Published:Updated:

உத்தரப்பிரதேசம்: அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கை; அவசியமா, ஆபத்தானதா?

மக்கள்தொகை
மக்கள்தொகை

உத்தரப்பிரதேச அரசு புதிய மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. இது அவசியமா அல்லது ஆபத்தானதா என்பது பற்றிய ஒரு பார்வை.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. விரைவில் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் நாடக இந்தியா இடம்பெறும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை அதிக மக்கள்தொகைகொண்ட முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 19.98 கோடி மக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறார்கள். இந்த மக்கள்தொகை 2021-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 24 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை
மக்கள்தொகை

இந்தநிலையில், உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11-ம் தேதி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய மக்கள்தொகைக் கட்டுப்பாடு வரைவு மசோதாவை வெளியிட்டார். அப்போது "மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் உத்தரப்பிரதேசத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தை 2.1 சதவிகிதமாகக் குறைக்க அரசு விரும்புகிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அனைத்துப் பிரிவினருக்கும் மகிழ்ச்சி உண்டாக்க முடியும். சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கருத்தில்கொண்டுதான் இந்தப் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது" என்று அந்த மாநில முதல்வர் பேசினார்.

இந்தப் புதிய மசோதாவைப் பொறுத்தவரை, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் குடும்பத்திலுள்ள அந்தக் குழந்தைக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற பல சலுகைகள் கிடைக்கும். இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்குப் பணிக்காலத்தில் சம்பள உயர்வு, 12 மாத சம்பளத்துடன்கூடிய விடுமுறை போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். அதேபோல, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கெனவே அரசு வேலையிலிருந்தால் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளை அதிகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

தற்போதைய உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை ரஷ்யா (14.5 கோடி), ஜப்பான் (12.64 கோடி), ஜெர்மனி (8.37 கோடி), இங்கிலாந்து (6.78 கோடி), கனடா (3.77 கோடி) போன்ற பல்வேறு உலக நாடுகளின் மக்கள்தொகையைவிட மிக அதிகம். பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரிய மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் முதல் மாநிலமாக இருக்கிறது. தற்போது அந்த மாநிலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 3.0 சதவிகிதமாக உள்ளது. அதை 2.1 சதவிகிதமாகக் குறைக்க அந்த மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

புதிய கொள்கை அவசியமா, ஆபத்தானதா..?

உலகில் அதிக மக்கள்தொகைகொண்ட நாடான சீனா முன்னொரு காலத்தில் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற கொள்கையை மிகக் கடுமையாகப் பின்பற்றிவந்தது. அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய சீன அரசு கடந்த 2016-ம் ஆண்டு, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிவந்தது. தற்போது, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறது. சீனாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறையத்தொடங்கியிருக்கிறது. சமீபத்திய ஆய்வில், ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளின் மக்கள்தொகை வரும் 2100-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறையும்ம் என்று முடிவுகள் கூறுகின்றன.

மக்கள் தொகை
மக்கள் தொகை

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்... மக்கள்தொகை குறைவது நல்ல விஷயம்தானே என்று. அப்படி கிடையாது… 128 மில்லியனாக இருக்கும் ஜப்பானின் மக்கள்தொகை 2100-ம் ஆண்டு 53 மில்லியனாக குறைந்திருக்கும். 61 மில்லியனாக இருக்கும் இத்தாலியின் மக்கள்தொகை 28 மில்லியனாகக் குறைந்திருக்கும். இப்படிப் பல நாடுகளின் மக்கள்தொகையும் பாதிக்கும் குறைவாக இருக்கும். குழந்தை பிறக்கும் விகிதம் குறையும்போது, ஒருகட்டத்தில் அந்த நாட்டில் குழந்தைகளும், இளையவர்களைவிட வயதானவர்களும்தான் அதிகம் இருப்பார்கள். இது சமூகக் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விஷயங்களைக் கருத்தில்கொண்டுதான், ஒரு குழந்தை போதும் என்று கூறிக்கொண்டிருந்த பல்வேறு நாடுகளும் தற்போது அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூறிக்கொண்டிருக்கின்ற்ன. இந்தநிலையைச் சமாளிக்க சில நாடுகள் ஒருபடி மேலே சென்று குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கிக்கொண்டிருக்கின்றன.

மக்கள் கை (மாதிரி படம் )
மக்கள் கை (மாதிரி படம் )
Unsplash

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 1981-ம் ஆண்டு, 3.4 சதவிகிதமாக இருந்த குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 2017-ம் ஆண்டு கணக்கின்படி 1.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 2.1 சதவிகிதமாக இருப்பதே சிறந்தது என்றும், இப்படி தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே சென்றால் நாளடைவில் தமிழகத்தின் பல்வேறு கட்டமைப்புகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உலக நாடுகள் பலவும் தங்களின் தவற்றைப் புரிந்துகொண்டு மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தை அதிகப்படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் இந்த முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு