Published:Updated:

“இது அடையாளத்துக்கான போராட்டம்!”

செல்வபிரீத்தா
பிரீமியம் ஸ்டோரி
செல்வபிரீத்தா

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எங்கள் மக்களில் சிலர், சாதி ஆதிக்கம் பேசுவதே பெருமை என நினைத்து, எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையைச் சூனியமாக்கிவிட்டார்கள்.

“இது அடையாளத்துக்கான போராட்டம்!”

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எங்கள் மக்களில் சிலர், சாதி ஆதிக்கம் பேசுவதே பெருமை என நினைத்து, எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையைச் சூனியமாக்கிவிட்டார்கள்.

Published:Updated:
செல்வபிரீத்தா
பிரீமியம் ஸ்டோரி
செல்வபிரீத்தா

“நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல... சீர்மரபு பழங்குடிகள். எங்களுக்கு மத அடையாளமில்லை; எங்கள் பண்பாடு தனித்துவமானது; எங்கள் வாழ்க்கை முறை யார் மீதும் ஆதிக்கம் செய்யாதது; எங்கள் மீதும் யாரும் ஆதிக்கம் செய்ய விடமாட்டோம். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள்; நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள்; சுய மரியாதைக்காக உயிரை விட்டவர்கள்; பாரம்பர்ய அடையாளத்துக்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைக்காகவும், அரசாங்கத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் இழிவிலிருந்து மீளவும் மக்களை அரசியல்படுத்தி வருகிறேன்” என்று கணீரென்று பேசும் செல்வபிரீத்தா, வறட்சி மிகுந்த உசிலம்பட்டி வட்டாரத்தின் ஆச்சரிய பெண்மணி!

‘பிரமலைக்கள்ளர், மறவர், வலையர், தொட்டிய நாயக்கர், வேட்டுவக் கவுண்டர், குறவர், கல் ஒட்டர் என 68 சாதிகளாகப் பல மாவட்டங்களில் வசிக்கும் சீர்மரபினப் பழங்குடி மக்களுக்கு உரிய சலுகைகளையும், இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவும், அதற்கு அடிப்படையான 1920 முதல் 1979 வரை நடைமுறையில் இருந்த DNT (Denotefiede tribal) ‘சீர்மரபினப் பழங்குடி’ சான்றிதழை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், ‘DNC (Denotefiede community) சீர்மரபினர் சாதியினர் என்று இனி அழைக்கக் கூடாது’ எனவும் அரசை வலியுறுத்தி 68 சாதியினருக்காக மக்களைத் திரட்டிப் போராடிவருகிறார் செல்வபிரீத்தா.

“இது அடையாளத்துக்கான போராட்டம்!”

தமிழ்நாடு சீர்மரபினப் பழங்குடிகள் சமூகநீதி இயக்கத்தின் செயலாளராகவும், ‘பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம்’ என்ற அமைப்பின் தலைவியாகவும் செயல்பட்டுவருகிறார் செல்வபிரீத்தா. கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க... குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு சமூகத்துக்காகப் போராடுகிறார்.

“உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எங்கள் மக்களில் சிலர், சாதி ஆதிக்கம் பேசுவதே பெருமை என நினைத்து, எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையைச் சூனியமாக்கிவிட்டார்கள். அதை மாற்றி மக்களை அரசியல் படுத்தவேண்டும் என்பதுதான் என் லட்சியம்’’ என்று சொல்லும் செல்வபிரீத்தா, பெருங்காமநல்லூரில் வசித்துவருகிறார்.

‘`முதலில் எனது ஊரைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். விடுதலை வரலாற்றில் வீரமும் சோகமும் சுமக்கும் ஊர், பெருங்காமநல்லூர். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரமலைக்கள்ளர் மக்களை ஒடுக்கக் கொண்டுவந்த கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எங்கள் ஊர் மக்கள் போராட, பிரிட்டிஷ் போலீஸ் படைகளுக்கு எதிராக நடந்த சண்டையில், 16 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியா னார்கள். அதில் மாயாக்காள் என்ற பெண்ணும் ஒருவர். அன்று உயிர்நீத்த தியாகிகளின் தொடர்ச்சிதான் நாங்கள்.

சகாயம் ஐ.ஏ.எஸ் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தபோது, ‘உலகமே கல்விக்காகப் போராடிக் கொண்டிருந்த 1920-களில், பிரிட்டிஷ் ஆட்சியில் இலவசக் கல்வி கொடுத்தும் பெரிய அளவில் முன்னேறாதது ஏன்’ என்று கேட்டு மக்களைப் பார்த்து வருத்தப்பட்டார். அதற்குக் காரணம், எங்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள், ‘உன் சமூகம் கெட்ட சமூகம்; படிச்சு முடிச்சதும் இங்க இருக்காதே, வெளில போயிடு’ என்று சொல்லியே வெளியேற்றி விடுவார்கள். அவர்கள் கற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் இல்லை. அதனால், பிரமலைக்கள்ளரில் படித்தவர்கள், அரசு வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.

ஒரு சில அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்களைப் பார்த்து ஒட்டுமொத்தச் சமூகமும் வசதியோடு இருப்பதாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மை அதுவல்ல... இன்றைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தினக்கூலிகளாக அதிகம் இருப்பது எங்கள் மக்கள்தான். இந்தியா முழுக்க பல மாநிலங்களில் முறுக்கு, இட்லி சுட்டுப் பிழைப்பவர்களும், திருப்பூர் போன்ற ஊர்களிலும், கேரளத் தோட்டங்களிலும் தொழிலாளிகளாக இருப்பதும் எங்கள் மக்கள்தான். அரசியல்வாதிகள் எம்மக்களை சுயநலவாதியாக மாற்றி, தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகள் முன்னேற முக்கியத் தேவை, சாதிச்சான்றிதழ். டி.என்.சி என வழங்கும் சான்றிதழை டி.என்.டி என வழங்கக் கேட்கிறோம். இதற்காகத்தான் பல போராட்டங்கள். கடந்த ஆட்சியில் இதற்காக அதுல்யா மிஸ்ரா தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்து, டி.என்.டி சான்றிதழ் கொடுக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தார்கள். ஆனால், அந்த ஆய்வறிக்கையை இன்று வரைக்கும் வெளியிடவில்லை.

“இது அடையாளத்துக்கான போராட்டம்!”

1979-ல்தான் அரசாணை மூலம் டி.என்.டி ஆக இருந்த எங்களை டி.என்.சி ஆக அரசு மாற்றியது. எடப்பாடி அரசு 2019-ல் வெளியிட்ட புதிய அரசாணையில், பழைய அரசாணையைத் திரும்பப் பெறுவதாகக் கூறியவர்கள், ‘டி.என்.டி சான்றிதழ் மத்திய அரசுச் சலுகைகளுக்கு மட்டும்தான், மாநில அரசுக்குப் பொருந்தாது. தமிழகத்தில் நீங்கள் எப்போதும் டி.என்.சி தான், எம்.பி.சி பிரிவுக்குள்தான் வருவீர்கள்’ என்று அறிவித்து ஏமாற்றிவிட்டார்கள்.

தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டி.என்.டி சான்றிதழ் கொடுப்போம்; அதற்கான கமிட்டியை அமைப்போம்; சீர்மரபினர் நல வாரியத்தை மேம்படுத்துவோம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால், அதற்கு மாறாக, கடந்த ஆட்சியில் கொண்டுவந்த, ‘மிகப்பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்’டை ஆதரிக்கிறார். அரசியல்படுத்தப்படாத எங்கள் மக்களிடம் இதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. எங்கள் சுயத்தை மீட்டெடுக்கவும், டி.என்.டி சான்றிதழுக்காகவும் தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது’’ என்கிறார் செல்வபிரீத்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism