நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரு உலைகள் இயங்கிவருகின்றன. சுற்றுப்புற கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் மீறி இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது.

கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 2016-ம் ஆண்டு தொடங்கிய அந்தப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருவதால், 3-வது அணு உலையிலிருந்து 2022-ல் மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது அணு உலைக்கான பணிகளை 2023-ம் ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியா - ரஷ்யா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடுதலாக இரு அணு உலைகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி 5 மற்றும் 6-வது அணு உலைக்ளுக்கான பணிகள் இன்று தொடங்கின. இரு அணு உலைகளைக் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டு, முதல் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கியது.

தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன்கொண்ட இந்த அணு உலைகளை அமைக்க 49,621 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் காணொலிக் காட்சி மூலம் பார்வையிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கூடங்குளத்தில் அமைக்கப்படும் 5-வது அணு உலையிலிருந்து 2027-ல் மின்சாரம் உற்பத்தியாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 6-வது அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2028-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் இந்திய அணுசக்தித்துறை தலைவர் கே.என்.வியாஸ், ரஷ்ய அணு சக்தி ஏற்றுமதிக் கழக இயக்குநர் அலெக்சி லிக்காசெவிச் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலந்துகொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குநர் ராஜிவ் மனோகரன் காட் பிளே., திட்ட இயக்குநர்களான எம்.எஸ்.சுரேஷ், சின்னவீரன், கூடுதல் பொதுமேலாளர் அன்புமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.