Published:Updated:

வீட்டுக்கு வயது 222, தாழ்ப்பாள் இல்லாத கதவுகள், தழைத்தோங்கும் உறவுகள்!

 யோகபுலி வம்சத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
யோகபுலி வம்சத்தினர்

அதிசயம்

வீட்டுக்கு வயது 222, தாழ்ப்பாள் இல்லாத கதவுகள், தழைத்தோங்கும் உறவுகள்!

அதிசயம்

Published:Updated:
 யோகபுலி வம்சத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
யோகபுலி வம்சத்தினர்
ந்த வீடு கட்டப்பட்டு 222 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வீட்டின் கதவுகள் இதுவரை ஒரு முறைகூட பூட்டப்பட்டதே இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதுதானே?!

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த வரலாற்று வீடு. பூட்டப்படக் கூடாது என்பதற்காகவே வீட்டின் கதவில் தாழ்ப்பாள் அமைக்கப்படவில்லை. பின்புறக் கதவில்கூட தாழ்ப்பாள் இல்லை. ‘வீடு ஒரு கணப்பொழுதுகூட ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடக்கக் கூடாது; இங்கு எப்போதும் உறவுகள் நிறைந்திருக்க வேண்டும்’ என்பதுதான், தாழ்ப்பாள் வைக்கப்படாததன் நோக்கம். இரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும், முன்னோர்களின் விருப்பப்படியும் வாழ்த்துபடியும், ஒன்று கூடி வாழும் உறவுகளால் இன்றுவரை இந்த வீடு உயிர்ப்புடன் இருப்பது அழகு.

வீட்டின் முன்புறம்
வீட்டின் முன்புறம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்றாகப் பிறந்த அண்ணன், தம்பி குடும்பங்கள்கூட இன்று ஒரே வீட்டில் வாழ்வது சவாலாக உள்ளது. ஆனால், இப்போது இந்த வீட்டில் இரு வம்சாவளியைச் சேர்ந்த கிளைக் குடும்பத்தினர், இன்றுவரையிலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். மல்லிகா - வள்ளல் வேங்கடசாமி குடும்பம், விஜயா - முத்துக்குமார் குடும்பம், மகமு - சங்கரன் குடும்பம், தேன்மொழி - சரவணன் குடும்பம், சரோஜா - தங்கமுத்து குடும்பம், மகேஷ்வரி - உதயகுமார் குடும்பம் என இவர்கள் அனைவரும், இங்கு ஒரே கூரையின் கீழ் தனித் தனித் குடித்தனங்களாக வாழ்ந்துவருகிறார்கள்.

மல்லிகா, வீட்டின் கட்டட அமைப்பு பற்றி பகிர்ந்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின. ‘‘இது காவிரிக் கரையோர கிராமம்ங்கிறதால, எப்ப வேணும்னாலும் பெரு வெள்ளம் வரலாம். அந்த எச்சரிக்கை உணர்வோடு, தரை மட்டத்துலயிருந்து எட்டு அடி உயரத்துல இந்த வீட்டை கட்டியிருக்காங்க எங்க முன்னோர். வீட்டு முகப்புல ரெண்டடுக்குத் திண்ணை இருக்கு பாருங்க... பல ஊர்ப் பஞ்சாயத்து இந்தத் திண்ணையில நடந்திருக்கு...’’ என்று அவர்கள் காட்ட, அந்தத் திண்ணைகளின் பிரமாண்டம் நம் கடைவிழி வரை ஓடியது. கலைநயம் மிக்க அழகிய மர வேலைப்பாடுகளுடன்கூடிய வாயிற் நிலை, கதவுகள் காலங்கள் கடந்தும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றன. ‘‘இந்தப் பகுதியிலேயே இதுதாங்க பழைமையான மாடி வீடு. காலப்போக்குல இங்க பல மாடி வீடுகள் வந்துட்டாலும், இன்னிக்கு வரை எங்க ஊர் மக்கள் இந்த வீட்டை மட்டும்தான் ‘மாடி வீடு’னு சொல்வாங்க’’ என்றார் மல்லிகா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

200 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த பெரும் செல்வந்தர், யோகபுலி நாட்டார். இவரின் ஐந்தாவது மனைவி அகிலாண்டம். இந்தத் தம்பதியின் மகன்களான வீரநாட்டார், அங்கு நாட்டார் ஆகியோர் காலத்தில்தான் வீடு கட்டப்பட்டதாகச் சொல்கிறது யோக புலி வரலாற்று நூல். இவர்களுடைய வம்சாவளியினர் ஏழு தலைமுறைகளாக, பல குடும்பங்களாகக் கிளைவிட்டு, இன்று வரை இந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் தமிழறிஞர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ஒருவர். இவர், இருபதாம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்துள்ளார்.

யோகபுலி வம்சத்தினர்
யோகபுலி வம்சத்தினர்

தலைமுறைகள் கடந்தாலும், வம்ச ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும், எக்காலத்திலும் பாகப் பிரிவினை நடந்துவிடக் கூடாது என்பதற்காக, இவ்வீட்டின் கட்டுமானத்தில் சில தனித்துவங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றிச் சொன்னார், முத்துக்குமார். ``தலைமுறைகளா ஒரே குடும்பமா வாழ்றது சாத்தியமில்லாம போனாலும், ஒரே வீட்டுல தனித் தனி குடித்தனங்களா, ஆனா ஒத்துமையா அவங்க வாழ்ற மாதிரி வீட்டை கட்டமைச்சிருக்காங்க.

ஒரே பகுதியில நாலு படுக்கை அறைகளும், வீட்டுக்கு பின்புறம் நாலு சமையல் அறைகளும் அமைச்சிருக்காங்க. படுக்கை அறையோடு சேர்ந்தோ, பக்கத்துலயோ சமையலறை இருந்தா, அந்தக் குடும்பம் அந்த ரெண்டு அறைகளுக்குள்ளேயே புழங்கிக்குவாங்க. ஒரு குடும்பம் மத்த குடும்பங்களோடு பேசி, பழக வாய்ப்புகள் குறைஞ்சிடும். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாதுங்கிறதாலதான் தனி சமையலறைகள் ஏற்பாடு. படுக்கை அறை, சமையலறை மட்டுமல்ல, முகப்பிலிருந்து கொல்லைவரை ஊரும் உறவுமா சேர்ந்து வாழ்ற மாதிரிதான் கட்டியிருக்காங்க’’ என்றார்.

கொல்லைப்புறம் to முன் பகுதி
கொல்லைப்புறம் to முன் பகுதி

எல்லா குடும்பத்தினருக்கும் பொதுவான முகப்புக்கூடம், அதைத் தொடர்ந்து பரந்து விரிந்து காட்சி அளிக்கும் இளைப்பாறல் கூடம், அடுத்து ஒரு முற்றம். முற்றத்தில் ஓர் அம்மி, ஆட்டுக்கல், கல் உரல் உள்ளன. அவற்றைப் பார்க்கும்போது, ஏழு தலைமுறைகளாக அவற்றைப் பயன்படுத்திய இவ்வீட்டுப் பெண்களின் காட்சிகள் மனக்கண்ணில் வந்துபோயின. வீட்டின் பின்புறம் எல்லோருக்கும் பொதுவான ஒரு கோயில் இருக்கிறது. நான்கு குடும்பத்தினருக்கும் தனித் தனி விவசாய நிலம். வீட்டின் கொல்லைப்புறத்தில் நான்கு குடும்பத்தினரும் தனித் தனியாக ஆடு, மாடுகள் வளர்க்கிறார்கள்.

மகமு, ‘‘200 வருஷம் ஆனாலும் வீட்டை எப்படி பராமரிச்சுட்டு வர்றோம் பாருங்க...’’ என்று பெருமையாகச் சொல்ல, வீட்டின் கதவுகள் பளபளவெனப் பளிச்சிடுவதைக் காட்டிய நம் கண்களை நம்பாமல், விரல்களாலும் தடவிப் பார்த்தோம். தொடர்ந்த மல்லிகா, ‘‘நாங்க எல்லாரும் இங்க தனித் தனி வரவு செலவா வாழ்ந்தாலும், ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, எல்லா குடும்பங்களும் சேர்ந்து செலவு பண்ணி இந்த வீட்டை பராமரிச்சுட்டு வர்றோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு ஹால், ரெண்டு பெட் ரூம் வீடுகளையே பராமரிக்க முடிவதில்லையே... இந்த வீட்டுப் பராமரிப்பு எப்படி சாத்தியமாகிறது?

பின்புறம் உள்ள கோயில், முற்றம்
பின்புறம் உள்ள கோயில், முற்றம்

சரோஜா சொல்கிறார்... ‘‘நம்ம வீட்டுல திண்ணை, ஹால், முற்றம், கொல்லைப்புறம்னு எல்லாமே ரொம்பப் பெருசு. ஆனாலும்கூட, ‘இன்னைக்கு நீ கூட்டு’, ‘நாளைக்குத்தான் நான் கழுவுவேன்’னு எல்லாம் அட்டவணை போடாம, யாரும் யாரையும் எதிர்பார்க்காம, எல்லாருமே ஆர்வமா வீட்டை கூட்டி, பெருக்கினு சுத்தமா வெச்சிருப்போம். தெனமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாங்க எல்லா குடும்பமும் ஒண்ணா சேர்ந்து திண்ணையில, ஹால்லனு உட்காந்து பேசிக்கிட்டிருப்போம்’’ - கூட்டுக் குடும்பத்தின் ஜீவன் அந்த வீடெங்கும் நிறைந்திருப்பதை உணரமுடிகிறது.

கூடம்
கூடம்

முத்துக்குமார், வீட்டின் மற்ற சிறப்பம்சங் களைப் பகிர்ந்தார். ‘‘முற்றத்துலயிருக்கிற அம்மி, ஆட்டுக்கல்லை எல்லாம் இப்பவும் பயன்படுத்திட்டுதான் இருக்கோம். எந்தக் குடும்பத்துல விசேஷம்னாலும் அப்போ ஒரே சமையல்தான் நடக்கும். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்துக்குவோம். இந்த வீட்ல, பல தலைமுறைகளா ஒரு மண் பானை இருக்கு. அதுல ஒரு தாலி, புடவை இருக்கும். முன்னாடி இந்த வீட்ல வாழ்ந்த மங்கலிகாரம்மான்ற பெண்ணை சாமியா கும்பிட்டுட்டு வர்றோம்’’ என்றார் பரவசத்துடன்.

‘‘வெளாடுறதுக்கு நாங்க தெருவுக்குப் போயி ஆளு தேட வேணாம்... வீட்டுலேயே நிறைய புள்ளைங்க இருக்கோம்’’ - ஓரிடத்தில் நிற்காமல் சொல்லியபடியே சுற்றிவந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகள்.

இறுதியாக யோகபுலி வம்சத்தினர், ``20 வருஷத்துக்கு முன்னாடி 40, 50 பேரோட, வீடு எப்பவும் ஜேஜேனு கல்யாண மண்டபம் மாதிரி கலகலப்பா இருக்கும். கால ஓட்டத்துல சிலர் படிப்பு, வேலைனு வேற இடங்களுக்குப் போயிட்டாங்க. இப்ப இந்த வீட்ல பெரியவங்க, குழந்தைங்கனு 20 பேர்கிட்ட இருக்கோம். எங்க முன்னோர்கள் தெய்வமா இந்த வீட்ல இருக்காங்க. அதனாலதான், அவங்க ஆசைப்படி இந்த வீடு இதுவரை பூட்டப்படாம ஆளும் பேருமா இருக்கு. இனியும் தொடரும்னு உறுதியா நம்புறோம்” என்றனர் ஒற்றுமையுடன்.

222 வயது இளமையுடன் நிற்கிறது யோகபுலியாரின் மாடி வீடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism