Published:Updated:

`ZOOM கால் மூலம் 3,500 ஊழியர்கள் பணி நீக்கம்!’ - வருவாய் இழப்பால் ஊபர் நிறுவனம் எடுத்த நடவடிக்கை

ஊபர்
ஊபர்

ஊரடங்கு சமயத்தில் ஜூம் மூலம் ஊபர் நிறுவனம் தனது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஒன்றும் புதிதல்ல.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழிற்துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஊபர் நிறுவனம் தங்களது 3,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 14 சதவிகிதம் ஆகும். இந்த அறிவிப்பை ஊபர் நிறுவனம், ஊழியர்களுடனான தனது 3 நிமிட ஜூம் காலில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் ஊபர் டாக்சி சேவையானது பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் இந்நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஊழியர்களுக்கு (customer support employees) எந்த விதமான வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதோடு ஊபரின் முதல் காலாண்டு முடிவிலும் $2.9 பில்லியன் அளவுக்கான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செலவுகளைக் குறைக்கும் விதமாக வாடிக்கையாளர் ஆதரவு அளிக்கும் ஊழியர்களில் 3,500 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Zoom App
Zoom App

இந்த வேலை நீக்க அறிவிப்பை ஊபர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அலுவலகத்தின் அதிகாரி ரூஃபீபின் சாவ்லேயே தெரவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், "தற்போது பயணங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் முன்னணியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஊழியர்களுக்கு எந்த விதமான வேலையும் இல்லை. இதனால் 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நாங்கள் பணி நீக்கம் செய்கிறோம். இதுவரை உங்களது சேவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுவே உங்களது கடைசிப் பணி நாளாக இருக்கும்” எனத் தெரிவித்தார். இந்த அதிரடி வேலை நீக்க அறிவிப்பானது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதைப்பற்றி ஊபர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தாரா கோஷ்ரோவ்ஸாஹி கூறுகையில், "இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழலை எதிர்த்துப் போராடி வருகிறோம். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது நிச்சயம் நாங்களும் முன்னேற்றத்தை அடைவோம்" என்றார். மேலும் இவர் தனது அடிப்படை சம்பளத்தைப் பெறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வேலை
வேலை
pixabay

ஊரடங்கு சமயத்தில் ஜூம் மூலம் உபர் நிறுவனம் தனது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கயுள்ளது ஒன்றும் புதிதல்ல. இதைப் போன்று முன்னரே ஸ்கூட்டர் ஷேரிங்க் நிறுவனமான 'பேர்ட்' ஜூம் கால் மூலம் தனது 406 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் அன்பியும் தனது பணியாளர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவிகிதத்தை குறைக்கப் போவதாகத் தெரிவித்திருந்தது. இது அந்நிறுவனத்தின் 7,500 மொத்த பணியாளர்களில் 1,900 பணியாட்கள் வரை இருக்க கூடும். ஆனால், இந்நிறுவனம் இந்த அறிவிப்பை சற்றே மாறுதலாக ஒரு நீண்ட தகவல் மூலம் தன் பணியாளர்களிடம் தெரிவித்தது. தொழில்துறையில் ஏற்பட்ட சரிவு காரணமாக பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பையும், சம்பள குறைப்பையும் அறிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊரடங்கு முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் நிச்சயம் தொழிற்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு