Published:Updated:

சேலம்:`கொரோனா பரிசோதனை மாதிரிகள்; கவனக்குறைவால் தவறவிட்டிருக்கிறார்கள்!’ - 2 பேர் பணிநீக்கம்

பரிசோதனை மாதிரிகள்
பரிசோதனை மாதிரிகள்

கடந்த 2-ம் தேதி, மதியம் ஆத்தூர் டு சேலம் செல்லும் வழியில் கொத்தாம்பாடி என்ற இடத்தில், அன்று பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட எட்டு கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையோரமாகச் சிதறிக்கிடந்தன.

`சாலை ஓரத்தில் சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்?’ பொதுமக்கள் அதிர்ச்சி என்ற தலைப்பில், கடந்த 2-ம் தேதி விகடன் டிஜிட்டல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் சேலம் மாவட்டம், ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி என்ற இடத்தில் கொரோனா டெஸ்ட் மாதிரிகள் சிதறிக்கிடந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்று செய்தி வெளியிட்டிருந்ததோடு, மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட துணை இயக்குநர் தற்போது இரண்டு சுகாதாரப் பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறார்.

கடந்த 2-ம் தேதி, மதியம் ஆத்தூர் டு சேலம் செல்லும் வழியில் கொத்தாம்பாடி என்ற இடத்தில், அன்று பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட எட்டு கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையோரமாக சிதறிக்கிடந்தன. ``ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. அந்தப் பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அப்படிக் கொண்டு செல்லும்போது தவறி விழுந்திருக்கலாம்” என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்கள்.

கொரோனா
கொரோனா

ஆத்தூர் மருத்துவத்துறை துணை இயக்குநர் செல்வகுமாரும், அதிகாரிகளும் அந்தப் பகுதிக்கு வந்து இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டார்கள். இதில், சுகாதாரத்துறை தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஆகியோரின் கவனக்குறைவால் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றி ஆத்தூர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார், ``தலைவாசல் பகுதியிலுள்ள பல கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பணியில் சுகாதாரத்துறை தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் டூ வீலரில் செல்லும்போது கவனக்குறைவால் சில மாதிரிகளைத் தவறவிட்டிருக்கிறார்கள். அதனால் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு