Published:Updated:

இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்த முகவரி இல்லாத நிறுவனம் - உண்மை என்ன?

500 பில்லியன் டாலர் முதலீடுகள் குறித்து மட்டுமல்லாமல், இந்தியாவை பெருந்தொற்று இல்லாத நாடாக மாற்ற எங்களிடம் வலுவான திட்டங்கள் உள்ளது என்றும், எங்களின் திட்டங்களை செயல்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

Landomus realty ventures inc USA என்ற நிறுவனம் இந்தியாவில் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய விரும்புவதாக சில தினங்களுக்கு முன் செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் தேசிய கட்டமைப்பு வசதி அமைப்பு (என்.ஐ.பி) மற்றும் என்.ஐ.பி அல்லாத திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அதில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால் அந்த நிறுவனம் குறித்து தேடிப் பிடித்து ஆராய்ந்தால் `கிணத்தை காணவில்லை` என்பதை போலதான் முடிவு கிடைக்கிறது.

இந்தியாவை மறுகட்டமைக்கும் அரசின் திட்டத்துக்கு ஆதரவளிக்கவும், `5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜி.டி.பி` என்ற இலக்கை அடையவும் இந்தியாவுக்கு landomus realty ventures inc நிறுவனம் உதவி செய்யும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய இந்தியாவை உருவாக்கும் உங்களின் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பை கொடுங்கள் என அந்த விளம்பரத்தில் கோரப்பட்டிருந்தது.

தொழில் நிறுவனங்கள்
தொழில் நிறுவனங்கள்

அந்த நிறுவனத்தின் தலைவர் எஸ். பிரதீப் குமார் என்ற பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

இந்த விளம்பரம் வெளியானதுமே பலருக்கும் விசித்திரமாகத்தான் இருந்தது. பலர் சமூக வலைதளங்களில் இதுகுறித்த தங்களின் பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பினர்.

அந்த விளம்பரம் எழுப்பிய கேள்விகள்:

1. இத்தனை பெரிய தொகையை அதாவது 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இத்தனை பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்பும் ஒரு நிறுவனம் பிரதமரின் அலுவலகத்தை நேரடியாக அணுகாமல் ஏன் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறது என்பது?

2. இத்தனை லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்னவாக இருக்கும்? ஆனால் இந்த நிறுவனம் குறித்து இதுவரை யாருக்கும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஏன்?

3. முதலீடுகள் குறித்து மட்டுமல்லாமல், இந்தியாவை பெருந்தொற்று இல்லாத நாடாக மாற்ற எங்களிடம் வலுவான திட்டங்கள் உள்ளது என்றும், எங்களின் திட்டங்களை செயல்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. இது அனைத்தும் சேர்ந்துதான் அந்த விளம்பரம் விசித்திரமான ஒரு விளம்பரமாக அனைவருக்கும் தோன்றியுள்ளது.

எனவே இதுகுறித்து பல்வேறு ஊடகங்கள், செய்தியின் உண்மைத் தன்மையை பரிசோதிக்கும் வலைதளங்கள் இந்த விளம்பரம் குறித்து ஆராய்ந்தன.

தொழில் துறை
தொழில் துறை

தரவுகள் அற்ற வலைதளம்

முதலில் இந்த நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்றால் அதில் ஒரே பக்கம் மட்டுமே இருந்தது. அதிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் குறித்தோ செயல்பாடுகள் குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை. மேலும் அந்த ஒரு பக்க தளத்திலும், இந்தியாவில் தாங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளோம் என்ற அந்த விளம்பர செய்தியே வலைதளத்தின் செய்தியாக காணப்பட்டது.

மேலும் அந்த வலைதளத்தில் இந்திய அரசு, தனது மக்களுக்கு கொரோனா அல்லாத ஒரு ஆரோக்கியமான நாட்டை உருவாக்க விரும்புகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

`Our Team` என அந்த வலைதளத்தில் ஐந்து பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல பிரதீப் குமார் சத்யபிரகாஷ், சி.இ.ஓ மற்றும் சேர்மேன் என்றும் மீதி ஐந்து பேர் இயக்குநர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலோசகர்கள் என ஒரு ஐந்து பேரின் பெயரும் அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தனை பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்பும் ஒரு `மிகப்பெரிய` சொத்து மதிப்பு கொண்ட ஒரு நிறுவனத்தின் வலைதளத்தை போல அந்த வலைதளம் காட்சியளிக்கவில்லை. ஆனால் அதில் அந்த நிறுவனத்தின் முகவரி என அமெரிக்காவில் உள்ள முகவரி ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி-யில் வெளியாகியுள்ள செய்தியில், அதன் செய்தியாளர், குறிப்பிட்ட முகவரிக்கு சென்றதாகவும் அங்கு எந்த அலுவலகத்தையும் காணமுடியவில்லை என்றும், அங்கு வெறும் குடியிருப்புகள் மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வைத்து பார்த்தால் குறிப்பிட்ட முகவரியில் அந்த நிறுவனம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதைத் தவிர அந்த நிறுவனத்தின் வலைதளத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்தோ அல்லது இதற்கு முன்பு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் எந்த ஒரு தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

மேலும் தங்களின் இந்த திட்டம் குறித்து இந்திய அரசை தொடர்பு கொண்டதாகவும் அதற்கான பதிலுக்காக காத்திருப்பதாகவும், பிரதீப் குமார் தன்னை தொடர்பு கொண்ட ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசிடமிருந்து பதில் வந்ததும் இதுகுறித்த மேற்கொண்ட தகவல்களையும், தொடர்பான ஆவணங்களையும் பொது வெளியில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் எந்த அமைச்சகத்தை தொடர்பு கொண்டார் என்பது குறித்து எந்த ஊடகத்திடமும் கூறவில்லை.

மேலும் இந்த நிறுவனம் எங்கு எவ்வாறு பதியப்பட்டுள்ளது என்று ஆராய்ந்தால், பெங்களூருவில் நிறுவனங்களுக்கான பதிவகத்தில் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் Landomus Realty Ventures என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள S-415, 4th Floor, Manipal Centre, Dixon Road, Bangalore முகவரிக்கு தனது செய்தியாளர் சென்றதாகவும் அங்கும் அம்மாதிரியான எந்த நிறுவனமும் காணப்படவில்லை என்றும் பிபிசி-யின் செய்தி குறிப்பிடுகிறது.

ஆக இந்த நிறுவனத்திற்கு அமெரிக்காவிலும் அலுவலகம் இல்லை. இந்தியாவிலும் அலுவலகம். வலைதளத்தில் சரியான தகவல்களும் கிடைக்க பெறவில்லை.

- திலகவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு