Published:Updated:

‘என்னால் ஒளிந்துகொள்ள முடியவில்லை; விட்டுவிடுங்கள் அப்பா’ - பா.ஜ.க எம்.எல்.ஏ மகள் கண்ணீர் வீடியோ

சத்யா கோபாலன்

வீடியோவில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவலர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் பா.ஜ.க எம்.எல்.ஏ-யின் மகள்.

பா.ஜ.க எம்.எல்.ஏ மகள்
பா.ஜ.க எம்.எல்.ஏ மகள்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரின் மகள் 23 வயதான சாக்‌ஷி மிஸ்ரா கடந்த வாரம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த மித்ரா அஜிதேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணம் - மாதிரி புகைபடம்
திருமணம் - மாதிரி புகைபடம்

தன் தந்தை மற்றும் சகோதரர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவலர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசி ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சாக்‌ஷி. தற்போது அந்த வீடியோ இந்திய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.

` உன்னை அவரிடமே ஒப்படைத்துவிடுகிறோம்!' - நம்பிச் சென்ற கர்ப்பிணி; போலீஸ் முன்பே கொல்லப்பட்ட கணவன்

வீடியோவில் பேசும் சாக்‌ஷி, “மரியாதைக்குரிய எம்.எல்.ஏஜி, பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி (சாக்‌ஷியின் சகோதரர்கள்) தயவுசெய்து என்னை நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவிடுங்கள். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நான் ஃபேஷனுக்காகக் குங்குமம் வைத்துக்கொள்ளவில்லை. அப்பா, தயவுசெய்து ராஜீவ் ராணா போன்ற குண்டர்களை எங்கள் பின்னால் அனுப்பாதீர்கள்.

சாக்‌ஷி
சாக்‌ஷி

நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். என்னால் ஒளிந்துகொள்ளவும் முடியவில்லை. அபி மற்றும் அவரின் உறவினர்களுக்குத் தொல்லை தருவதை நிறுத்துங்கள். நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க விரும்புகிறேன். உங்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.

வருங்காலத்தில் எனக்கோ, அபிக்கோ அவரின் உறவினர்களுக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு என் தந்தை மற்றும் சகோதரர்களே காரணம். என் தந்தைக்கு உதவி செய்பவர்கள் தயவு செய்து அதை நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கள் உயிர் ஆபத்தில் உள்ளது. நாங்கள் வாழ வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

எம்.எல்.ஏ  ராஜேஷ் மிஸ்ரா
எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா
ANI

தன் மகள் வெளியிட்டு வீடியோ குறித்து விளக்கமளித்துள்ளார் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா, ``என் மகள் மேஜர். அவளுக்கு முடிவெடுக்கும் உரிமை உள்ளது. எங்கள் குடும்பம் மற்றும் என்னைச் சார்ந்த யாரும் அவளை மிரட்டவில்லை. என் மகளுக்குத் தீங்கு விளைவிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் அந்தப் பையன் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை. மேலும், அவர் என் மகளைவிட 9 வயது மூத்தவர். என் மகளின் நலன் மீது எனக்கும் அக்கறை உள்ளது. அவர்கள் இருவரும் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை ” எனத் தெரிவித்துள்ளார்.