Published:Updated:

“மேடம், கொஞ்சம் நில்லுங்க!” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...

சிறுசேரி ஐ.டி பார்க்
பிரீமியம் ஸ்டோரி
சிறுசேரி ஐ.டி பார்க்

அச்சத்தில் சிறுசேரி ஐ.டி பார்க் பெண் ஊழியர்கள்

“மேடம், கொஞ்சம் நில்லுங்க!” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...

அச்சத்தில் சிறுசேரி ஐ.டி பார்க் பெண் ஊழியர்கள்

Published:Updated:
சிறுசேரி ஐ.டி பார்க்
பிரீமியம் ஸ்டோரி
சிறுசேரி ஐ.டி பார்க்

கடந்த வாரம், நமது விகடன் அலுவலகத்துக்கு ஒரு போன்கால் வந்தது. ‘‘சிறுசேரி ஐ.டி பார்க்குல சாயங்காலத்துக்கு மேல பெண்கள் தனியா நடந்து போக முடியல. புதர்ல இருந்து யாரோ ‘மேடம் நில்லுங்க, கொஞ்சம் பேசணும்’னு கூப்பிடுறாங்க. பயமா இருக்கு... கொஞ்சம் கவனிங்க’’ என்று பதற்றத்துடன் பேசினார் ஒரு பெண்.

சென்னைக்கு அருகில் உள்ள இந்தச் சிறுசேரி ஐ.டி பார்க்கில்தான், 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உமாமகேஸ்வரி என்கிற ஐ.டி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்தது. இந்த நிலையில் இப்படி ஒரு போன்கால்.

“மேடம், கொஞ்சம் நில்லுங்க!” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...

நாம் நேரில் சென்றோம். 581 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது சிறுசேரி ஐ.டி பார்க்! மொத்தம் 46 ஐ.டி நிறுவனங்கள் இங்கு உள்ளன. அவற்றில் சுமார் 90,000-க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதில் சரிபாதிப் பேர் பெண்கள். நுழைவுவாயிலில் ஆளே இல்லாத ‘ஆர்ச்’ நம்மை வரவேற்றது. சென்னையில் சாதாரண ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைய வேண்டுமென்றாலே, காவலாளியிடம் கையெழுத்திடுவதோடு எந்த வீட்டுக்குச் செல்கிறோம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இவ்வளவு பேர் பணிபுரியும் இந்த வளாகத்துக்குள் யார் உள்ளே வருகிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் ஆவணப்படுத்தவும் எவருமே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நுழைவுவாயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஒரு சி.சி.டி.வி கேமராகூட இல்லை. பிரச்னையே இந்த இடைப்பட்ட பகுதியில்தான். நுழைவுவாயிலில் இருந்து ஐ.டி நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதி வரை இருபுறமும் ஆள் உயரத்துக்குப் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. மின்கம்பங்களில் பல்புகள் உடைந்து இருந்தன. இந்தப் பகுதியில் துப்புரவுப்பணியில் இருக்கும் பெண் ஒருவர், ‘‘ராத்திரியானாலே மெயின் ரோட்டுக்குப் போறதுக்குள்ள உசுரு போயிரும்ங்க. இங்கிருந்து மெயின் ரோட்டுக்குப் போற ரோட்டுல லைட் எரியுறதேயில்ல. சிப்காட் ஆபீஸ்ல சொன்னா, ‘ஐ.டி கம்பெனிக்காரங்கதான் இதுக்கெல்லாம் செலவு பண்ணணும்’னு சொல்றாங்க. ஐ.டி கம்பெனிக் காரங்களோ, ‘எத்தனை தடவை லைட் மாட்டினாலும் யாராவது கல்லெறிஞ்சு உடைச்சுடுறாங்க. இதுக்குமேல நாங்க என்ன பண்றது?’னு கேட்கிறாங்க.

சிறுசேரி ஐ.டி பார்க்
சிறுசேரி ஐ.டி பார்க்

லைட் வெளிச்சம் இல்லாததால, குடிகாரங்க, கஞ்சா இழுக்கிறவங்க எல்லாரும் புதர்ல உட்கார்ந்துடுறாங்க. நைட் தனியா போற பொண்ணுங்களைப் பார்த்து, ‘மேடம்... ஒரு நிமிஷம் நில்லுங்க’னு சவுண்டுவிடுறாங்க. சில சமயம் மொபைலைத் தட்டிப்பறிச்சுட்டும் ஓடிடுறாங்க. எத்தனையோ தடவை இதையெல்லாம் புகாரா கொடுத்துப்பார்த்தாச்சு. பெரிய அசம்பாவிதம் நடக்கிறதுக்கு முன்னால, இதையெல்லாம் தடுக்கணும்’’ என்றார். இதே கருத்தைத்தான் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பல பெண்களும் பெயர் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பொதுவாவே, ‘நைட் 7 மணிக்குமேல பெண் ஊழியர்கள் தனியா வெளியே போகாதீங்க. கால்டாக்ஸி புக் பண்ணிப் போங்க. இல்லைன்னா, வெயிட் பண்ணி மத்தவங்களோடு கூட்டமா போங்க’னு சொல்றோம். ஆனா, பெண் ஊழியர்கள் பலரும் இதை கேட்கிறதேயில்ல. அவங்க இஷ்டத்துக்கு வெளியே போறதால்தான் பிரச்னையே. கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும்தான் நாங்க சி.சி.டி.வி கேமரா வைக்க முடியும். ரோடெல்லாமா வைக்க முடியும்?’’ என்றார் சிறுசேரி சிப்காட்டில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றின் மனிதவளத் துறை மேலாளர் ஒருவர்.

இந்தக் கருத்தை `சுத்த அபத்தம்’ என்கின்றனர் சிப்காட்டில் பணிபுரியும் பெண் ஊழியர்கள். ‘‘இரவு 8 மணிக்கு ஷிஃப்ட் முடிஞ்சு கிளம்பும்போது, கால்டாக்ஸி ஈஸியா கிடைக்காது. மெயின் ரோட்டுக்குப் போனா ஆட்டோ, பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போயிடலாம். நான் போய்தான் என் பிள்ளைங்களுக்குச் சமைச்சுக் கொடுக்கணும். என்னை மாதிரி எத்தனையோ பொண்ணுங்க ஆபீஸ் முடிஞ்சு போய் குடும்பத்தையும் பிள்ளைங்களோட படிப்பையும் கவனிக்கிறாங்க. கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போனா வேலையை முடிச்சிடலாமேனுதான் போறோம்.

இங்க இருக்கிற ஐ.டி கம்பெனிங்கெல்லாம் ஒவ்வொரு மாசமும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் பாக்குது. இவங்ககிட்ட இருந்தும் எங்ககிட்ட இருந்தும் வரிப் பிடித்தமா கோடிக்கணக்குல அரசாங்கம் வாங்குது. ஆனா, யாராலயும் ஒரு லைட் போட முடியல. அரை கிலோமீட்டர் தூரத்துக்குக்கூட எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியல. ‘நீ ஏன் தனியா நடந்து போற?’னு பொண்ணுங்களை கேள்வி கேட்கிறது மட்டும் என்ன நியாயம்?’’ என்று கொதித்தார் பெண் ஊழியர் ஒருவர்.

அவர் கேள்வியில் நியாயம் இருக்கிறது. புதருக்குள் நாம் சென்று பார்த்தபோது, தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளையும், கஞ்சா பொட்டலங்களைச் சுற்றப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் பார்க்க முடிந்தது. சிகரெட் அட்டைகள் ஆங்காங்கே சிதறி இருந்தன. பீர்பாட்டில்கள் திசைக்கு ஒன்றாகக் கிடந்தன.

சிறுசேரி ஐ.டி பார்க்
சிறுசேரி ஐ.டி பார்க்

இரவு நேரத்தில் இந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் வெளியே தெரியப்போவதில்லை. இந்தப் புதர் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட உமாமகேஸ்வரின் உடலை, பத்து நாள்கள் கழித்தே கண்டுபிடித் தார்கள். அவ்வளவு அடர்த்தியாக புதர் மண்டிக்கிடக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இந்தப் பகுதி இன்றும் அப்படியேதான் இருக்கிறது.

இந்த ஐ.டி பார்க்குக்கு உள்ளேயே தீயணைப்பு நிலையம் உள்ளது. உமாமகேஸ்வரியின் கொலைக்குப் பிறகு, தினமும் நான்கு முறையாவது போலீஸார் ரோந்து வருகின்றனர். ஆனால், இது போதாது. போலீஸ் காவல் உதவி மையமும், ஆபத்து நேரங்களில் பெண்கள் உடனடியாகத் தொடர்புகொள்ள உதவி எண்ணும், சிப்காட் நுழைவுவாயிலில் போலீஸ் பூத்தும் அவசியம். கேளம்பாக்கம் காவல்நிலையக் கட்டுப்பாட்டில் வரும் இந்தப் பகுதியைக் கண்காணிக்க சொற்ப எண்ணிக்கையிலேயே காவலர்கள் இருப்பதால், கூடுதல் எண்ணிக்கையில் காவலர்களைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பது ஐ.டி நிறுவன பெண் ஊழியர்களின் எதிர்பார்ப்பு.

இறுதியாக, சிறுசேரி சிப்காட் அலுவலகத்துக்குச் சென்று பேசினோம். ‘‘மெயின் ரோட்டில் புதிதாக 12 உயர்ரக சி.சி.டி.வி கேமராக்களும், சிப்காட் முகப்பிலிருந்து உள்ளே பெட்ரோல் பங்க் வரை ஐந்து கேமராக்களும் விரைவில் பொருத்தப்படும். எரியாத தெருவிளக்குகளையும் விரைவில் மாற்றுகிறோம். புதருக்குள் அடையாளம் தெரியாத சிலர் அவ்வப்போது அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை எச்சரித்து அனுப்பிவிடுகிறோம். சிஃபி, டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிப்காட் முகப்பிலேயே வரவுள்ளதால், இனி புதருக்குள் யாரும் செல்ல மாட்டார்கள். பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்துவருகிறோம்’’ என்றனர்.

இன்னொரு பக்கம் 500 மீட்டர் பகுதிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத தமிழக அரசு, 1.30 லட்சம் சதுர கி.மீ உடைய இந்த மாநிலத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கப்போகிறது? அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன், சிப்காட் நிர்வாகமும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையும் இணைந்து பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

காவலன் செயலி அவசியம்!

“மேடம், கொஞ்சம் நில்லுங்க!” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...

சிறுசேரி சிப்காட் பாதுகாப்பு நிலை குறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யான டி.கண்ணனின் பார்வைக்குக் கொண்டுசென்றோம். அனைத்து குறைகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், “போலீஸாரின் ரோந்து எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்களின் அறிவுறுத்தலின் பேரில்தான் நவீன சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்படுகின்றன. பெண் ஐ.டி பணியாளர்கள், ‘காவலன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்வது அவசியம். ஆபத்து நேரங்களில் அந்தச் செயலியில் உள்ள ‘SOS’ சிவப்பு வடிவ ஸ்க்ரீனை டச் செய்தால், அவர்களின் இருப்பிடம் ஜி.பி.எஸ் மூலம் எங்களுக்கு வந்துவிடும். ஒரு நிமிடத்துக்குள்ளாகவே காவல்துறை கட்டுப்பாடு அறையிலிருந்து உங்களைத் தொடர்புகொள்வார்கள். காவலர்கள் உடனடியாக அந்த இருப்பிடத்துக்கு விரைவர். காவலர் உதவி மையத்தை சிப்காட்டில் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார் உறுதியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism