சினிமா
Published:Updated:

இந்தக் கண்ணீருக்கு என்ன பதில்?

உஷா
பிரீமியம் ஸ்டோரி
News
உஷா

என் வீட்டுக்காரர் என்ன ஆனார்... ஏற்கெனவே 55 நாள் கடல்ல தத்தளிச்சு மனசளவுலயும் உடலளவுலயும் பாதிக்கப்பட்டிருந்தவங்களை எப்படி படகை இழுத்துக்கட்ட அனுப்பினாங்க?

"இன்னையோட எட்டு மாசமாச்சு... பதினைஞ்சு நாள்ல திரும்பிடுவோம்னு சொல்லிட்டுப் போன மனுஷன்... அதிகாரிகள்கிட்ட கேட்டா ‘தேடிக்கிட்டிருக்கோம்’னு சொல்றாங்க. கூடப்போன ஆளுங்க, ‘இறந்துட்டாரு’ங்கிறாங்க. என்னதான் ஆனார் என் பாபு... உயிரோட இருந்தா அவரைக் கொண்டு வந்து கொடுங்க... இல்லேன்னா, அவர் உடலையாவது தாங்க...’’ கண்கள் ததும்பக் கேட்கிறார் உஷா.

`க/பெ ரணசிங்கம்' படத்தில் வருகிற அரியநாச்சியின் வடிவாகத்தான் இருக்கிறார் உஷா. எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 200 சதுர அடி வீட்டுக்குள் கண்ணீரும் கவலையுமாக தன் கணவனின் வரவுக்காக இரு பிள்ளைகளோடு காத்திருக்கிறார்.

உஷா
உஷா

உஷாவின் கணவர் பாபு, மீனவர். அதிகாலை கிளம்பி நண்பகல் திரும்பும் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் செல்வது அவரது தொழில். கொரோனாவால் மீன்பிடித்தொழில் முடங்கிய தருணத்தில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் தங்கல் படகொன்றில், காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்களோடு இணைந்து கடலுக்குள் சென்றார் பாபு.

‘‘கொரோனாவால சுத்தமா வேலையில்லை. அந்த நேரம் பார்த்து என் பொண்ணு வேற பெரிய மனுஷியாகிட்டா. அவளுக்குத் தலைக்கு ஊத்தி சடங்குகள் செய்யவே சிரமமா இருந்துச்சு. அப்போதான், ரகுங்கிற படகு டிரைவர் இவரை தங்கல் மீன்பிடிப்புக்குக் கூப்பிட்டார். ‘15 நாள் வேலை... போயிட்டு வந்தா கையில கொஞ்சம் காசு கிடைக்கும். புள்ளைக்கு நாலு பேரை அழைச்சு நல்லவிதமா சடங்கு செஞ்சிடலாம்'னு சொன்னார். மொத்தம் ஒன்பது பேர். கிளம்புறத்துக்கு முன்னாடி, பையனைக் கூப்பிட்டு ‘மொபைல்ல அதிகம் விளையாடாதேடா... தங்கச்சிகூட சண்டை போடாதே... அம்மாவைப் பாத்துக்க'ன்னு சொல்லிட்டுப் போனார். என்ன நினைச்சுச் சொன்னாரோ தெரியலே...’’ வார்த்தைகளற்று அழும் அம்மாவைத் தேற்றுகிறார் 14 வயது பியா.

மியான்மரில் பாபு
மியான்மரில் பாபு

‘‘2020, ஜூலை 23-ம் தேதி... ரெண்டு செட் டிரஸ், மீனவர் ஐடி கார்டு மட்டும்தான் எடுத்துட்டுப் போனார். மொபைலைக்கூட வச்சுட்டுப் போயிட்டார். கூடப் போனவங்ககிட்ட மொபைல் வாங்கி அப்பப்போ பேசுவார். ஆனா பதினைஞ்சு நாள் வரைக்கும் எந்தத் தகவலும் வரலே. படகு ஓனர்கிட்ட போய்க் கேட்டப்போ, ‘ஏதாவது பிரச்னையா இருக்கும். வந்திருவாங்க'ன்னு சொன்னார். நாள்கள் போகுது... ஒரு தகவலும் வரலே. பயம் அதிகமாயிடுச்சு. அதேநாள் கிளம்பின எல்லாப் படகுகளும் திரும்பிடுச்சு. ‘படகு உடைஞ்சு மண்ணுல செருகியிருக்கும்...', ‘மீன் தாக்கி எல்லாரையும் சாப்பிட்டிருக்கும்'னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொல்றாங்க. அதிகாரிகள் தரப்புல பெரிசா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறாங்க. நாங்க ஒன்பது குடும்பமும் போராட்டம் பண்ண ஆரம்பிச்சோம். அமைச்சர் ஜெயக்குமார் வந்து பாத்தார். ‘கப்பல், படகுகளை அனுப்பித் தேட ஆரம்பிச்சிட்டோம். கண்டிப்பா கிடைச்சிடுவாங்க'ன்னு சொன்னார். ஐம்பது நாள்கள் ஓடிடுச்சு. `காத்தின் போக்குல படகு பங்களாதேஷ், மியான்மர்னு எங்கேயாவது கரை ஒதுங்கியிருக்கணும். இனிமே வாய்ப்பில்லை... ஏதோ நடந்திருக்கு'ன்னு சொல்லி எல்லாருக்கும் நிவாரணம் கொடுக்க ஏற்பாடு செஞ்சுட்டாங்க. ‘நிவாரணம் தர்றோம். போனவங்க திரும்பி வந்துட்டாங்கன்னா, திருப்பிக் கொடுத்துடணும்'னு பத்திரத்துல எழுதிக் கையெழுத்தெல்லாம் வாங்கிட்டு இரண்டு லட்ச ரூபா கொடுத்தாங்க. ‘நாங்க முதலமைச்சரைப் பாக்கணும்'னு அதிகாரிகள்கிட்ட கேட்டோம். ஆனா அனுமதிக்கலே. தினமும் காலையில பத்து மணிக்கு அதிகாரிகளைப் பாக்கக் கிளம்பிருவேன். சாயங்காலம் வரைக்கும் ஒவ்வொரு ஆபீஸா அலைவேன்... யார்கிட்ட இருந்தும் பொறுப்பான பதில் இல்லை.

இந்தக் கண்ணீருக்கு என்ன பதில்?

88வது நாள் அதிகாலை படகு ஓனர் போன் பண்ணினார். ‘படகு மியான்மர்ல கிடைச்சிருச்சு... எல்லாரும் நல்லாருக்காங்கம்மா'ன்னு சொன்னார். போன உசுரு அப்போதான் திரும்ப வந்துச்சு. அந்த நிமிஷத்தை வார்த்தைகளால சொல்ல முடியாது. அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. சொந்தக்காரங்களுக்கெல்லாம் தகவல் சொன்னேன். தலைமைச் செயலகத்துக்கு ஓடினேன். ஜெயக்குமார் சாரைப் பாத்துக் கையெடுத்துக் கும்பிட்டு, ‘நீங்க சொன்னமாதிரியே கண்டுபிடிச்சுக் குடுத்திட்டீங்கய்யா... நன்றி'ன்னு அழுதேன்.

மியான்மரில் மீட்கப்பட்டவர்கள்
மியான்மரில் மீட்கப்பட்டவர்கள்

‘மியான்மர்ல புயல் அடிக்குது... கொரோனா நேரம்... பிளைட்டும் இல்லை. கொஞ்சநாள் அங்கே வச்சிருந்துட்டு அனுப்புவாங்க... சீக்கிரமே அழைச்சுட்டு வந்திருவோம்'னு சொன்னார். மியான்மர்ல இருந்து என் வீட்டுக்காரர் போன்ல பேசினார். ‘கடல்ல படகு ரிப்பேர் ஆயிடுச்சு... காத்து போற போக்குல போச்சு. இடையில ஓர் இலங்கைப் படகு வந்துச்சு. அவங்க எங்க படகை மீட்க முயற்சி செஞ்சாங்க. முடியலே. வச்சிருந்த சாப்பாடெல்லாம் கொடுத்துட்டு, கடற்படைக்குத் தகவல் சொல்றோம்னு போனாங்க. அதுக்குள்ள எங்க படகு வேற பக்கம் போயிடுச்சு. மீனைக் காயப்போட்டு அப்படியே சாப்பிட்டோம். இருந்த தண்ணியைச் சொட்டுச் சொட்டா குடிச்சோம்... எப்படியோ மீண்டு வந்துட்டோம். சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லிடு. பத்து நாள்ல திரும்பி வந்திடுவோம்'னு சொன்னார். பிள்ளைங்ககிட்டயும் பேசினார். உப்புலயே ரொம்ப நாள் இருந்ததால கையில தோலெல்லாம் உரிஞ்சு வெந்துபோய் சிவப்பா இருந்துச்சு. அதுபத்திக் கேட்டப்போ, 'அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... நீ பத்திரமா இரு'ன்னு சொன்னார்...’’ அழுதழுது மனம் இறுகிப்போன உஷாவுக்குக் கண்ணீர் வற்றவில்லை.

இந்தக் கண்ணீருக்கு என்ன பதில்?

‘‘ரெண்டு நாள் தொடர்ந்து பேசினார். மூணாவது நாள், மியான்மர்ல அதிகாரிகள் செக் பண்றமாதிரி கொஞ்சம் போட்டோக்கள் அனுப்பினார். நாலாவது நாள் அவர் பேசின நம்பருக்கு நான் முயற்சி செஞ்சேன். போனை எடுக்கவேயில்லை. வாட்ஸப்பும் அனுப்பினேன். புளூ டிக் வந்துச்சு. ஆனா பதிலில்லை... உடனே மீன்வளத்துறை அதிகாரிகளைப் போய்ப் பார்த்து, ‘அவர்கிட்ட இருந்து தகவலே இல்லையே'ன்னு கேட்டேன். ‘நல்லாருக்காங்கம்மா... ஒரு வாரத்துல வந்திடுவாங்க'ன்னு சொன்னாங்க. நாலாவது நாள், ‘மியான்மர்ல புயல்... படகை இழுத்துக் கட்டப்போன டிரைவர் ரகுவும் உங்க வீட்டுக்காரரும் கடல்ல விழுந்துட்டாங்களாம்... ரகு கோமாவுல இருக்காராம். உங்க வீட்டுக்காரர காணுமாம்'னு சிலபேர் சொன்னாங்க. பதறிப் போய் படகு ஓனருக்குப் போன் பண்ணினேன். ‘அமைச்சர் ஜெயகுமார் உங்ககிட்ட பேசுவார்'னு சொல்லிட்டு போனை வச்சுட்டார்.

அமைச்சரைப் பாக்கக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ‘உன் வீட்டுக்காரர் உயிரோடதாம்மா இருக்கார். தேடிக்கிட்டிருக்கோம்... மிச்சமிருக்கிற எட்டு மீனவர்களை இப்போ அழைச்சுக்கிட்டு வந்திருவோம். உன் வீட்டுக்காரரைக் கண்டுபிடிச்சு தனி பிளைட்ல கூட்டிக்கிட்டு வருவோம். உனக்கு அரசாங்க வேலை தரச்சொல்றேன்’னு சொல்லி அனுப்பினார். அமைச்சரே சொல்றாரேன்னு நம்பிக்கையோட வந்தோம். தினமும் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு அலைஞ்சு அலைஞ்சு கால் தேஞ்சுபோச்சு...’’ அமைதியாகிறார் உஷா.

மகள், மகனுடன் உஷா
மகள், மகனுடன் உஷா

பாபுவைக் காணவில்லை என்ற செய்தியறிந்து, ஒற்றை ஆதரவாக இருந்த உஷாவின் அப்பாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சில நாள்களில் இறந்துவிட்டார். துயரத்துக்கு மேல் துயரம் உஷாவுக்கு.

‘‘அந்த எட்டுப் பேரையும் இங்கே அழைச்சுக்கிட்டு வர்ற அன்னிக்கு அப்பா இறந்துட்டார். இதோ இந்த வீட்டு வாசல்ல வச்சுதான் அவங்களுக்கு மாலை மரியாதையெல்லாம் பண்ணினாங்க. நான் ஒரு பக்கம், என் பிள்ளைகள் ஒரு பக்கம்னு போயி ஒவ்வொருத்தர்கிட்டயா `அவருக்கு என்னாச்சு'ன்னு கேக்குறோம். யாரும் வாய் திறக்கலே. குறிப்பா, அந்த டிரைவர்கிட்ட பேசவே விடலே. யார்கிட்ட கேட்டாலும், ‘இதுல அமைச்சர் தலையிட்டிருக்கார்... நாங்க எதுவும் பேச முடியாது'ன்னு சொல்லிட்டாங்க.

இன்னைக்கு வரைக்கும் அதிகாரிகளைத் தேடி அலைஞ்சுக்கிட்டிருக்கேன். படகு ஓனர்கிட்ட கேட்டா, ‘நீ வேணா மியான்மர் போய் உன் வீட்டுக்காரரைத் தேடும்மா'ங்கிறார். அதிகாரிகள்கிட்ட போனா, சிலபேர் ‘விட்ரும்மா... உன் வீட்டுக்காரர் இனிமே வரமாட்டார்'ங்கிறாங்க. ‘அப்போ இறப்புச் சான்றிதழ் கொடுங்க'ன்னு கேட்டா, தரமாட்டேங்கிறாங்க. சொசைட்டி தலைவர், ‘இதைப் பெரிய விஷயமாக்காதே'ங்கிறார். கூடப் போன மீனவர்கள் பேச மாட்டேங்கிறாங்க... யாராவது உதவி செய்ய வந்தா கூப்பிட்டு மிரட்டுறாங்க.

என் வீட்டுக்காரர் என்ன ஆனார்... ஏற்கெனவே 55 நாள் கடல்ல தத்தளிச்சு மனசளவுலயும் உடலளவுலயும் பாதிக்கப்பட்டிருந்தவங்களை எப்படி படகை இழுத்துக்கட்ட அனுப்பினாங்க? படகுல பிரச்னைன்னா எல்லாரும் போகாம ஏன் ரெண்டு பேர் மட்டுமே போனாங்க? எதுக்குமே அஞ்சாத மனுஷன்... அலை எவ்வளவு உரைப்பா இருந்தாலும் சாதாரணமா நீச்சலடிச்சு வரக்கூடியவர். நிச்சயம் ஏதாவது ஒரு தீவுல இருப்பார்... நிச்சயம் ஒருநாள் அவர் திரும்பி வருவார்... இவங்களால தேட முடியலன்னா, நான் மியான்மர் போறதுக்கு இந்த அரசு உதவி செய்யணும். இதுல சம்பந்தப்பட்டவங்க நிச்சயம் எங்களுக்குப் பதில் சொல்லணும்...’’

கண்கள் சிவக்கக் கேட்கிறார் உஷா. அந்தக் கேள்வியில் நியாயமும் வேதனையும் நிறைந்திருக்கின்றன.