Published:Updated:

யாரும் இங்கே தனியே இல்லை... - நெகிழவைத்த சௌமியாவின் திருமணம்!

சௌமியா - சுரேஷ் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
சௌமியா - சுரேஷ் திருமணம்

ஒன்பது மாதக் குழந்தையான சௌமியா, மற்றும் மூன்று மாதக் குழந்தையான மீனா இருவரின் நிலை இன்னும் பரிதாபம்.

யாரும் இங்கே தனியே இல்லை... - நெகிழவைத்த சௌமியாவின் திருமணம்!

ஒன்பது மாதக் குழந்தையான சௌமியா, மற்றும் மூன்று மாதக் குழந்தையான மீனா இருவரின் நிலை இன்னும் பரிதாபம்.

Published:Updated:
சௌமியா - சுரேஷ் திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
சௌமியா - சுரேஷ் திருமணம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தன் மனைவி கிருத்திகாவுடன் நேரில் வந்து வாழ்த்த, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர்போன்ற முக்கிய பிரமுகர்கள் விருந் தினர்களாகக் கலந்துகொள்ள, கடந்த பிப்ரவரி 6 அன்று நாகையில் நடந்த சௌமியா - சுரேஷ் திருமணம் தமிழக அளவில் செய்தி ஆனது. காரணம்... சௌமியா பெற்றோரை இழந்த, ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸால் வளர்க்கப்பட்ட, மணிவண்ணன் - மலர்விழி தம்பதியால் தத்தெடுக்கப்பட்ட பெண். யாரும் இங்கே தனியே இல்லை என்பதை உணர்வுப் பெருக்குடன் உணர்த்திய இந்தத் திருமண நிகழ்வின் பின் கதையைப் பார்ப்போம்...

யாரும் இங்கே தனியே இல்லை... - நெகிழவைத்த சௌமியாவின் திருமணம்!

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பேரலை யின் தாக்கத்தால் நாகை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பல உயிர்கள் பறிபோயின. ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்து நிராதரவாயினர். அக் குழந்தைகளுக்காக அரசால் ‘அன்னை சத்யா இல்லம்’ தொடங்கப்பட, பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் அங்கு வளர்க்கப் பட்டனர். அவர்களில் ஒன்பது மாதக் குழந்தையான சௌமியா, மற்றும் மூன்று மாதக் குழந்தையான மீனா இருவரின் நிலை இன்னும் பரிதாபம். காரணம், மற்ற குழந்தைகளுக்கு உறவுகள் இருந்தனர். இந்தக் குழந்தைகளுக்கு அப்படி யாருமில்லை. குழந்தைகள் சௌமியா, மீனா இருவரையும் தான் பொறுப்பாளராக இருந்து வளர்த்தார் அப்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன்.

பல்வேறு இடங்களுக்குப் பணி மாறுதலில் சென்றாலும், அவ்வப்போது நாகைக்கு வந்து இந்தக் குழந்தைகளோடு நேரம் செலவிட்டு, கல்வி, பராமரிப்புப் பொறுப்பையும் பார்த்துக் கொண்டார். இந்நிலையில், 18 வயதைக் கடந்த பின்னர் சௌமியா, மீனா இருவருக்கும் நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மணி வண்ணன் - மலர்விழி தம்பதி வளர்ப்புப் பெற்றோராகி, இப்போது சௌமியாவுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மலர்விழியிடம் பேசினோம். “2005 வரை வழக்கறிஞர் தொழிலை செய்து வந்தேன். பின் குழந்தைகள் நலம், குழந்தை உரிமை மேம்பாடு இவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.மாவட்ட குழந்தைகள் நல மேம்பாடு கமிட்டி யிலும் மெம்பராக உள்ளேன். எனவே அன்னை சத்யா இல்லத்தோடு எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அந்தக் காப்பகத்தில் 18 வயது வரை மட்டும்தான் குழந்தைகளைப் பராமரிக்க இயலும். மற்ற குழந்தைகளுக்கு, 18 வயதுக்கு மேல் அவர்களின் உறவினர்கள் வந்து அழைத்துச்சென்று விட்டனர். ஆனால் சௌமியா, மீனா இருவருக்கும் உறவுகள் யாரும் இல்லாத காரணத்தினால் இவர்களை மேற்கொண்டு எப்படி பராமரிப்பது என்ற தன் குழப்பத்தையும் வருத்தத்தையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார், என் நெருங்கிய தோழியான, இல்லத்தின் நன்னடத்தை அலுவலர் சௌதாமணி.

`எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். என்றாலும், சௌமியா, மீனாவை நான் தத்தெடுத்துக்கொள்கிறேன். நிச்சயம் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். கல்வி, எதிர்காலம் என நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவேன்’ என்றும் சௌதாமணி யிடம் கூறினேன். குழந்தைகளிடம், ‘எங்களைப் பெற்றோராக ஏற்றுக்கொண்டு, எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?’ என்று அவர்களது விருப்பத்தையும் கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.

பின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் எங்களை வளர்ப்புப் பெற்றோராக அனுமதித்து, முறைப்படி கடந்த 2020-ம் ஆண்டு குழந்தைகளை எங்களிடம் ஒப்படைத்தார். அன்று முதல் அவர்களை நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு இணையாக அன்பும், அக்கறையுமாக வளர்த்து வந்தோம். ‘ரெண்டு பொம்பளப் புள்ள, ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை’ என்று பலர் கேட்டாலும், என் பிள்ளைகளும், உறவுகளும் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள்’’ - அவ்வளவு நெகிழ்ச்சியான கதையை சொல்லி முடித்தபோது, கண்களில் நிறைவு மலர்விழிக்கு.

சௌமியா பி. ஏ. எக்கனாமிக்ஸ் முடித்துள் ளார். மீனா, பி.ஏ. வரலாறு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்த உசிலம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் - அன்னப்பெருமாள் தம்பதியின் மகன் சுபாஷ், டிப்ளோமா படித்து விட்டு , திருப்பூரில் நல்ல பணியில் உள்ளார். அவர், பெற்றோரை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்டு, அன்னை சத்யா இல்லத்தை அணுகியுள்ளார். அங்கு சௌமியாவைப் பற்றி அவருக்குத் தெரியவர, இப்போது டும் டும் டும் என்று சுபம்.

யாரும் இங்கே தனியே இல்லை... - நெகிழவைத்த சௌமியாவின் திருமணம்!

சௌமியா, மீனாவிடம் பேசினோம். ‘`அப்பாவுக்கு (ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்) இந்தக் கொரோனா பரவல் நேரத்துல நிறைய வேலை இருக்கும். ஆனாலும், அப்பாவும், அம்மாவும் (ராதாகிருஷ்ணன் மனைவி கிருத்திகா) கல்யாணத்துக்கு நேர்ல வந்து வாழ்த்தினாங்க. வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம்’’ என்று அவர்கள் பூரிக்க, ‘`மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இந்த திருமணத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங் கியதும், தஞ்சையைச் சேர்ந்த மாரிமுத்து சார், சென்னை வழக்கறிஞர் மார்க்கண்டேயன் போன்றவர்கள் செய்த உதவிகளையும் மறக்க இயலாது” என்றார் மலர்விழி.

சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் திருமண விழாவில் தம்பதியை வாழ்த்தியபோது, ‘`சுனாமி பேரலையால் நிராதரவான சௌமியா, மீனாவை நாங்கள் பார்த்துக்கொண்டோம். மலர்விழி - மணி வண்ணன் தம்பதி பாதுகாவலராக சௌமி யாவை வளர்த்தாலும், பெற்ற மகளை போல் அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்'' என்று நெகிழ்ந்தார்.