Published:Updated:

பட்டியல் சமூக மக்களுக்கு இந்த சலூன்கள்ல முடி வெட்டுறதில்ல!

புதுப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதுப்பட்டி

- ‘புதுப்பட்டி’ சலூன்களில் தீண்டாமைக் கொடூரம்

பட்டியல் சமூக மக்களுக்கு இந்த சலூன்கள்ல முடி வெட்டுறதில்ல!

- ‘புதுப்பட்டி’ சலூன்களில் தீண்டாமைக் கொடூரம்

Published:Updated:
புதுப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதுப்பட்டி

‘புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ளது புதுப்பட்டி எனும் கிராமம். அந்த கிராமத்திலுள்ள சலூன்களில் ஆண்டாண்டுக் காலமாகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் முடி வெட்டப்படுவதில்லை’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, தமிழகத்தில் பெரும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இது மிகப்பெரிய பிரச்னை. குறிப்பிட்ட சமூகத்துக்கென்று மட்டும் பிரத்யேகமான சலூன்கள் இருக்கின்றனவா... ஏன் இந்தப் பாகுபாடு?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து விசாரித்து நான்கு வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டிருக்கிறார்!

பட்டியல் சமூக மக்களுக்கு இந்த சலூன்கள்ல முடி வெட்டுறதில்ல!
பட்டியல் சமூக மக்களுக்கு இந்த சலூன்கள்ல முடி வெட்டுறதில்ல!

கள நிலவரத்தை அறிய, புதுப்பட்டியைத் தேடிச் சென்றோம். ஊரின் பிரதான சாலையை ஒட்டியிருக்கிறது பட்டியல் சமூகத்தினரின் குடியிருப்பு. கிட்டத்தட்ட 160 குடும்பங்கள் வசிக்கின்றன. அவ்வூரைச் சேர்ந்த பழனிவேல் என்பவரிடம் பேசினோம். ‘‘இன்னைக்கு நேத்து இல்லை... ஆண்டாண்டுக் காலமா எங்க ஊர்ல முடி வெட்டுறதுல இந்தத் தீண்டாமை தொடருது. அந்தக் காலத்துல வெளியூர் போய் முடி வெட்டிக்கிட்டு வருவோம். 20 வருஷத்துக்கு முன்னாடி இங்கே சலூன் கடையை ஆரம்பிச்சாங்க. நாங்களும் வெட்டிக்கலாம்னு போனோம். ஆனா, வெட்ட மறுத்துட்டாங்க. அப்பவே, `எங்களுக்கு மட்டும் ஏன் முடி வெட்ட மறுக்குறீங்க?’ன்னு போராடிப் பார்த்தோம். ம்ஹூம்... 2007-ம் வருஷம்... கம்யூனிஸ்ட் கட்சி சார்புல மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டுச்சு. அந்தப் போராட்டத்துக்குப் பிறகும்கூட எந்த மாற்றமும் வரலை.

எங்க அப்பா, தாத்தா காலத்துல ‘எஸ்.சி பயலுவளுக்கெல்லாம் முடி வெட்ட மாட்டோம்’னு நேரடியாவே சொல்லியிருக்காங்க. எங்க காலத்துல, ‘உங்களுக்கு முடி வெட்டுனா, ஆதிக்க சமூகத்துக்காரங்க எங்க கடைக்கு முடி வெட்ட வர மாட்டாங்க’னு சொல்லிப் புறக்கணிச்சாங்க. இப்ப, எங்க பிள்ளைங்க காலத்துல, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா, இவருக்கு முடிச்சுட்டு வர்றேன்... அவருக்கு முடிச்சுட்டு வர்றேன்’னு சொல்லி காக்க வெச்சு, கடைசியில ஏமாத்தி அனுப்புறாங்க. சும்மா சும்மா போய் நின்னு எதுக்கு அவமானப்படணும்னு, நாங்க அங்கே போறதையே நிறுத்திட்டோம். `நாடு முன்னேறுது, உலகம் முன்னேறுது’னு சொல்றாங்க. எங்க நிலைமை மட்டும் மாறவே மாட்டேங்குதே?” என்றார் வேதனையோடு.

கவிதா ராமு
கவிதா ராமு

சரவணன் என்பவரிடம் பேசினோம். ‘‘ஊர்ல மூணு சலூன் இருக்கு. அங்க, எங்க ஆளுங்க யார் போனாலும், கரெக்டா அடையாளம் கண்டுபிடிச்சு, வெயிட் பண்ணவெச்சுருவாங்க. ‘உங்களுக்கெல்லாம் முடி வெட்ட மாட்டோம்’னு நேரடியா சொல்ல மாட்டாங்க. வர்ற ஆளுங்களுக்கெல்லாம் வெட்டுவாங்க. எல்லாருக்கும் வெட்டி முடிச்சு, நாங்க மட்டும் இருந்தோம்னா, அந்த நேரத்துல `சாப்பிடப் போயிட்டு வந்திடுறேன், கோயில்ல முடி எடுக்கப் போறேன்’னு ஏதாவது காரணத்தைச் சொல்லிட்டுக் கெளம்பிடுவாங்க. கடைசி வரைக்கும் எங்களுக்கு முடி வெட்டவே மாட்டாங்க. மத்த விஷயங்கள்ல எங்ககூட நல்லா பழகுற ஆதிக்கச் சாதியினர், இந்த விஷயத்துல மட்டும் சாதி மனநிலையோட எங்களைத் தவிர்க்குறாங்க. 3 கிலோமீட்டர் தள்ளியிருக்கிற கறம்பக்குடிக்கோ, சூரக்காட்டுக்கோ போய்தான் முடி வெட்டிக்கிட்டு வர்றோம். சிலர், முடி வெட்டுற மெஷின் வாங்கி வீட்டிலேயே தங்களுக்கும் அவங்க பிள்ளைகளுக்கும் வெட்டிக்கிறாங்க. இந்த நிலை மாறணும் சார்’’ என்றார்.

பட்டியல் சமூக மக்களுக்கு இந்த சலூன்கள்ல முடி வெட்டுறதில்ல!

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, பக்கத்து ஊரான கோட்டைக்காட்டைச் சேர்ந்த செல்வத்தைச் சந்தித்தோம். ‘‘புதுப்பட்டி மட்டுமில்லைங்க... இலைகடிவிடுதி, கரும்புளிக்காடு, ஆத்தியடிப்பட்டி, கீழவாண்டான்விடுதினு... சுத்திலுமுள்ள கிராமங்களைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்களுக்கும் இந்த சலூன்கள்ல முடி வெட்டுறதில்லை. இந்த கிராமங்கள்ல கள ஆய்வு செஞ்சு, மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதுக்கப்புறமாத்தான் உயர் நீதிமன்றத்துக்குப் போனேன். புதுப்பட்டியில இருக்குற மத்த சமூகத்தினர் எல்லாருமே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இங்க முடி வெட்டக் கூடாதுங்கிற விஷயத்துல, ஒரே புள்ளியில இப்பவும் சேர்ந்து நிக்குறாங்க’’ என்றார்.

முடி திருத்துநர் ரெங்கசாமியிடம் இது குறித்துக் கேட்டோம், ‘‘முடி வெட்டுறதுல நாங்க யாருக்கும் பாரபட்சம் பாக்குறது இல்லை. முடி வெட்டினாத்தான் எங்க பிழைப்பே ஓடும். இதுவரை நாங்க யாரையும் ‘முடி வெட்ட முடியாது’னு சொல்லித் திருப்பி அனுப்பினதில்லை. எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவங்களும் மாமா, மச்சான்னுதான் பழகிக்கிட்டிருக்கோம். புகார் சொல்ற பலர், முடி வெட்டவே வர மாட்டாங்க. சிலர் வருவாங்க... அந்த நேரத்துல ஏற்கெனவே வந்த ஆள் இருப்பாங்க. `தாமதமாகும்’னு சொன்னதும், கிளம்பிப் போயிடுவாங்க. இந்த விஷயத்துல மற்ற சமூகத்தினர் எங்களுக்கு நெருக்கடி கொடுக்குறாங்கனு சொல்றதெல்லாம் உண்மையில்லை’’ என்றார்.

இங்கு பெரும்பான்மையாக உள்ள சமூகத்தைச் சேர்ந்த, பல்லவராயன்பத்தை ஊராட்சி மன்றத் தலைவர் ராமையனிடம் கேட்டோம். ‘‘இது போன்ற சாதியப் பாகுபாடு இருப்பதற்கான குற்றச்சாட்டுகளை மக்கள் யாரும் என்னிடம் சொன்னதில்லை. அப்படியான ஒரு பிரச்னை இங்கு இல்லை’’ என்றார்.

பழனிவேல், சரவணன், செல்வம், ரெங்கசாமி
பழனிவேல், சரவணன், செல்வம், ரெங்கசாமி

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பேசினோம், ‘‘இந்தப் பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை முடிந்திருக்கிறது. விரைவில் நானும் அங்கு நேரடியாகச் சென்று விசாரணை செய்யவிருக்கிறேன். புகார் உண்மையாக இருந்தால், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

முடியை மெஷின் வாங்கிக்கூட திருத்திக்கொள்ளலாம். சாதிய மனங்களை?