Published:Updated:

`போலீஸ்காரனுக்குப் பொண்ணு தரமாட்டேன்னு சொல்றாங்க!' - வேலையை ராஜினாமா செய்த ஹைதராபாத் காவலர்

ராம் பிரசாத்

காவல்துறையில் பணியாற்றுவதால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் எனக் கூறி ஹைதராபாத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.

police
police

பொறியியல் பட்டதாரியான சித்தாந்தி பிரதாப், தெலங்கானா காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாகச் சேர்ந்துள்ளார். கடந்த ஒருவருடமாக சார்மினார் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்குப் பெண் தேடும் போது காவலர் பணியைக் காரணம் காட்டி வரன்கள் அமையவில்லை. இதனால் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்த பிரதாப் காவலர் பணியை ராஜினாமா செய்வதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Letter
Letter

பிரதாப் எழுதிய கடிதத்தில், ``நான் சித்தாந்தி பிரதாப். பொறியியல் பட்டதாரியான நான் காவலர் பணியில் கொண்ட ஈடுபாடு காரணமாக 2014-ம் ஆண்டு இணைந்தேன். என்னுடைய ஈடுபாடு காரணமாக உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றேன். கடந்த சில மாதங்களாக ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். என்னுடன் பணியாற்றிய சில மூத்த காவலர்கள் 35 முதல் 40 வருடங்கள் வரையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் போது எந்த புரமோஷனும் இல்லாமல்தான் விடைபெற்றுள்ளனர். காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் ரேங்க்கில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனம் மற்றும் பெட்ரோல் படி எல்லாம் கிடைப்பதில்லை. புரமோஷனும் இல்லை, அலவன்ஸும் இல்லை.

தற்போது எனக்கு 29 வயதாகிறது. திருமணம் செய்ய முடிவு செய்து எனது குடும்பத்தினர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். இரண்டு மூன்று வரன்கள் வந்தது. ஆனால் அவையெல்லாம் அமையாமல் போனது. இதுகுறித்து எனது உறவினர்களிடம் கேட்டபோது காவல் பணியைக் காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்தது தெரியவந்தது. காவலர்களுக்கு 24 மணிநேரமும் வேலை இருக்கும். புரமோஷன் எல்லாம் ஒண்ணும் இருக்காது எனக்கூறியது, என்னை மனதளவில் பாதித்தது. என் பணியே எனக்கு மனச்சோர்வை அளித்தது. தயவுகூர்ந்து எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Letter
Letter

காவலரின் இந்தக் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஹைதராபாத் கமிஷனர் இந்த விவகாரத்தில் காவலர் பிரதாப்-க்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.