Published:Updated:

தொடர் வன்முறைகள்... சொந்தக் கட்சியினரையே சூடாக்கிய முதல்வர்... என்ன நடக்கிறது திரிபுராவில்?

திரிபுரா
பிரீமியம் ஸ்டோரி
திரிபுரா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்த 25 ஆண்டுகளில் திரிபுராவில் இவ்வளவு பெரிய மதக்கலவரங்கள் வெடித்ததே இல்லை.

தொடர் வன்முறைகள்... சொந்தக் கட்சியினரையே சூடாக்கிய முதல்வர்... என்ன நடக்கிறது திரிபுராவில்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்த 25 ஆண்டுகளில் திரிபுராவில் இவ்வளவு பெரிய மதக்கலவரங்கள் வெடித்ததே இல்லை.

Published:Updated:
திரிபுரா
பிரீமியம் ஸ்டோரி
திரிபுரா

வங்கதேசத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த துர்கா பூஜையில் இஸ்லாமியர்களின் புனித நூலான `திருக்குர்ஆன்’ அவமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்டு, 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 150-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க-வின் கூட்டணி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத், வங்கதேசத்தையொட்டியுள்ள திரிபுராவில் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியின்போது மசூதிகளுக்குத் தீவைக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. ஒரு வாரத்துக்கும் மேலாகக் கலவரம் தொடர்ந்த நிலையில் அங்கு ஆட்சி செய்யும் பா.ஜ.க இதை வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திரிபுரா கலவரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட பத்திரிகை யாளர்கள் உள்ளிட்ட 102 பேர்மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா) பாய்ந்திருக்கிறது. ``கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யாமல், அது குறித்து சமூக வலைதளங்களில் நியாயம் கேட்டவர்களைக் கைதுசெய்து, இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பப் பார்க்கிறது அரசு’’ என்று அங்கு ஆளும் பா.ஜ.க அரசுமீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இப்படி அரசைக் கேள்வி கேட்ட இடதுசாரிகளின் கட்சி அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த விவகாரத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடங்களில் 144 தடை உத்தரவை மட்டும் பிறப்பித்த மாநில பா.ஜ.க அரசு, வேறெந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துவருகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தொடர் வன்முறைகள்... சொந்தக் கட்சியினரையே சூடாக்கிய முதல்வர்... என்ன நடக்கிறது திரிபுராவில்?
தொடர் வன்முறைகள்... சொந்தக் கட்சியினரையே சூடாக்கிய முதல்வர்... என்ன நடக்கிறது திரிபுராவில்?

2018-ம் ஆண்டுதான் முதன்முதலாக திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதற்கு முன்பாக 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகவே இருந்தது திரிபுரா. ``மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்த 25 ஆண்டுகளில் திரிபுராவில் இவ்வளவு பெரிய மதக்கலவரங்கள் வெடித்ததே இல்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் திரிபுரா கலவரபூமியாக மாறிவிட்டது’’ என்கிறார்கள் திரிபுரா அரசியலை உற்றுநோக்குபவர்கள். திரிபுரா கலவரங்களையும், கலவரங்களை கட்டுப்படுத்தத் தவறிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் நவம்பர் 23 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கால்பதிக்கும் மம்தா!

இந்தக் கலவரங்களை அடுத்து, மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள திரிபுராவில் களமிறங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ், இஸ்லாமியர்களின் ஓட்டுகளைக் குறிவைத்து தீவிரமாகச் செயல்பட்டது. முன்னதாக, ‘திரிபுராவில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதால் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், தேர்தலைத் தள்ளிவைக்க மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், `உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.

பிப்லப் குமார் தேப்
பிப்லப் குமார் தேப்

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போதும் வன்முறைகள் தொடர்ந்தன. திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் பேசிய பொதுக்கூட்டத்தில் கூட்டமே இல்லாததைச் சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரஸின் இளைஞரணித் தலைவரும், பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ் கிண்டல் செய்ய... அவர் பயணித்த வாகனத்தைச் சிலர் அடித்து நொறுக்கினார்கள். ஆனால், பா.ஜ.க-வினர் மீது காரை ஏற்றிக் கொலைசெய்ய முயன்றதாக சயோனிமீது வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்தது திரிபுரா காவல்துறை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள். மம்தாவும் நவம்பர் 24 அன்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று, அகர்தலாவிலுள்ள சில வார்டுகளில் தங்கள் கட்சித் தொண்டர்களைப் பணி செய்யவிடாமல் பா.ஜ.க குண்டர்கள் வெளியேற்றிவிட்டனர் என்று குற்றம்சாட்டியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தென் திரிபுரா பகுதியிலுள்ள வார்டுகளில் ஆளும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதாகக் குற்றம் சுமத்தியது. பல்வேறு இடங்களில் இடதுசாரிகள், திரிணாமுல் தொண்டர்களுக்கும், பா.ஜ.க தொண்டர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்திருக்கிறது பா.ஜ.க அரசு.

தொடர் வன்முறைகள்... சொந்தக் கட்சியினரையே சூடாக்கிய முதல்வர்... என்ன நடக்கிறது திரிபுராவில்?
தொடர் வன்முறைகள்... சொந்தக் கட்சியினரையே சூடாக்கிய முதல்வர்... என்ன நடக்கிறது திரிபுராவில்?

மாற்றப்படுவாரா முதல்வர்?

இதற்கிடையில், நவம்பர் 23-ம் தேதியன்று திரிபுரா பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சுதீப் ராய் பர்மானும், ஆஷிஷ் சாகாவும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, ``திரிபுராவில் ஜனநாயகம் இல்லை. பா.ஜ.க-வின் 44 மாத ஆட்சியில் பல்வேறு சாதனைகளைச் செய்திருக்கும்போது, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வன்முறையை ஏன் கையிலெடுக்க வேண்டும்... நம் முதல்வர், மாநிலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் அரசியல் கலவரங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இப்படி சொந்தக் கட்சியினரே முதல்வருக்கு எதிராகக் கேள்வியெழுப்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, `முதல்வர் பிப்லப் குமார் மாற்றப்படுவாரா?’ என்கிற விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது!

திரிபுராவில் முழுமையாக அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism