Published:Updated:

‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளியே அத்தனை தூரம் தெரியாமலிருந்த சாத்தான்குளம், தற்போது இந்த போலீஸின் வெறியாட்டம் காரணமாக உலக அளவில் பிரபலமாகிவிட்டது.

‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளியே அத்தனை தூரம் தெரியாமலிருந்த சாத்தான்குளம், தற்போது இந்த போலீஸின் வெறியாட்டம் காரணமாக உலக அளவில் பிரபலமாகிவிட்டது.

Published:Updated:
சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

‘‘ஜெயிலுக்குள்ள கொண்டு வந்ததுமே அப்படியே சுருண்டு படுத்துட்டார் ஜெயராஜ். அவரோட மகன் பென்னிக்ஸ், ராத்திரி பூரா நின்னுக்கிட்டேதான் தூங்கினார்.

ரெண்டு பேரோட பின்பகுதியிலயும் ரத்தம் வழிஞ்சு ஓடிக்கிட்டே இருந்துச்சு. அந்தக் கொடூரத்தை நினைச்சாலே நெஞ்சு பதறுது...’’ - கோவில்பட்டி கிளைச்சிறைக்கு தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் குத்துயிரும் குலையுயிருமாக போலீஸாரால் அள்ளிவந்து போடப்பட்ட ரத்தம் தெறிக்கும் அந்த நிமிடங்களை இப்படி நடுநடுங்க விவரிக்கும் ராஜாசிங், ‘‘அவங்க ரெண்டு பேரும் செத்துப்போனதாலதான் இன்னிக்கு நான் உயிரோட இருக்கேன்’’ என்று கண்ணீர் வடித்தபடியே மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாத்தான்குளம் போலீஸின் கொலைவெறிக்கு இலக்காகி, கிட்டத்தட்ட உயிர்ப் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். இதுபோல இன்னும் பலரும் இந்தச் `சாத்தான்’ போலீஸாரிடம் சிக்கி, சிதைந்துபோயுள்ளனர். அந்தக் கண்ணீர்க் கதைகளெல்லாம் தற்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்து பகீரிடச் செய்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் ‘நாங்க போலீஸ் இல்லை... பொறுக்கி’ என்று இந்த சாத்தான் போலீஸின் வெறியாட்டங்களை வெட்ட வெளிச்சம் போட்டுக்கொண்டிருக் கின்றன.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளியே அத்தனை தூரம் தெரியாமலிருந்த சாத்தான்குளம், தற்போது இந்த போலீஸின் வெறியாட்டம் காரணமாக உலக அளவில் பிரபலமாகிவிட்டது. செல்போன் கடை உரிமையாளர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,

சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என முதல்வர் எடப்பாடி அறிவித் திருக்கிறார். கூடவே, அவருடைய அ.தி.மு.க-வும் 25 லட்ச ரூபாயை நிவாரணமாகக் கொடுத்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் நிவாரணம் வழங்கியுள்ளன. கூடவே, நாடு முழுக்க போலீஸாரின் இந்தக் கொடூரக் கொலைகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங் களும் போராட்டங்களும் தொடர்ந்தபடி யிருக்கின்றன. இந்தியாவையும் தாண்டி விவகாரம் பெரிதாகிக்கொண்டிருப்பது மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பத்தினர்!

பென்னிக்ஸின் சகோதரி பெர்சியிடம் ஆறுதல் தெரிவித்து நாம் பேசியபோது, ‘‘போலீஸ் ஸ்டேஷன்ல உள்ளவங்க எங்கப்பா கடையிலதான் செல்போன் ரீசார்ஜ் பண்ணுவாங்களாம். புது செல்போன் வாங்குவாங்களாம். பணம் கொடுக்காம செல்போன் கேட்டதுக்கு அப்பாவும் தம்பியும் கொடுக்கலையாம். அதை வன்மமா வெச்சுக்கிட்டுதான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கிட்டு இப்படி அடிச்சதா சிலர் சொல்றாங்க. அதுக்காக இப்படி அநியாயமா அடிச்சா கொல்வாங்க... அவங்களுக்கும் குடும்பம் இருக்குல்ல?

 ஸ்ரீதர் - பாலகிருஷ்ணன் - ரகு கணேஷ்
ஸ்ரீதர் - பாலகிருஷ்ணன் - ரகு கணேஷ்

அப்பாவையும் தம்பியையும் போலீஸ்காரங்க பிடிச்சுட்டுப் போனதும், ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கால்ல விழுந்து எங்க மாமா கெஞ்சியிருக்கார். இரக்கமே இல்லாம அவரைப் பிடிச்சு வெளியே தள்ளி ஸ்டேஷன் கதவைப் பூட்டியிருக்காங்க. நிறைய அரசியல்வாதிகளுக்கு போன் போட்டு மாமா உதவி கேட்டிருக்கார். யாருமே வரலை. இப்போ வர்றவங்கள்ல பத்துப் பேர் வந்திருந்தாக்கூட ரெண்டு பேரையும் காப்பாத்தியிருக்கலாமே...’’ என்று சொல்லிக் கதறினார்.

தோல் உரியும் அளவுக்கு விழுந்த அடி!

உயிரிழந்தோரின் உடல்களை விசாரணைக்கு வந்த நீதிபதியிடம் அடையாளம் காட்டியவர்களில் ஒருவர் ஜெயராஜின் மைத்துனர் (மனைவி செல்வராணியின் சகோதரர்) தாவீத். அவரிடம் பேச்சுக் கொடுத்ததுமே உடல் குலுங்க, கண்ணீர் பெருக்கெடுக்க, பேச்சு வராமல் தடுமாறினார். ஆசுவாசப்படுத்திய பிறகு, ‘‘மச்சான் ஜெயராஜ், மருமகன் பென்னிக்ஸ் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்யறதுக்கு முன்னாடி குடும்பத்தினர் சார்புல மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் முன்னிலையில பார்த்தேன். ரெண்டு உடம்புலயும் உச்சி முதல் உள்ளங்கால் வரை காயங்கள்தான். பல இடங்கள்ல லத்தி முனையால குத்திக் குத்தியே தோலை உரிச்சிருக்காங்க.

தொடைப் பகுதிகள்ல லத்தியால் அடிச்சதுல வரிவரியா தடம் பதிஞ்சிருந்தது. ஜெயராஜின் நெஞ்சுப்பகுதியில பூட்ஸ் காலால மிதிச்ச தடம் இருந்தது. ரெண்டு பேரோட பின்பகுதி முழுக்கவே தோல் இல்லாம உரிந்த நிலையிலதான் இருந்தது. பென்னிக்ஸோட ஆசனவாய்ப் பகுதியில லத்தியால குத்தினதுல ரத்தம் கட்டி கொப்பளமாகி யிருந்தது. கால் பாதத்துல அடிச்சதுல தோல் பிய்ந்திருந்தது. கை விரல்கள்லகூட தோல் உரிந்திருந்தது.

அந்தக் கொடூரத்தைப் பார்த்ததும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியலை. ரெண்டு பேர் உடம்பிலும் 52 இடங்கள்ல காயங்கள் இருந்ததை மாஜிஸ்ட்ரேட் உறுதிப்படுத்திக் கிட்டார். ஒவ்வொரு காயத்தோட அளவு, ஆழம், தன்மை எல்லாத்தையும் துல்லியமா குறிப்பெடுத்துக்கிட்டார். ‘உங்களோட இழப்புக்கு உரிய நீதி கிடைக்கும்’னு மாஜிஸ்ட்ரேட் உறுதியா சொன்னார். அதுக்குப் பிறகுதான் உடல்களை வாங்கச் சம்மதிச்சோம். எதிரிக்குக்கூட இப்படியொரு கொடூரம் நடக்கக் கூடாது’’ என்று சொல்லிவிட்டுக் கதறலைத் தொடர்ந்தார்.

அடுத்தடுத்து வெளியாகும் ஆவணங்கள்!

தந்தை, மகன் இருவரையும் போலீஸாருடன் சேர்ந்து ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரும் தாக்கியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர், சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக வருபவர்களை அடித்து, உதைப்பது எப்படி என்பது பற்றிப் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் விண்ணிலா உடல் தகுதிச் சான்று கொடுத்துள்ளார். உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் நல்ல நிலையோடு இருப்பதாக அவர் சான்று கொடுத்தது சர்ச்சை யாகியுள்ளது. சாத்தான்குளம் தலைமை மருத்துவர் ஆத்திகுமார் நிர்பந்தம் கொடுத்ததன் காரணமாகவே விண்ணிலா சான்று கொடுத்தார் என்று பிரச்னை வெடித்துள்ளது. ஆனால், ‘‘அன்று நான் விடுப்பில் இருந்தேன். இருவரையும் பரிசோதித்து அதன் அடிப்படையி லேயே உடல் தகுதிச் சான்று கொடுத்திருக்கிறார் விண்ணிலா. நான் நிர்பந்தித்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை’’ என்று சொல்கிறார் ஆத்திகுமார்.

சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்!

இதேபோன்ற குற்றச்சாட்டு சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் சரவணன் மீதும் பாய ஆரம்பித்துள்ளது. ‘ரத்தவிளாறாக இருந்தவர்களை ரிமாண்ட் செய்ய எப்படித்தான் மனது வந்ததோ...’ என்று பல பக்கங்களிலிருந்தும் கண்டனங்கள் பாய்கின்றன. இந்நிலையில், ‘கொரோனா நேரத்துல நீங்க நேர்ல போக வேண்டாம். ரெண்டு பேரும் நல்லாத்தான் இருக்காங்க’ என்று நீதிமன்ற தலைமை எழுத்தர் சரவணமுத்து சொன்னதன் அடிப்படையில், நேரில் பார்க்காமலேயே மாஜிஸ்ட்ரேட் சரவணன் ரிமாண்ட் செய்தார் என்று கூறப்படுகிறது. இது இப்படியிருக்க, இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் மயக்கமடைந்து மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார், நீதிமன்ற தலைமை எழுத்தர் சரவணமுத்து. தன்னைத் தாக்கியது யார் என்று தெரியவில்லை என அவர் கூறுவதால், தாக்குதலின் பின்னணி மர்மமாகவே இருக்கிறது.

கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கும் முன்பாக, காயங்களைப் பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் உள்ளே சேர்த்துக்கொள்ள மறுத்திருக்கிறார்கள். ஆனால், மேலிடத்திலிருந்து போன் வரவே, அனுமதித்துள்ளனர். என்றாலும், இருவருக்கும் பின்பகுதி, கால் உட்பட உடலில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பதிவுசெய்து கையெழுத்து மற்றும் கைரேகை பெற்ற பின்னரே உள்ளே அனுமதித்திருக்கின்றனர்.

கிளைச்சிறையில் இருவரையும் பரிசோதனை செய்த அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் எழுதிய பரிசோதனைச் சீட்டு வெளியாகி வைரலானது. ‘‘இருவரின் பின்பக்கத்திலும் அடிபட்டதற்கான காயங்கள் இருந்தன. ஜெயராஜுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. பென்னிக்ஸுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இருவரையும் ஸ்கேன், இ.சி.ஜி எடுக்க மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு சிறைக் காவலர்களிடம் தெரிவித்துவிட்டு வந்தேன்’’ என்று சொன்னார் டாக்டர் வெங்கடேஷ்.

கதறும் நேரடி சாட்சி!

ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சை மரணம் தொடர்பாக மாவட்ட நீதிபதி ஹேமா, கோவில் பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் ஆகியோர் கிளைச்சிறையில் இருப்போரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே இதே சாத்தான் போலீஸாரால் தாக்கப்பட்ட பனைகுளத்தைச் சேந்த ராஜாசிங் மூலமாகக் கசிந்திருக்கும் `திடுக்’ தகவல்கள் பதற வைக்கின்றன.

‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன. ‘‘போலீஸ்காரங்க அடிச்சதுல ராஜாசிங்கோட உடல் முழுக்க உள்காயங்களா இருக்கு. உடல்வலி அதிகம் இருக்கறதா சொன்னார். பின்பகுதியில் போலீஸ்காரங்க அடிச்சதுல தோல் உரிந்ததோடு, சதையும் கிழிஞ்சி தொங்கியிருக்கு. இப்போது வரை அதுக்குத்தான் அவர் சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கார்’’ என்று சொன்ன காந்தி, தொடர்ந்தார்.

‘‘ராஜாசிங், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்தப்போதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ரெண்டு பேரையும் அங்கே கொண்டு வந்திருக்காங்க. சிறைக்குள்ளே என்ன நடந்துச்சுன்னும் என்கிட்ட விரிவா ராஜாசிங் சொன்னார். ‘உள்ளே வந்தபோதே ஜெயராஜால் அவரோட வேட்டியைக் கட்டுற அளவுக்குக்கூட உடம்பு தெம்பு இல்லை. அப்படியே சுருண்டு படுத்துவிட்டார். சாப்பிடக்கூட எந்திரிக்க முடியாம தவிச்சார். பென்னிக்ஸ் உடம்புல நிறைய அடி. விலாவுல போலீஸ்காரங்க லத்தியால் குத்தினதுல மூச்சுவிட முடியாம சிரமப்பட்டார். உட்காரவோ படுக்கவோ முடியலை. ராத்திரி பூரா நின்னுக்கிட்டே இருந்தார். ரெண்டு பேரோட பின்பகுதியிலயும் ரத்தம் வழிஞ்சுக்கிட்டே இருந்தது. உரிய நேரத்துல ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தா பொழைக்க வெச்சிருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க. இப்போ நான் உயிரோட இருக்கறதுக்கு காரணமே அந்த ரெண்டு உயிர்களும்தான்’னு ராஜாசிங் சொன்னார்’’ என்று கலங்கிய கண்களுடன் விவரித்தார் காந்தி.

அ.தி.மு.க மீது அதிருப்தி!

தற்போது தமிழக வியாபாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், அரசியல்ரீதியிலும் சூட்டைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டர் நடந்தபோது தென்மாவட்டங்களில் இருக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அ.தி.மு.க எதிர்ப்பு மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது. அதனால் வணிகர் சங்கப் பிரதிநிதிகளின் துணையுடன் அந்த இன மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க அரசு இறங்கியிருக்கிறது.

இதற்கிடையே இந்த விவகாரத்தின் அதிர்ச்சி அலை உலக அளவில் பரவ ஆரம்பித்துள்ள சூழலில், உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய உளவுத்துறைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதை நம்மிடம் உறுதிப்படுத்தினார். நினைத்திருந்தால் நேரடியாகவே மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், தனியாகக் களம் இறங்குவதன் பின்னணியில் சாதி ஓட்டுக் கணக்குகளும் பா.ஜ.க-வுக்கு இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த விஷயம், முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு வந்ததும் கடும் அதிர்ச்சியடைந்தவர், சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இப்போதைக்கு கொந்தளிப்பை அடக்குவதுதான் முக்கியம் என்று பேசி முடிவெடுக்கப்பட, ‘வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைப்போம்’ என்கிற அறிவிப்பு முதல்வரிடமிருந்து அதிரடியாக வந்துள்ளது.

அதேசமயம், இதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினரிடமும் சரி, அரசியல் கட்சியினரிடமும் சரி, அவ்வளவு தூரம் வரவேற்பில்லை. ‘‘சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது இதுவரை எந்தவிதமான வழக்கும் பதியாத சூழலில், இதெல்லாம் கண்துடைப்பே. சொல்லப்போனால், காவல்துறையினரைக் காப்பாற்றுவதற்கு இதுவும் ஒரு யுக்தி’’ என்கிற விமர்சனங்கள் அலையடிக்கின்றன.

அது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும், காவல்துறையினரை தங்களுடைய ஏவல் துறையாகத்தான் பயன்படுத்துகின்றனர். அதனால், அவர்களும் ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாகவே செயல்படுகின்றனர். பதிலுக்கு அவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல், எத்தகைய சூழலிலும் அவர்களைக் காப்பாற்றுவதையே ஆளுங் கட்சியினர் வழக்கமாக வைத்துள்ளனர்.

அரசியல்வாதிகள் திருந்தாத வரையில், ‘சாத்தான்’ போலீஸும் திருந்தவே போவதில்லை என்பதுதான் நிதர்சனம்!

அண்ணனுக்கு பதிலாக தம்பி... உயிர் பறித்த சாத்தான் போலீஸ்!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் கொண்ட கூட்டணி, விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களைத் தொடர்ச்சியாக இதுபோன்று காவல்நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கிடைக்காததால், அவரின் தம்பி மகேந்திரன் என்பவரை அழைத்துச் சென்று அடித்ததில் அவர் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி

போலீஸாரின் மிரட்டல் காரணமாக இத்தனை நாள்களாக வாய் திறக்காமல் இருந்த மகேந்திரனின் தாய் வடிவு, தற்போது நம்மிடம் பேசினார். ‘‘கட்டட வேலை செய்யற மூத்த மகன் துரையை, உள்ளூரைச் சேர்ந்த ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருத்தரின் பேச்சைக் கேட்டு, எஸ்.ஐ ரகு கணேஷ் கொலை கேஸ்ல சேர்த்துட்டார். அவன் எங்கேயோ போய் ஒளிஞ்சுக்கிட்டான். அதனால, எதுவுமே தெரியாத சின்ன மகன் மகேந்திரனை போலீஸ் புடிச்சுட்டுப் போனாங்க. அண்ணன்காரனை மிரட்டுறதுக்காக கூட்டிட்டுப் போறாங்கனு பார்த்தா, இவனையே அடிச்சு நொறுக்கியிருக்காங்க. அவனால நிக்கக்கூட முடியலை.

தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனப்ப, ‘தலையில பலமா அடிபட்டதுல மூளைக்குப் போகும் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கு’னு சொன்னாங்க. அடுத்த ரெண்டு நாள்ல உடம்பைத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தோம். என் பையன் தப்பு செஞ்சிருந்தாக்கூட மனசு ஆறிடுமே... எதுவுமே செய்யாதவனை அநியாயமா கொன்னுட்டாங்களே...’’ என்றார் வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே.

மதபோதகரும் தப்பவில்லை!

மூன்று மாதங்களுக்கு முன்னர் பழனியப்பபுரத்தைச் சேர்ந்த லாசர் பர்னபாஸ் என்ற மதபோதகரை இதே சாத்தான் போலீஸ் தாக்கியுள்ளது. ‘‘நானும் ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்த எட்டு போதகர்களும் சேர்ந்து ஜெப கூடுகை நடத்தினோம். இது தொடர்பா விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் எங்களை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார். உள்ளே நுழைஞ்சதுமே கன்னத்துல ஓங்கி அடிச்சார். காதோடு அடிச்சதுல நிலைகுலைஞ்சுட்டேன். முதுகுத் தண்டுவடத்தை தடவியபடி குனியவெச்சு கை முட்டால ஓங்கிக் குத்தினார். நிமிர முடியாம நின்னப்போ, பின்பகுதியில லத்தியால சரமாரியா அடிச்சார். தொடை, பின்பகுதியில காயம் ஏற்படுற அளவுக்கு அடிச்சார் ரகுகணேஷ்.

லாசர் பர்னபாஸ்
லாசர் பர்னபாஸ்

மாற்றுத்திறனாளியான அப்பாதுரையை பாதிக்கப்பட்ட கால்லயே அடிச்சாங்க. பிறப்பு உறுப்புல அடிச்சு உதைச்சாங்க. விலாவுல லத்தியால குத்தினாங்க. ராமேஸ்வரத்துக்கு திரும்பின பிறகு, ஒரு வாரம் சிகிச்சை எடுத்துத்தான் குணமடைஞ்சார்.

ஸ்டேஷன்ல எங்களை அடிக்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டு, கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி வந்து கேள்வி கேட்டார். அவரையும் கன்னத்துல அடிச்சு, அவதூறாப் பேசி விரட்டினாங்க. ஊர்க்காரங்க திரண்டு வந்த பிறகே எங்களை விடுவிச்சாங்க’’ என்று அந்தக் கொடூர நிமிடங்களை விவரிக்கிறார் லாசர் பர்னபாஸ்.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, டி.ஐ.ஜி உள்ளிட்டோரிடம் புகார் அளித்த நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சிலின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெபசிங், ‘‘நாங்க எல்லா அதிகாரிகளுக்கும் புகாரளிச்சோம். அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தா, வரிசையா இப்படி உயிர்கள் பலியாகியிருக்காது’’ என்று வேதனையுடன் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism