Published:Updated:

சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!

சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!
பிரீமியம் ஸ்டோரி
சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!

15 முறைக்கும் மேல் சென்னை வந்திருக்கிறார் காந்தி. முதல்முறை தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் கோட்-சூட் அணிந்து வந்து பேசினார்.

சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!

15 முறைக்கும் மேல் சென்னை வந்திருக்கிறார் காந்தி. முதல்முறை தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் கோட்-சூட் அணிந்து வந்து பேசினார்.

Published:Updated:
சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!
பிரீமியம் ஸ்டோரி
சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சென்னையின் வரலாற்றை மீட்டு ஆவணப்படுத்தும் பணியில் தீவிரமாக இயங்குபவர். ‘Madras Local History Group' என்ற பெயரில் இவர் ஒருங்கிணைக்கிற முகநூல் பக்கத்தில் சின்னச்சின்னதாகப் பதிவிடப்படும் செய்திகள், வரலாற்றைத் தேடுபவர்களுக்குக் பெருங்கதவுகளைத் திறக்கும். வரலாற்றின் நீட்சியைப் புனைவாக்கி இவர் எழுதும் நாவல்களுக்கும் பெரிய கவனம் கிடைக்கிறது. வெங்கடேஷ் ராமகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினேன். சுதந்திரப் போராட்டத்தில் சென்னையின் பங்களிப்பு பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்திலிருந்து விரிந்தது அந்த உரையாடல்.

‘‘வல்லபாய் படேல்கூட ‘சுதந்திரப் போராட்டத்தில் சென்னையின் பங்களிப்பு குறைவு’ என்கிறார். சென்னை என்பது வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய நகரம். அவர்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் இங்கே மக்கள் வந்தார்கள். இங்கு வீறுகொண்டு களமாட மன்னர்கள் எவரும் இல்லை. ஆனாலும் சென்னையிலும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், பிற பகுதிகளில் நடந்த போராட்டங்கள் அளவுக்கு இங்கு நடந்தவை பதிவாகவில்லை.

1919-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடப்பதற்கு முன்பு இங்கு இணக்கமான சூழலே இருந்துள்ளது. 1911-ல் ஜார்ஜ், இந்தியாவின் மன்னராக முடிசூட்டிக்கொள்கிறார். அதை ஒட்டி டெல்லியில் ஒரு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இந்தியா முழுவதுமிருந்து 40 ஓவியர்கள் பங்கேற்றார்கள். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் கவிஞரும் அதில் பங்கேற்று, ஜார்ஜ் மன்னருக்கு பாரத மாதா முடிசூட்டுவது போல ஓவியம் வரைந்து மன்னர் கையால் முதல் பரிசு வாங்கினார். அவர் வரைந்த ஓவியம் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் எங்காவது கிடைக்கக்கூடும்.

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

காங்கிரஸ் கட்சியின் விதை ஊன்றப்பட்டது சென்னையில்தான். எக்மோர் லாயர்ஸ் குரூப்பைச் சேர்ந்த 13 பேர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு முன்பாக ஒரு இடத்தில் அமர்ந்து பேசினார்கள். அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக அதற்கு அடுத்த வாரத்தில் மும்பையில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்கள்.

அன்னிபெசன்ட், ‘நியூ இந்தியா’ என்ற இதழில் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்து எழுதினார். தங்களுக்கு எதிராக இதழ்களில் எழுதினால் வீட்டை ஜப்தி செய்துவிடுவோம் என்று மிரட்டியது பிரிட்டிஷ் நிர்வாகம். ஆனாலும் அன்னிபெசன்ட் ஓயவில்லை. அவரைக் கைது செய்தார்கள். அப்போது ‘நியூ இந்தியா’ பத்திரிகையை சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார் அன்னிபெசன்ட். புத்தி சாதுர்யமுள்ள ராமசாமி, தற்போதைய எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு மரத்தில் ‘நியூ இந்தியா' என்ற போர்டை மாட்டிவிட்டு அதற்குக் கீழே அமர்ந்து எழுதினார். ஜப்தி செய்ய முடியாதல்லவா?

15 முறைக்கும் மேல் சென்னை வந்திருக்கிறார் காந்தி. முதல்முறை தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் கோட்-சூட் அணிந்து வந்து பேசினார். காந்தியின் வாழ்வில் மும்பை முக்கியமான ஊர். ஆனால் அவர் எடுத்த முக்கியமான முடிவுகள் இங்கேதான் நிகழ்ந்துள்ளன. சத்தியாகிரகத்தை இங்குதான் தொடங்கினார். ஆடை இங்குதான் மாறியது.

சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!

காங்கிரஸில் மிதவாதிகள் குழு ஒன்று இருந்தது. ‘வெள்ளைக்காரர்களோடு சண்டை கூடாது... பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்' என்றது இந்தக்குழு. சீனிவாச சாஸ்திரி என்பவர்தான் அதற்குத் தலைவர். காந்தி அவரை ‘அண்ணா' என்று அழைப்பார். ‘சில்வர் டங்' சீனிவாச சாஸ்திரி என்று அவருக்கு இன்னொரு பெயர் உண்டு. அவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுவார். காந்தியின் சுயசரிதையை அவர்தான் எடிட் செய்து கொடுத்தார். அவர் சென்னைக்காரர். காந்தியும் இவரும் நெருக்கமான நண்பர்கள். ஆனால் போராட்டத்தில் முரண்பட்டு நின்றதால் இவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். தென்னாப்பிரிக்காவில் இவர்மீது குண்டுவீச்சுகூட நடந்தது. அமெரிக்காவில் இவர் பேசவிருந்த கூட்டம் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. காந்தி சென்னை வந்தபோது மூன்றுமுறை சீனிவாச சாஸ்திரியைப் போய்ப் பார்த்தார்.

அந்தக் காலத்தில் ஐகோர்ட் பீச் என்று ஒன்று இருந்தது. இப்போது அது இல்லை. காந்தி அந்த பீச்சில் 3 லட்சம் மக்களுக்கு மத்தியில் உரையாற்றினார். காந்தி சென்னை வந்தால், நாலணா புத்தகங்களால் புகழ்பெற்ற ஜி.ஏ.நடேசன் வீட்டில் தங்குவார். அல்லது, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க் பக்கத்தில் இருந்த மங்களவிலாஸ் லாட்ஜில் தங்குவார்.

1921-ல் ஜார்ஜ் மன்னரின் மகன் எட்வர்ட் வருகிறார். அவருக்குத் துணையாக மவுண்ட்பேட்டன் வந்தார். காந்தி, ‘ஒரு ஊரில்கூட இளவரசரை வரவேற்கக்கூடாது. அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும்' என்கிறார். சென்னையில் அதற்கான பொறுப்பு டி.எஸ்.எஸ் ராஜன், தொழிற்சங்கத் தலைவர் சிங்காரவேலர் இருவரிடமும் வழங்கப்பட்டது. இப்போதைய ராஜாஜி ஹாலில் ஒரு வரவேற்புக் கூட்டம் நடந்தது. முறைப்படி அப்போதைய மேயர் பிட்டி தியாகராயர் இளவரசரை வரவேற்க வேண்டும். ஆனால் தியாகராயரை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் மக்கள் மறித்தார்கள். வீடும் தாக்கப்பட்டது. மிகப்பெரும் போராட்டம். துப்பாக்கிச்சூடு நடந்து, உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தது. 50 ஆண்டுகள் கழித்து மவுண்ட்பேட்டன் எட்வினாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘எதிர்ப்பால் இளவரசர் மிரண்டுவிட்டார்' என்று இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

இந்த வன்முறை காந்திக்குப் பிடிக்கவில்லை. சிங்காரவேலரையும் ராஜனையும் கடுமையாகக் கண்டித்தார். சிங்காரவேலர் கோபத்தில் காங்கிரஸிலிருந்து விலகிவிடுகிறார். டி.எஸ்.எஸ் ராஜன் பற்றிச் சொல்லியாக வேண்டும். ரங்கத்தில் பிறந்தவர். காந்தியோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ராயபுரம் மெடிக்கல் ஸ்கூல், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக மாறியது.

சென்னையில் நடந்த இன்னொரு குறிப்பிட்டதகுந்த நிகழ்வு, நீல் சிலையகற்றுப் போராட்டம். நீல், சிப்பாய் கலகத்தை ஒடுக்கியவர்களில் முக்கியமானவர். பீரங்கிகளில் இந்தியர்களைக் கட்டிவைத்துச் சுட்டவர். அவருக்கு அண்ணா சாலையில் ஒரு சிலை வைக்கப்பட்டது. 1927-ல் இந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காமராஜரெல்லாம் இதில் பங்கேற்றார். காந்தியும் இதை ஆதரித்தார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த எந்த நாட்டிலும் அவர்கள் ஆட்சி இருந்த காலத்தில் ஒரு வெள்ளைக்காரரின் சிலையை அகற்றிய சரித்திரமே இல்லை. சென்னையில் அது நடந்தது. நீல் சிலை மியூசியத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1931-ல் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம். இதிலும் சென்னை வரலாறு பதிவாகவில்லை. வேதாரண்யம் போராட்டமே முதன்மையாகப் பேசப்படுகிறது. சென்னை உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தமிழக வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. அந்தப் போராட்டத்தைச் சென்னையில் நடத்த ராஜாஜி விரும்பவில்லை. காரணம், இங்கே பீச் அருகிலேயே இருப்பதால் பெரிய அளவில் போராட்டம் நீளாது என்று எண்ணினார். அதனால் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கிப் போராட்டம் நடந்தது.

இதில் சென்னைக்காரர்களுக்கு வருத்தம். குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களுக்கு. அவர்கள் திருவல்லிக்கேணியில் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பிரகாசம், காசித்தூணி நாகேஸ்வரராவ் உட்பட பலர் போராட்டத்தில் முன்னின்றார்கள். துர்காபாய் தேஷ்முக், முதல் மிஸ் மெட்ராஸ் டி.சூரியகுமாரி இருவரும் தெலுங்குப் பாடல்களைப் பாட, போராட்டம் தொடங்கியது. போலீஸ் கடுமையாகத் தாக்கியது. தினமும் மாறி மாறிப் போராட்டம் நடந்தது. தடியடியில் மூன்று பேர் இறந்தார்கள். அதைக் கண்டித்து நடந்த போராட்டத்திலும் உயிர்ப்பலிகள் நடந்தது. மெரினா கடற்கரை உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் பெரிய அளவில் வரலாற்றில் பதிவாகவில்லை.

சென்னையின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு!

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள். ராஜாஜி அந்தப் போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். சென்னையில் மாணவர்கள் அந்தப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தார்கள். பச்சையப்பா கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் முழுமையாகப் பங்கேற்றார்கள். பெண்கள் கிறித்தவக் கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் குதித்தார்கள். ரயில் மறியல், தடியடி எனப் பல நிகழ்வுகள். அப்போது கார் வைத்திருப்பவர்கள் வெள்ளைக்காரர்களாகவே இருப்பார்கள். அல்லது, அவர்களுக்கு வேண்டியவர்களாக இருப்பார்கள். சென்னை முத்துசாமி பாலத்தில் மாணவர்கள் மூட்டை மூட்டையாகக் கற்களைக் கொண்டுவந்து கார்கள் மீது வீசி எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். பச்சை நிறத்தில் ஒரு கார் வருகிறது. மாணவர்கள் நிறுத்துகிறார்கள். ஜன்னலைத் திறக்கும் வெள்ளைக்காரர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து மாணவர்களைச் சுட்டுவிட்டுக் கிளம்பிவிடுகிறார். அதில் ஒரு மாணவர் இறக்கிறார். சுட்டது யாரென்று தெரியவில்லை. நான்கு நாள்கள் கழித்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த பயர் என்பவர், `பாதுகாப்புக்காக நான்தான் சுட்டேன்' என்று சரணடைந்தார்.

சுவாமிநாதன் என்ற வழக்கறிஞர் இருந்தார். அவர் மனைவி அம்முக்குட்டி. அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு சட்டக்குழுவில் இடம்பெற்றவர் இந்த அம்முக்குட்டி. பெரிய குடும்பம். வீட்டில் ஆங்கிலம்தான் பேசுவார்கள். பெரும் தனவந்தர்.

காமராஜர் அரங்கத்துக்கு எதிரில் பிரின்சஸ் ஸ்கூல் என்ற பள்ளி இருந்தது. அங்குதான் ராஜாக்கள், ஜமீன்களின் பிள்ளைகள் எல்லாம் படித்தார்கள். ஜமீன்களின் பிள்ளைகள் இருவர், ஒரு பிரச்னையில் பள்ளியின் வெள்ளைக்கார முதல்வரைத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றார்கள். ஒரு மாணவர் அப்ரூவராகிவிட, இன்னொரு மாணவருக்காக சுவாமிநாதன் வழக்காடுகிறார். அந்த வழக்கில் அந்த மாணவர் விடுதலை செய்யப்படுகிறார். அதனால் வெள்ளைக்காரர்கள் சுவாமிநாதன் மேல் கோபமடைந்து பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள். சுவாமிநாதன் உடனடியாக, ஆங்கில உடைகள் அனைத்தையும் சாலையில் போட்டு எரிக்கிறார். ‘இனிமேல் வீட்டில் தன் தாய்மொழி தமிழ், அம்முக்குட்டியின் தாய்மொழி மலையாளம் மட்டுமே பேசுவோம்’ என்று அறிவிக்கிறார். அம்முக்குட்டி காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகக் களமாடினார். இவரது மகள்தான் நேதாஜி படையில் இணைந்து போராடிய லட்சுமி சாகல்.

இப்படி சென்னையின் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் பெரும்பாலானவை பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. முழுமையாக இவை ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும்’’ என்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.