Published:Updated:

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம்
பிரீமியம் ஸ்டோரி
உத்தரப்பிரதேசம்

அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

Published:Updated:
உத்தரப்பிரதேசம்
பிரீமியம் ஸ்டோரி
உத்தரப்பிரதேசம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டம், கலவரமாக மாறி, ஒன்பது பேரின் உயிரைப் பறித்திருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

லக்கிம்பூர் கேரி மாவட்டம், பன்வீர்பூர் கிராமம்தான் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர். அங்கு, அக்டோபர் 3-ம் தேதி நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக உ.பி துணை முதல்வர் கேசவ் மெளரியா, ஹெலிகாப்டர் மூலம் வருகை தரவிருந்தார். ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் லக்கிம்பூர் விவசாயிகள். இதனால், துணை முதல்வரின் பன்வீர்பூர் பயணம் தரை வழியாக மாற்றப்பட்டது. இதையறிந்த விவசாயிகள், கார் வரும் சாலையை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது டிகோனியா கிராமம் அருகே வந்த பா.ஜ.க-வினரின் இரண்டு கார்கள் முன்பாகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

இந்த முற்றுகைப் போராட்டத்தின்போது நிலைதடுமாறிய கார் ஒன்று, விவசாயிகள்மீது ஏறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விபத்தில், தல்ஜீத் சிங் (35), குர்விந்தர் சிங் (19), லவ்ப்ரீத் சிங் (20), நச்சட்டார் சிங் (60) ஆகிய நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலத்த காயமடைந்த உள்ளூர் நிருபர் ரத்தன் காஷ்யப், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 4-ம் தேதியன்று உயிரிழந்தார். இதற் கிடையில், விபத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில், மேலும் நான்கு பேர் உயிரிழந் ததாகத் தகவல் தெரிவித்தது உ.பி காவல்துறை. ஒன்பது உயிர்களைப் பழிவாங்கிய இந்தக் கலவரத்தை அடுத்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் உ.பி-யை ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன.

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

இந்தச் சம்பவம் குறித்து பாரதிய கிசான் யூனியன் அமைப்பு, ``அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள்மீது ஏறிய காரை ஓட்டிவந்தது அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான்’’ என்று குற்றம்சாட்டியது. இதை மறுத்த அஜய் மிஸ்ரா, ``துணை முதல்வரை வரவேற்கச் சென்ற பா.ஜ.க ஆதரவாளர்களின் கார்கள்மீது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கற்களை வீசியிருக்கின்றனர். அதனால், நிலை தடுமாறிய கார், விவசாயிகள்மீது ஏறியிருக்கிறது. அந்த காரை எனது மகன் ஓட்டவில்லை. அங்கு என் மகன் இருந்திருந்தால் போராட்டக்காரர்களின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருப்பார். அவர் என்னோடு நிகழ்ச்சி நடந்த இடத்தில்தான் இருந்தார். அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன” என்றிருக்கிறார். ஆனாலும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர்மீது கொலை வழக்கு பதிவுசெய்திருக்கிறது உ.பி காவல்துறை.

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சீதாப்பூர் அருகே தடுத்துநிறுத்தியது உ.பி காவல்துறை. அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைதுசெய்யப்பட்டார். ``எங்களை இவ்வளவு எளிதாகக் கைதுசெய்ய முடியும்போது, குற்றம்சுமத்தப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரின் மகனை ஏன் கைதுசெய்யவில்லை?’’ என்று கேள்வியெழுப்பினார் பிரியங்கா. உ.பி-யின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூர் செல்ல முடியாதபடி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, வீட்டு வாசலில் போராட்டம் செய்த அகிலேஷ் யாதவ் கைதுசெய்யப்பட்டார். ``பா.ஜ.க அரசு விவசாயிகள்மீது வன்முறை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இவ்வளவு வன்முறை நிகழ்த்தப்படவில்லை. துணை முதல்வரும், மத்திய இணை அமைச்சரும் பதவி விலக வேண்டும்’’ என்று ஆவேசமாகப் பேசினார் அகிலேஷ். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உ.பி அரசின் மீது கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் உத்தரப்பிரதேசத்துக்கு வருவதற்குக் கோரியிருந்த அனுமதியை மறுத்திருக்கிறது உ.பி அரசு. விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் லக்கிம்பூர் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்திவருகிறது உ.பி காவல்துறை. இந்தக் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.45 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணமாக அறிவித்திருக்கிறது உ.பி அரசு.

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

``லக்கிம்பூர் மாவட்டத்தில் நடந்தது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை கிடைக்கும்’’ என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

``ஹரியானாவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், `போராடும் விவசாயிகளுக்கு எதிராகத் தடியை உயர்த்துங்கள். சிறை செல்வது, ஜாமீன் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பேசியிருக்கிறார். இதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. இதைத்தான் உ.பி-யின் லக்கிம்பூரில் செயல்படுத்தியிருக்கிறது பா.ஜ.க’’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ``உ.பி-யில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், அரசின் பெயரைக் கெடுக்க இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன’’ என்று மறுக்கின்றனர் பா.ஜ.க ஆதரவாளர்கள்.

இந்த உயிரிழப்புகளுக்கான நீதியையும் நிவாரணத்தையும் உறுதி செய்வதோடு, விவசாயப் போராட்டத்துக்கான உரிய தீர்வையும் சொல்ல வேண்டும் மத்திய அரசு!