Published:Updated:

நம்பிக்கை மனிதர்கள்: குறைகளே... நிறைகளாக!

குறைகளே... நிறைகளாக!
பிரீமியம் ஸ்டோரி
குறைகளே... நிறைகளாக!

வாழ்க்கையில் வெல்ல அனுபவ வழி சொல்லும் உஷா

நம்பிக்கை மனிதர்கள்: குறைகளே... நிறைகளாக!

வாழ்க்கையில் வெல்ல அனுபவ வழி சொல்லும் உஷா

Published:Updated:
குறைகளே... நிறைகளாக!
பிரீமியம் ஸ்டோரி
குறைகளே... நிறைகளாக!
"என் வாழ்க்கையில் வருத்தப்படவும் வேதனைப்படவும் நியாயமான காரணங்கள் நிறையவே இருந்துச்சு. அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம என் மகனை வளர்த்தேன். 35 வருஷத்துக்குப் பிறகு இப்ப எங்க வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கு. சந்தோஷத்தைப் போலவே கஷ்டங்களையும் ஏத்துக்கணும். எல்லாப் பிறப்புக்கும் ஓர் அர்த்தமுண்டு. அதை நிறைவேற்றும் பொறுப்பு தாய்க்குத்தான் கூடுதலாக உண்டு...”
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- மகனையும் மருமகளையும் ஒருசேர கட்டியணைத்துக் கூறும் உஷா ராணியின் முகத்தில் மகிழ்ச்சிப் பூரிப்பு.

குறைபாடுகள் பலவும் மகனை முடக்கினாலும், போராட்ட வாழ்க்கையுடன் அவரை நல்ல நிலைக்கு உயர்த்தி அழகு பார்த்திருக்கும் தன்னம்பிக்கை தாய்.

நம்பிக்கை மனிதர்கள்: குறைகளே... நிறைகளாக!

மகன், மருமகள் இருவரும் செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்கள். மேலும், மகன் பார்வை குறைபாடும், மருமகள் கால் குறைபாடும் உடையவர்கள். “நம்மளப் பத்திதான் பேசப் போறாங்க...” – சைகை மொழியில் பேசிக்கொள்ளும் மகாதேவன் – சுதா தம்பதியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் புன்னகை. இருவருக்கும் நடுவில் அமர்ந்திருக்கும் உஷாவுக்குக் கண்கள் பனிக்கின்றன.

பக்திக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத சென்னை, திருவல்லிக்கேணி, கொரோனா சூழலால் நிசப்தமாகக் காட்சியளிக்கிறது. அதற்கு நேரெதிரான மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள் உஷாவின் வீட்டை உற்சாகப்படுத்துகின்றன.

“பிறந்து 45 நாள்கள் வரை எந்த உடல் அசைவுகளும் இல்லாமதான் இருந்தான். பயந்துபோய் ஆஸ்பத்திரிக்குப் போனோம். ‘காது கேட்பதிலும், பேசுவதிலும் குறைபாடு இருக்கு. கூடவே, தாமதமான வளர்ச்சிக் குறைபாடும் (Delayed Milestones) இருக்கு'ன்னு தெரிஞ்சு அதிர்ந்தோம். தாய் மாமாவின் மகன்தான் என் கணவர். சொந்தத்துல கல்யாணம் பண்ணிகிட்டதால மரபணு ரீதியா குழந்தைக்குக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்னு சொன்னாங்க. அழுது நேரத்தை வீணடிக்காம, உடனே தெரபி கொடுக்க ஆரம்பிச்சோம். அடிக்கடி பீச்சுக்குக் கூட்டிட்டுப் போவேன். படிப்படியா குழந்தையின் உடல்ல அசைவுகள் ஏற்பட்டுச்சு. ‘கிளார்க்’ சிறப்புப் பள்ளியில சேர்த்தோம். ‘பட்ட காலில் படும்’னு சொல்வாங்களே. அதுபோல, பையனுக்கு ‘ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா’ங்கிற பார்வைக் குறைபாடும் ஏற்பட்டுச்சு.

விரக்தியாகி ஸ்கூல் போக மாட்டேன்னு அடம்பிடிச்சான். தினமும் ஊக்கப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பினேன். இவனைப் போன்ற பிள்ளைங்க வெளியுலகத்துல இயல்பா மற்றவங்களோடு மிங்கிள் ஆக முடியாது. அதனாலேயே, இவனோட மகிழ்ச்சிக்காக பயந்துகிட்டேதான் இன்னொரு குழந்தைப் பெற்றோம். வேண்டாத தெய்வமில்லை. ரெண்டாவது பையன் நார்மல்தான். அவன் பிறந்த பிறகுதான் அவனுடன் சேர்ந்து விளையாடுறதுலேருந்து மகாதேவன் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உருவாச்சு. டென்த், ப்ளஸ் டூ-ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தான்” – உஷா இடைவெளிவிட, மகாதேவன் சைகை மொழியில் பேசுகிறார். அதைக் கண்ணிமைக்காமல் பார்த்துப் புன்னகைக்கிறார் சுதா.

“நான் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிச்சேன். பஸ்ஸுக்குத் தமிழ்ல பேரு தெரியாது. பல விஷயங்கள்ல குழப்பங்கள் வரும். சிரமமான வாழ்க்கைதான். ஆனாலும், பி.காம் முடிச்சேன். அதன் பிறகுதான் சுயமா வாழ ஆரம்பிச்சேன். கடந்த 11 வருஷமா ‘நிப்மெட்’ அரசு மையத்துல வேலை செய்றேன். சிறந்த பயிற்சியாளருக்கான குடியரசுத் தலைவரின் தேசிய விருதை 2011-ல் வாங்கினேன்” – மகன் சொல்வதை பெருமிதத்துடன் மொழிபெயர்த்த உஷா தொடர்கிறார்.

நம்பிக்கை மனிதர்கள்: குறைகளே... நிறைகளாக!

“நான் ரெண்டாவது குழந்தைப் பெத்துக்கிட்டபோதும், இவனுக்குக் கல்யாணம் செய்ய முடிவெடுத்தபோதும் சமூகத்துல எதிர்மறையான விமர்சனங்கள்தாம் அதிகம் வந்துச்சு. கூடுதல் வலி ஏற்பட்டாலும், எங்களுக்குப் பிறகு பையனுக்கு ஒரு துணை தேவை. இவன்கிட்ட கேட்டோம். ‘என்னை மாதிரி குறைபாடுள்ள பெண்ணாலதான் என்னைச் சரியாப் புரிஞ்சுக்க முடியும்’னு சொன்னான். அற்புதமான சுதா மருமகளா கிடைச்சா. இருவருக்கும் 2015-ல் கல்யாணம். இவங்க குழந்தைப் பெத்துக்க நினைச்சப்போவும், ‘குழந்தையும் குறை பாட்டுடன் பிறந்துட்டா’ன்னு நிறைய விமர்சனங்கள். எங்களுக்கும்கூட பயம் உண்டாச்சு. துணிச்சலுடன் இவங்களே முடிவெடுத்தாங்க. குறைபாடுகள் எதுவும் இல்லாம பிறந்த பேத்திக்கு இப்ப அஞ்சு வயசு. இவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பேசுற அளவுக்கு ஆக்டிவா இருக்கிறா” – ஆனந்தக் கண்ணீர், உஷாவின் உரையாடலை இடைமறிக்கிறது.

மாமியாரின் கை பிடித்தபடி, “எனக்கும் பிறக்கும்போதே பேச்சுத் திறன், கேட்கும் திறன் இல்லை. சின்ன வயசுல தவறான சிகிச்சையால் வலது காலில் ஊனம் ஏற்பட்டது. ரெண்டு காலும் இணையா இருக்க சின்னதா செயற்கைக்கால் வெச்சு நடப்பேன். பி.காம் முடிச்சிருந்த நிலையில், கல்யாணத்துக்குப் பிறகு எம்.காம் முடிச்சேன். நடுவுல கொஞ்சநாள் வேலைக்குப் போனேன். இப்ப மறுபடியும் வேலைக்குப் போகணும். எங்க குறைபாட்டை நினைச்சு கணவரும் நானும் வருத்தப்பட மாட்டோம்.

எந்தத் தவறான செய்தியும் எங்க காதில் விழாது. தவறான வார்த்தைகளை நாங்களும் உச்சரிக்க மாட்டோம். அப்போ எங்க வாழ்க்கை ரொம்பவே உயர்வானதுதானே... நாம அணுகும் விதத்துலதான் வாழ்க்கையின் உயர்வு, தாழ்வு அடங்கியிருக்கு.

கணவரும் நானும் சைகை மொழியில் நல்ல விஷயங்களை மட்டுமே பேசிப்போம். என்னையும் மகளையும் அடிக்கடி வெளியூர் டூர் கூட்டுட்டுப்போகும் கணவர், தனியாகவே சிங்கப்பூர், கொல்கத்தா போயிட்டு வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கார். பொண்ணு லாவண்யா எங்க வாழ்க்கையை அர்த்த முள்ளதாக்கிட்டா” என்று சைகை மொழியில் சுதா கூறியதை மாமியார் மொழிபெயர்க்க, மகளை வாஞ்சையுடன் கட்டியணைக்கிறார் சுதா.

“ஆசையோடு கல்யாண வாழ்க்கையில் அடியெடுத்து வெச்சோம். இவன் பிறந்த பிறகு வேதனையில் தற்கொலை முடிவைக்கூடத் தேர்ந்தெடுத்தோம். எந்தப் பாவமும் அறியாத எங்க குழந்தையைத் தவிக்கவிட மனசில்லை. காரணமில்லாம கடவுள் சோதனைகளைத் தரமாட்டார்னு உணர்ந்தோம். இவனை நல்ல நிலைக்கு ஆளாக்கணும்னு முடிவெடுத்தோம். கணவர் சீதாராமன் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்துல இன்ஜினீயரா இருந்தார். மூணு வருஷத்துக்கு ஒருமுறை டிரான்ஸ்ஃபர். வெளியூரிலேயே தங்கியிருந்தார். நடுத்தரக் குடும்பம்தான். பையனோட சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க, நானும் வேலைக்குப் போனேன். பையனை பார்த்துக்க, புரமோஷனை தவிர்த்தேன். பேங்க்ல கிளார்க் போஸ்டிங்ல சென்னைக்குள்ளேயே வேலை செஞ்சேன். ரெண்டு பிள்ளைகளையும் தனியாளா கவனிச்சுக்கிட்டு, மனசுல வலி களைச் சுமந்துகிட்டு கண்ணீரோடு ஓடிட்டே இருந்தேன்.

தெரபி, பயிற்சி, பாடம் சொல்லிக் கொடுக்கிறதுன்னு இவனோட உலகத்துல எப்போதும் துணையிருப்பேன். இவனும் நல்லா படிச்சான். எதிரில் யாராச்சும் இருந்தா, அவங்க சின்ன ஒளி பிம்பத்துலதான் பையனுக்குத் தெரிவாங்க. இரவுல வெளிச்சம் இல்லைனா சுத்தமா கண் தெரியாது. ஆனாலும், 35 கி.மீ தொலைவில் முட்டுக்காடு பகுதியிலுள்ள இவனோட ஆபீஸுக்குத் தனியாவே பஸ்ல போயிட்டு வந்திடுவான். தினமும் நைட் இவன் வரும்வரை பீச்சுப் பக்கம் பயத்துடனே காத்திருந்து கூட்டிட்டு வருவேன். ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கிற உணர்வுதான். மருமக வந்த பிறகு என்னோட சுமைகள் குறைஞ்சது. போன வருஷம்தான் பணி ஓய்வு பெற்றேன்.

சூப்பரா சமைக்கும் மருமகள்தான், வீட்டு நிர்வாகத்தை முறையா பார்த்துக்கிறா. நானும் என் கணவரும் இல்லாட்டினாகூட, இவங்க தன்னிச்சையா வாழ்ந்துப்பாங்க. சின்ன பையன் விவேக் சிங்கப்பூர்ல குடும்பத்தோடு மகிழ்ச்சியா இருக்கான். கடவுள் எங்களுக்கு இட்ட பணியைப் பூர்த்தி செய்துட்ட திருப்தி கிடைச்சிருக்கு. இனி கடவுள்கிட்ட இருந்து எப்போ எங்களுக்கு அழைப்பு வந்தாலும் மகிழ்ச்சிதான்.''

- நெகிழ்ச்சியாகக் கூறும் உஷாவின் கரங் களைப் பற்றிக்கொண்டு விடை கொடுத்தனர், மகாதேவன் - சுதா தம்பதியர்!