Published:Updated:

உதயச்சந்திரன் முதல் அனு ஜார்ஜ் வரை.. முதல்வரின் தனிச் செயலாளர்கள்! - ஒரு பார்வை

தனி செயலாளர்கள்
தனி செயலாளர்கள்

முக்கியமாக முதலமைச்சருக்கான தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வாராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தல், தமிழகத்தின் கடன் சுமை குறைத்தல் போன்ற ஏராளமான சவால்களை எதிர்நோக்க உள்ளார். இந்நிலையில், தனது ஆட்சி நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சில அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இறையன்பு ஐஏஎஸ்-ஐ பணியமர்த்தியுள்ளார். மேலும் முக்கியமாக முதலமைச்சருக்கான தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அறிவித்துள்ளார்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் முதன்மை தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், இதற்கு முன்பாக, தொல்லியல் துறை இயக்குனராகப் பதவி வகித்து வந்துள்ளார். 1995-ம் ஆண்டு, தனது 23-வது வயதில், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 35-வது இடத்தை பிடித்தார். இவர் ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, தொழில்நுட்பப் பூங்கா, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டுவந்துள்ளார். உதயச்சந்திரன் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்
உதயச்சந்திரன் ஐஏஎஸ்

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்தபோது சமச்சீர் கல்வி பாடத்திட்ட வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றினார். மாணவர்களுக்கு இருந்து வந்த தர மதிப்பீட்டு முறையினையும் மாற்றியமைத்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது, இணையம் சார் விண்ணப்ப அமைப்பு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் மற்றும் கணிப்பொறி சார் தேர்வுகள் போன்ற புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தினார். மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, மகளிர் சுய உதவி குழுக்களின் ஏழைப்பெண்களுக்கான கடனுதவி, ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையாராக இருந்துபோது, வீடுகட்டும் திட்டத்தில் பயன்பெற ஏழை மக்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு மின்னணுக்கழத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, ஐடி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைப் பெற்றது, தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இயக்குநராக இருந்தபோது லட்சக்கணக்கான அரிய நூல்களை மின்னுருவாக்கம் செய்தது, தொல்லியல் துறை இயக்குநராக இருந்தபோது, கீழடி அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்தியது போன்ற எண்ணற்ற சாதனைப்பணிகளை தான் பதவிவகித்த அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுத்தி தனிமுத்திரைப் பதித்தவர் உதயச்சந்திரன்.

உமாநாத் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உமாநாத் ஐஏஎஸ், அடிப்படையில் ஓர் எம்.பி.பி.எஸ். மருத்துவர். 2001-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

உமாநாத் ஐஏஎஸ்
உமாநாத் ஐஏஎஸ்

அந்த சமயத்தில், பல்வேறு நலத்திட்ட மற்றும் மாவட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு திறம்பட செயல்பட்டதால், சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என்ற பெயரினைப் பெற்றார். தனி செயலாளராக நியமிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகித்தார். மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா சூழலிலும் தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளார்.

எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், இதற்கு முன்பாக, அருங்காட்சியக இயக்குநராகப் பதவி வகித்து வந்துள்ளார். 2002-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.

எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்
எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்

முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பாரத் டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்க முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். அதன் பின்னர், நிகழ்ந்த அரசியல் அழுத்தம் காரணமாக அருங்காட்சியகத் துறைக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

அனு ஜார்ஜ் ஐஏஎஸ்:

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அனு ஜார்ஜ் ஐஏஎஸ், இதற்கு முன்னதாக தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை இயக்குனராக பதவி வகித்து வந்துள்ளார். 2003-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சிபெற்று பணியில் சேர்ந்த இவர், தொழில்துறை ஆணையராக பணியாற்றினார்.

அனு ஜார்ஜ் ஐஏஎஸ்
அனு ஜார்ஜ் ஐஏஎஸ்

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி சடங்குகளுக்கானப் பணிகளை ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுடன் இணைந்து வழிநடத்தினார். குறிப்பிடும்படியாக, அங்கன்வாடி ஊழியர் பணி நியமணங்களில், எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தகுதி அடிப்படையில் பணியமர்த்தியவர். இதனால் அனு ஜார்ஜ், தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் நால்வரும் தான் முதலமைச்சரின் நான்கு தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு தற்போது கொரோனா பெரும் சிக்கலாக இருக்கிறது. தொடர்ந்து நிதி மேலாண்மை, சுகாதாரம், தொழில்துறை என பல்வேறு சிக்கல்களை களைய இந்த தனி செயலாளர்கள் முதல்வருக்கு உதவுவார்கள் என முதல்வரும், மக்களும் நம்புகிறார்கள்.!

அடுத்த கட்டுரைக்கு