஊத்தி னாங்க. என்னோட கணவர் முதலைப்பட்டி அய்யனார் கோயில் பூசாரியாகவும் இருந்தார். இந்த ஊரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்க விவசாயிங்க பலரும் என் கணவரிடம் வந்து பேசினாங்க. நான், ‘ஊர்ப்பகை நமக்கு எதுக்கு சாமி. மூத்த மகளுக்கு வரன் பார்க்கணும். மன நலம் பாதிச்ச சின்ன மகளைக் குணமாக்கணும். அந்த வேலையைப் பாருங்க’னு எவ்வளவோ சொன்னேன். ஆனா, என் கணவரும் மகனும் சேர்ந்து மதுரை கோர்ட்டுல கேஸ் போட்டாங்க. அதனால பெருமாள் கூலிப்படையை ஏவி, என்னோட கணவரையும் மகனையும் எங்க கண் முன்னாடியே வெட்டிக் கொன்னாங்க. ‘வீரமலை குடும்பத்துல ஒரு கருக்காகூட உசுரோட இருக்கக் கூடாது’னு கொல்லப் பார்த்தாங்க. என் பேரன் ஓடித் தப்பினதால இன்னைக்கு உசிரோட இருக்கான். எங்க குடும்பத்தையே கூறுபோட்டவங்க... எல்லாருமே நல்லா இருக்காங்க. சாட்சிகளான எங்களையும் கொல்லப் போறதா எதிரிகள் மிரட்டுறதால, நாங்க மட்டும் ஓடி ஒளிஞ்சு வாழுறோம். என் காலத்துக்குப் பிறகு, என்னோட குடும்ப நிலைமை என்ன ஆகுமோன்னு நினைச்சு ராத்திரியெல்லாம் உறக்கமில்லை சாமி...” என்றார் வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே.

தாயை ஆசுவாசப்படுத்தியபடி தொடர்ந்து பேசிய மகள் அன்னலட்சுமி, “எங்கப்பா அண்ணனுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அவங்க உயிர் போன பிறகு எங்க ளுக்குப் பல நெருக்கடிகள் வந்துச்சு. தனியார் பள்ளியில படிச்சுக்கிட்டிருந்த அண்ணன் மகனைத் தொடர்ந்து படிக்க அங்கே அனுமதிக்கலை. அங்கே இருந்த வேற எந்தப் பள்ளிக்கூடத்துலயும் பையனை சேர்த்துக்க மறுத்துட்டாங்க. பொதுச் சொத்தை மீட்கப் போராடி உயிரைவிட்ட எங்கப்பா, அண்ணன் மரணத்துக்கு அரசும் எந்த உதவியும் செய்யலை. மக்கள் பாதை இயக்கத் தினரும், தேசிய மக்கள் சக்தி கட்சியினரும் எங்க குடும்பத்துக்கும், வழக்குக்கும் துணையா இருந் தாங்க. அவங்கதான் என்னோட அண்ணன் பையனை சென்னையில் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கவெக்கிறாங்க.

“ஊருக்காக உயிரைவிட்டாங்க... எங்க கண்ணீரைத் துடைக்க யாருமில்லை!”

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும், 30 ஏக்கர் நிலத்தைக்கூட முழுசா மீட்கலை. அதனால நானும் எங்கப்பா வழியில் 198 ஏக்கர் ஏரி ஆக்கிரமிப்பை மீட்கக் கோரி 2020-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில வழக்கு போட்டேன். அதனாலயோ என்னவோ கடந்த ஆட்சியில எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கலை. என் அண் ணன் பையனைப் பார்க்க சென்னைக்கு ஒரு தடவை போயிட்டு வந்தாலே மூவாயிரம் ரூபாய் செலவாகுது. கடன் வாங்கித்தான் போயிட்டு வாறோம்.

எங்கப்பா வாங்கின கடன், நாங்க வாங்கின கடன்னு மொத்தமா மூணு லட்சம் ரூபாய் கடன் இருக்கு. கடனைக் கட்டச் சொல்லி பேங்க்குலருந்து நோட் டீஸ் மேல நோட்டீஸா வருது. விவசாயம் செய்யுற அளவுக்குப் பணமும் இல்லை. பாதுகாப்பு காரணமா கூலி வேலைக்குக் கூட போக முடியலை. அப்பாவும் அண்ணனும் இல்லாததால, குடும்ப பாரம் மொத்தத்தையும் சுமக்குறேன். கல்யாணக் கனவையெல்லாம் புதைச் சுட்டு, தங்கச்சிக்காகவும் அண்ணன் குடும்பத்துக்காகவும் வாழப்போறேன்” என்றார் வேதனையுடன்.

அன்னலட்சுமி
அன்னலட்சுமி
தமிழரசி
தமிழரசி

நல்லதம்பியின் மனைவி தமிழரசியிடம் பேசினோம். “2018-ல நடந்த கார் விபத்துல எனக்கு பலமா அடி பட்டு ருச்சு. கைகளிலும் இடுப் பிலும் பிளேட் வெச்சுருக்க றதால, என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. கணவர் கொல்லப்பட்ட பிறகு, வாழ்க்கையே கேள்விக் குறியாயிட்டதால கரூர் அய்யர்மலையில் இருக்கும் எங்கம்மா வீட்டுக்கு வந்துட்டேன். மகள் இனியா இங்க இருக்குற அரசுப் பள்ளியில அஞ்சாவது படிக்கிறா. எவ்வளவு காலத்துக்கு இப்படி அடுத்தவங்களை நம்பி வாழுறதுனு தெரியலை” என்று கலங்கினார்.

வீரமலை குடும்பத்துக்கு உதவியாக இருந்து வரும், மக்கள் பாதை அமைப்பின் நீதித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான தங்கவேல், “விபத்தில் இறப்பவர்கள், இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக்கூட அரசு உதவிகளைச் செய்கிறது. ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்து, சட்டப் போராட்டம் நடத்தியதற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் நிர்க் கதியாக நிற்கிறது. இந்த அரசாவது வீரமலை, நல்லதம்பி இருவரின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்து அந்தக் குடும்பம் வாழ வழிசெய்ய வேண்டும்” என்றார்.

தங்கவேல்
தங்கவேல்
பிரபுசங்கர்
பிரபுசங்கர்

இந்த விவகாரம் பற்றி, கரூர் மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் பிரபுசங்கரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அனைத்தையும் கவன மாகக் கேட்டவர், “அந்தக் கொலை வழக்கின் தீர்ப்பு பற்றி எனக்குத் தெரியும். ஆனால், அந்தக் குடும்பத்தின் நிலை குறித்து இதுவரை யாரும் என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை. தங்களின் கோரிக்கையை அவர்கள் மனுவாகக் கொடுத்தால், அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தகுதி இருப்பின், உரிய உதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

நீதிக்கான போராட்டத்தில் குடும்பத் தலைவர்களை இழந்து, பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக் கப்பட்டிருக்கும் இந்தக் குடும்பத்துக்கு அரசு உடனடியாக உதவ முன்வர வேண்டும்!