Published:Updated:

சிறுத்தையுடன் தனி ஆளாகப் போராடிய 11 வயது சிறுமி! - தம்பியைக் காப்பாற்றிய துணிகர சம்பவம்

உத்தரகாண்டில் சகோதரனைக் காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் போராடிய 11 வயதுச் சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி
சிறுமி

உத்தரகாண்ட், இமயமலைத் தொடர்களில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகான மாநிலம். மலைப்பிரதேசமான இந்த மாநிலத்தில் மனிதர்கள் - விலங்கு மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

தேவ்குதை (Devkudai) கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி தன் சகோதரனை சிறுத்தையிடம் காப்பாற்றத் தனியாளாகப் போராடிய சம்பவம் நடந்துள்ளது. கடந்த 4-ம் தேதி ராக்கி (Rakhi) என்ற சிறுமி மாலை வேளையில் தன் 4 வயது சகோதரனுடன் விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது இருவரும் சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை

சிறுத்தையிடமிருந்து தன் சகோதரனைக் காப்பாற்ற கடுமையாகப் போராடியுள்ளார். சகோதரனைத் தரையில் கிடத்தி கட்டியணைத்து தன் உடலைக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார். சிறுத்தை சிறுமியைக் கடுமையாகத் தாக்கியது. ஆனால், சகோதரனை விட்டு ஒரு அடிகூட விலகவில்லை. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் அம்மா வெளியில் வந்து பார்த்துள்ளார். தன் இரண்டு குழந்தைகளையும் சிறுத்தை தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பெண் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை அங்கிருந்து சென்றது.

சிறுமிக்குத் தலை மற்றும் தோள்பட்டைகளில் கடுமையான காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். காயங்கள் கடுமையாக இருந்ததால் சிறுமியை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர். தற்போது சிறுமி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு, மாவட்ட ஆட்சியர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் மருத்துவ செலவுக்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து 1 லட்ச ரூபாயைக் கொடுத்துள்ளார்.

Doctor
Doctor

கூடவே, ‘தேசிய துணிச்சல் விருது’க்கு சிறுமியின் பெயரை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

உத்தரகாண்ட் மலைக்கிராமங்களில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வேட்டையாடுவதற்கு குழந்தைகள் மிகவும் எளிதாக இருப்பதால் குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பதாகவும் கூறப்படுகிறது.