Published:Updated:

“இந்தியாவை யாரும் புறக்கணிக்க முடியாது!”

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

‘‘தாலிபன்களை ‘சண்டை செய்வதற்கென்றே பிறந்த ஆட்களோ' என நினைத்திருக்கிறேன். சுமார் இரண்டு ஆண்டுகள் அங்கு இருந்தேன்.

“இந்தியாவை யாரும் புறக்கணிக்க முடியாது!”

‘‘தாலிபன்களை ‘சண்டை செய்வதற்கென்றே பிறந்த ஆட்களோ' என நினைத்திருக்கிறேன். சுமார் இரண்டு ஆண்டுகள் அங்கு இருந்தேன்.

Published:Updated:
கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

கடந்த ஆண்டின் இறுதியில் ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தற்போது இன்னொரு அண்டை நாடான இலங்கையில் அசாதாரணச் சூழல். பிரதமர் பதவியிலிருந்து அகற்ற‌ப்பட்டிருக்கிறார் மகிந்த ராஜபக்சே. ‘அதிபர் நாற்காலி இன்னும் எத்தனை நாளோ’ என்கிற அச்சத்திலேயே இருக்கிறார் அவரின் சகோதரர் கோத்தபய; உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு அல்லல்படுகிறார்கள் இலங்கை மக்கள். இப்படியான சூழலின் பின்னணியில், உள்நாட்டுப் புரட்சி, போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிதைந்துபோன நாடுகளைப் புனரமைக்கும் பணிகளைச் செய்துவருகிறது ஐ.நா. சபையின் சர்வதேச அரசியல் மற்றும் அமைதி காப்புத் துறை. இதில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த கண்ணனைச் சந்தித்தேன்.

‘‘வடசென்னையின் வண்ணாரப்பேட்டையில் பிறந்தவன் நான். பள்ளி, கல்லூரிப் படிப்பை இங்க முடிச்சுட்டு சட்டம் படிக்க அமெரிக்கா போனேன். அங்கேயே ‘சர்வதேச உறவுகள்' பாடத்துல பிஹெச்.டி-யும் பண்ணினேன். பிஹெச்.டி பண்ணின இன்ஸ்டிட்யூட்ல எனக்கு சீனியர் சசி தரூர். என் தோழி ஒருத்தரின் சகோதரி சசி தரூரின் தோழியா இருந்தாங்க. அந்தத் தொடர்புல சசி தரூர் மூலமாகத்தான் எனக்கு இந்த ஐ.நா வேலை கிடைச்சது. இண்டர்நேஷனல் சிவில் சர்வீஸ்ங்கிற இந்தப் பதவியில இது என்னுடைய 28வது வருஷம்'' என்றவரிடம் சில கேள்விகளை வைத்தேன்.

``உங்களுடைய பணியின் தன்மை குறித்துச் சொல்ல முடியுமா?’’

‘‘அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாம சீர் குலைஞ்ச நாடுகள், போரால் பாதிக்கப்பட்ட நாடுகள், உள்நாட்டுக் கலவரம், பொருளாதார நெருக்கடி மற்றும் தீவிரவாதத்தால் கட்டமைப்பு குலைந்துபோன நாடுகளை மறுசீரமைக்க உதவுவதுதான் ஐ.நா சர்வதேச அரசியல் துறையின் முதன்மையான வேலை. நிர்வாகம் முழுமையாகத் தோல்வி அடைந்த நாடுகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை வரையறை செய்வதிலும் எங்கள் பங்கு இருக்கும். தேர்தல்களை நடத்தி ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க உதவுவோம். ஒருவேளை இரு நாடுகளுக்கு இடையில் போர் மூளும் சூழல் நிலவினால் அதைத் தடுக்கும் முயற்சிகளையும் எடுப்போம். இந்த எல்லா நடவடிக்கைகளுமே சம்பந்தப் பட்ட நாடுகளின் இறையாண்மை பாதிக்கப்படாதவாறு, அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மை ஆதரவு பெற்றே நடைபெறும்ங்கிறதுதான் இதுல முக்கியமான விஷயம். சம்பந்தப்பட்ட நாடு அனுமதிக்காத ஒரு பிரச்னையில் எங்களால் தலையிட முடியாது. உதாரணமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த புதிதில் ஐ.நா அனுப்பிய உண்மை அறியும் குழுவை இலங்கை அனுமதிக்கவில்லை. அந்த மாதிரியான சூழலில் எங்களால் எதுவும் செய்ய முடியாது.''

கண்ணன்
கண்ணன்

``பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகளுக்கு ஐ.நா எத்தகைய உதவிகளைச் செய்கிறது? இலங்கை விவகாரம் குறித்து?’’

‘‘பொருளாதார நெருக்கடியின்போது ஐ.நா-வின் அங்கமான ஐ.எம்.எஃப் மூலம் உதவிகள் கிடைக்கலாம். மனிதாபிமான அடிப்படையில் ஐ.நா., சர்வதேசக் கொடையாளர்களைப் பரிந்துரை செய்வதும் நடக்கிறது. சர்வதேச சமூகத்தின் உதவிகள் மூலம் நாளடைவில் பொருளாதாரச் சிக்கல் தீர்ந்துவிடும். இலங்கையில் இப்போது பொருளாதாரச் சிக்கல். ஆனால் இனப் பிரச்னையும் அங்கு காலங்காலமாக நீடிக்கிறது. இனப்பிரச்னைக்கு எங்களிடம் வந்த போஸ்னியாவுக்கு ஒரு தீர்வைச் சொன்னோம். ஆனால் இலங்கை இனச் சிக்கலைத் தீர்க்க வேண்டி ஐ.நா-வை நாடியதே இல்லை. இலங்கையின் வருங்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில் அங்கு அனைத்து மக்களும் சமமாக, பாதுகாப்புடன் சகல உரிமைகளுடனும் வாழும் சூழல் உருவாக வேண்டும்.’’

``ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபன்கள் வசம் வந்துள்ளது. அங்கு பணிபுரிந்திருக்கிறீர்கள்தானே?’’

‘‘தாலிபன்களை ‘சண்டை செய்வதற்கென்றே பிறந்த ஆட்களோ' என நினைத்திருக்கிறேன். சுமார் இரண்டு ஆண்டுகள் அங்கு இருந்தேன். ஆப்கன் வரலாறு நீண்டது. ஆங்கிலேயர்களே தோல்வியடைஞ்ச ஒரு இடம் அது. மன்னராட்சி, அதன்பின் ஜனநாயக ஆட்சி, முஜாகிதீன்கள் என பல குழப்பங்களைச் சந்தித்த நாடு.

முஜாகிதீனை எதிர்த்துக் கிளம்பிய மாணவர் படைதான் தாலிபன். உண்மையைச் சொல்லணும்னா தாலிபன்கள் ரொம்பவே எளிமையானவர்கள். ஆனா பெண்களுக்கு எந்த உரிமையும் தராமப்போனது, கல்லால் அடிச்சுக் கொல்கிற மாதிரியான தண்டனை முறைகள், தாலிபன்களை உலகம் அங்கீகரிக்க மறுக்க முக்கியக் காரணங்களாச்சு.

வருஷக்கணக்குல சீர்குலைஞ்சுபோயிருந்த நாட்டுல அரசியல் அமைப்பை உருவாக்கியது, போலீஸ் ஃபோர்ஸை உருவாக்கியது, இப்ப தாலிபன்கள் ஆட்சியைப் பிடிச்சதும் தப்பிச்சுப் போனாரே, அஷ்ரப் கனி... அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட தேர்தலை நடத்தியதுன்னு பல பணிகள் நடைபெற்றபோது நான் அங்கதான் இருந்தேன்.

மறுபடியும் தாலிபன்கள் ஆட்சியைப் பிடிச்சதுக்கு முக்கியமான ஒரு காரணம் நாங்க கொண்டு வந்த அரசுகள் ஊழல் அரசாங்கங்களா இருந்ததுதான். முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் இருந்த தாலிபன்கள், இந்த ஊழல் அரசை சுலபமா வீழ்த்திட்டாங்க. இனி அந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்கிறது போகப் போகத்தான் தெரிய வரும்.''

``இன்றைய தேதியில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு எந்த அளவில் உள்ளது?’’

‘‘130 கோடி பேர் இருக்கோம். மக்கள்தொகை அடிப்படையில் உலகத்துக்கு நம் பங்களிப்பு பெரியது. அதனால நம்மை யாரும் புறக்கணிக்க முடியாது. அதாவது உலகத்துக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் ஒரு கெடுதல் செய்யலாம். அதாவது இந்த தேதிக்கு உலகை மிரட்டுகிற ‘பருவநிலை மாற்றம்' விஷயத்துல மொத்த உலகத்துக்கும் மூன்றாவது வில்லன்னா அது இந்தியாதான். அமெரிக்காவும் சீனாவும் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.

இதற்கு நேர்மாறா ஒரு நன்மதிப்பு நமக்குக் கிடைக்கணும்னா பொருளாதார ரீதியா உயரணும். நாம இன்னும் அந்த இடத்துக்குப் போகலை. தென் கொரியா சின்ன நாடுதான். அவங்களுடைய வளர்ச்சி இன்னைக்கு கவனிக்கப்படக்கூடிய ஒண்ணா இருக்கு. சிங்கப்பூரைக்கூட இன்னொரு உதாரணமாச் சொல்லலாம். நம்மிடம் இருக்கிற அரசியல் நிலைத்தன்மை, ஜனநாயகத்துடன் இந்தப் பொருளாதார வளர்ச்சி மட்டும் வந்துட்டா உலக அளவில் எடுக்கப்படற முடிவுகள்ல ஆதிக்கம் செலுத்துகிற ஒரு நாடா இந்தியா மாறிடலாம். ஆனா இன்னைக்கு நிலைமைக்கு நாம ஒரு தவிர்க்க முடியாத ரீஜினல் பவர், அவ்வளவுதான்.’’