Published:Updated:

“மூக்கையும் வாயையும் பொத்திக் கொலை செய்திருக்கிறார்கள்!”

ராம்குமார் - சுவாதி
பிரீமியம் ஸ்டோரி
News
ராம்குமார் - சுவாதி

- ராம்குமார் மரணத்தில் வெளியாகும் பகீர் தகவல்கள்!

சுவாதி கொலை வழக்கில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட ராம்குமாரின் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கெனவே சிறைத்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு இது முரணாக இருப்பதால், மீண்டும் இந்த விஷயம் அனலைக் கிளப்பியிருக்கிறது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்வாதி, 2016, ஜூன் 24 அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமாருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாக, ஜூலை 1-ம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 2016, செப்டம்பர் 18 அன்று சிறையில் மின்சார வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தார்கள். தொடர்ந்து, சுவாதி கொலை வழக்கு முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

“மூக்கையும் வாயையும் பொத்திக் கொலை செய்திருக்கிறார்கள்!”

ஆனால், “ராம்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. சுவாதி மரணத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை. அந்த வழக்கை முடித்துவைப்பதற்காக ராம்குமாரை சிறையிலேயே கொலைசெய்துவிட்டார்கள்” என்று ராம்குமாரின் குடும்பத்தினரும், மனித உரிமை ஆர்வலர்களும் கொந்தளித்தார்கள். இதையடுத்து, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை, மாநில மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக ராம்குமாரை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துவரும் வழியில்தான் அவர் இறந்ததாகச் சிறை மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால், ‘ராம்குமாரை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோதே, அவரது உடலில் மரண விறைப்பு ஏற்பட்டிருந்தது’ என்று ராம்குமாரின் உடலை ஆய்வு செய்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் அப்துல் காதர் கடந்த செப்டம்பர் மாதம் மனித உரிமை ஆணையத்தில் சாட்சியம் அளித்திருந்தார். ராம்குமாரின் உடல் உறுப்பு திசுக்களை ஆய்வுசெய்த மருத்துவர்கள் வேணு ஆனந்த், ஆண்டாள் ஆகியோரும் ‘ராம்குமார் உடலில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் இல்லை’ என்று சாட்சி அளித்திருந்தனர்.

“மூக்கையும் வாயையும் பொத்திக் கொலை செய்திருக்கிறார்கள்!”

இந்த நிலையில்தான், நவம்பர் 23-ம் தேதி ராம்குமார் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம், சிறை மருத்துவர் நவீன் ஆகியோர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்திருக்கிறார்கள். இதில் மருத்துவர் நவீன், ‘சிறையில் ராம்குமாருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்துகள்தான் தற்போது இந்த விவகாரத்தை மீண்டும் விஸ்வரூபமெடுக்க வைத்திருக்கின்றன.

இது பற்றி ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் நம்மிடம், ‘‘ராம்குமார் சிறையில் மின்சார வயரைக் கடித்திருந்தால், சிறை மருத்துவர்தான் அவரை முதலில் சென்று பார்த்து, விபத்து பதிவேட்டில் அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்துப் பதிவு செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, ராம்குமாரைக் கொண்டு சென்ற மருத்துவமனையின் மருத்துவரிடம் அந்த விவரங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நவீன் அப்படி எதையும் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று மருத்துவர் அப்துல் காதர் சாட்சியம் அளித்திருந்தார். அதனால், விபத்து பதிவேட்டை ஆணையத்தில் நவீன் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர் ஒப்படைத்ததில், ராம்குமாருக்கு ‘கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் ராம்குமார் மரணமடைந்துவிட்டார் என்பது ஏறக்குறைய அங்கேயே உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

நாங்கள் நவீனிடம் விசாரணையின்போது இது குறித்து குறுக்கிட்டுக் கேட்டபோதும், ‘ஆமாம்... மரணம்தான்’ என்று ஒப்புக்கொண்டார். சிறை விதிகளின்படி, ஒருவர் மரணமடைந்துவிட்டால், உடனடியாக சிறைத்தலைவருக்கும், மாஜிஸ்ட்ரேட்டுக்கும், அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளரை உடனடியாக அங்கே அழைத்திருக்க வேண்டும். ஆனால், சிறை மருத்துவர் அதையெல்லாம் செய்யாமல், சில மருந்துகளைக் கொடுத்ததாகச் சொல்கிறார். இந்தத் தகவல்களையும் விசாரணை அதிகாரிகளிடம் நவீன் கொடுக்கவில்லை. இதன் மூலம் அவர் ஆவணங்களை மறைத்தது தெரிகிறது. அப்போது சிறைத்துறைத் தலைவராக இருந்த ஜெயராமன் ஏன் விபத்து பதிவேட்டைப் பார்த்து மருத்துவரை விசாரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அத்துடன், ராம்குமார் மரணமடைவதற்கு முந்தைய நாள் சிறைத்துறைத் தலைவராக ஜெயராமன் நியமிக்கப்பட்டதும், அவர் அ.தி.மு.க வி.வி.ஐ.பி-யின் சம்பந்தி என்பதும் இதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ராம்ராஜ்
ராம்ராஜ்

சுவாதியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, அவரை ஒருவர் மட்டுமே கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அந்தப் பழியை ராம்குமாரின் மீது போட நினைத்து அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். ராம்குமாரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, அவரது நெஞ்சை அழுத்திப் பிடித்து மூக்கையும் வாயையும் பொத்திக் கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அதை சிறை மருத்துவர் மறைத்திருக்கிறார். சிறைத்துறைத் தலைவர் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். நீதித்துறையும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்திருக்கிறது. ராம்குமாரின் வழக்கை 2018-ல் முடித்து வைக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் ராம்குமாரின் குடும்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. மாறாக, சிறைத்துறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என்றார் அவர்.

இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்துத் தெரிந்துகொள்ள, தி.மு.க-வின் சட்டத்துறை இணைச்செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான பரந்தாமனிடம் பேசினோம். ‘‘மனித உரிமை ஆணையத்தில் விசாரணை முழுமையடையாததால், இப்போதைக்கு அரசாங்கம் இதில் எதுவும் செய்ய முடியாது. விசாரணை முடிந்து, ஆணையத்திலிருந்து அரசுக்கு இது தொடர்பாக சிபாரிசு செய்யும்போது, உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

ராம்குமார்தான் குற்றவாளி என்று அப்போதைய அரசுத் தரப்பு சொல்லியிருக்கும் நிலையில், அடுத்தடுத்து அவர்கள் கொடுக்கும் தகவல்களில் ஏன் இத்தனை முரண்பாடுகள்?