Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

‘‘எதுக்கு இந்த பில்டப்பு?’’ மண்வெட்டி பிடிக்கும் காக்கி!

கோவை மாவட்டத்தில் பப்ளிசிட்டி காக்கிகளின் அலப்பறை தாங்க முடியவில்லை. சமீபத்தில் ரத்தினமான காவல் நிலையத்தைச் சேர்ந்த அரச போலீஸ்காரர் ஒருவர், குண்டும் குழியுமான சாலையைச் சரிசெய்வதுபோல வீடியோ எடுத்து ஊடகங்களிடம் கொடுத்து வைரலாக்க முயன்றார். ஆனால், தினம் ஒரு போலீஸ் கையில் மண்வெட்டி சகிதமாக இதே ஸ்கிரிப்டுடன் இறங்குவதால், அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. ‘‘அதெல்லாம் கார்ப்பரேஷன் வேலை... எதுக்கு இந்த பில்டப்பு? போய் வேலையைப் பாருங்க...’’ என்று சக காக்கிகளும் அவரைக் கலாய்த்துவிட்டார்கள். கடுப்பான அந்த போலீஸ்காரர், வேறு ஸ்கிரிப்டை யோசித்துவருகிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘குற்றம் குறையணும் சாமி!’’ - கிடா விருந்துவைத்த போலீஸ்

‘அவன் இவன்’ திரைப்படத்தில் குற்றங்கள் நடைபெறாமலிருக்க போலீஸார் கிடா வெட்டி குற்றவாளிகளுக்கு விருந்துவைக்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதே பாணியில் நவம்பர் 23-ம் தேதி ‘கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெட்டுக்குத்து, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடக்காமல் இருப்பதுடன், நான் டி.எஸ்.பி-யாகவும் பதவி உயர்வு பெற வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி கிடா வெட்டி விருந்து வைத்திருக்கிறார். அந்த ஏரியாவின் முக்கியக் குற்றவாளிகள் சிலரை வரவழைத்து, அருகிலிருக்கும் வனத்துறை விருந்தினர் விடுதியில் கறிச்சோறு போட்டு உபசரித்தவர், “டேய் தப்பு தண்டா எதுவும் பண்ணிடாதீங்கடா!” என்று சத்தியமும் வாங்கினாராம். தகவல் கசிந்து உயரதிகாரிகள் இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தபோது, ‘‘சார்... ஸ்டேஷனுக்கு திருஷ்டிபட்டுருச்சு. அதான் கிடா வெட்டி திருஷ்டி கழிச்சேன்’’ என்று சமாளித்திருக்கிறார் இன்ஸ்!

சுழற்றியடிக்கும் சர்ச்சைகள்... அசராமல் ரிலாக்ஸ் செய்யும் காக்கி!

சென்னையை ஒட்டிய புதிய மாநகராட்சியில் பணியாற்றுகிறார் வெளிநாட்டு இளவரசர் பெயர்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர். இவர் ஈ.சி.ஆர் பகுதியில் நீண்டகாலம் பணியாற்றியதால், ‘ஈசிஆர்’ என்ற அடைமொழியுடன்தான் சக காக்கிகள் அவரை அழைக்கிறார்கள். அதேசமயம், சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சம்வைக்காதவர் இந்த ஈசிஆர் என்கிறார்கள். இவரின் உறவினர் மகன் தகராறு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்ஸ்பெக்டரின் செல்வாக்கால் அவருக்குச் சிறைக்குள் ராஜ உபசரிப்பு நடக்கிறதாம். பஜாரில் நடைபாதைக் கடைகளுக்கு மாமூல் வாங்கிக்கொண்டு இவர் அனுமதியளிக்க... நகராட்சி அதிகாரிகளோ கடைகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். இந்த விவகாரம் மேலிடம் வரை செல்லவே, உயரதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். சமீபத்தில் ஸ்பா உரிமையாளரை மிரட்டிய விவகாரத்திலும் இவர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இத்தனை சர்ச்சைகள் இன்ஸ்பெக்டரைச் சுற்றினாலும் கொஞ்சமும் அசராதவர் வாரம் இரண்டு, மூன்று நாள்கள் ஈ.சி.ஆரில் இருக்கும் காஸ்ட்லி ரிசார்ட்களில் ‘ரிலாக்ஸ்’ செய்கிறாராம். ‘‘என்னதான் பிரச்னையில சிக்கினாலும் அதிலிருந்து தப்பிக்குற சீக்ரெட் அவருக்கு மட்டும்தான் தெரியும்” என்று கண்சிமிட்டுகிறார்கள் சக காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ரெளடிகளுடன் டீல்... ஆட்சி மாறியும் தொடரும் ஆட்டம்!

திருச்சி காவல்துறை சிறப்புப் பிரிவில் பணியாற்றும் பழனியாண்டவர் பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவர், மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் உறவினர். அவரின் துணையுடன்தான் கடந்த ஆட்சியில் அந்த அதிகாரி பவர்ஃபுல் நபராக வலம்வந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இவரது வாகனத்தில் வைத்துத்தான் அ.தி.மு.க தரப்பில் ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாற்றப்பட்டன என்றெல்லாம் தகவல்கள் றெக்கைகட்டிப் பறந்தன. இந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் அதிகாரியின் ஆட்டம் கொஞ்சமும் குறையவில்லையாம். டெல்டா மாவட்டங்களிலுள்ள ரௌடிகள் இவரது கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களை வைத்துக்கொண்டு சிலபல டீல்களை முடிப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

பழிவாங்குவதற்காக ரெய்டு - அமுக்கப்பார்க்கும் உயரதிகாரிகள்!

சென்னை விபசார தடுப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர்மீது பிரபல ஜவுளி நிறுவனத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். காதல் விவகாரத்தில் ஒரு தரப்புக்கு சாதகமாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பழிவாங்கும் நோக்கத்தில், தான் குடியிருக்கும் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாகச் சொல்லி ரெய்டு நடத்தினார் என்பதுதான் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு. தற்போது தேசிய மகளிர் ஆணையமும் அந்த இன்ஸ்பெக்டர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறதாம். பெரிய இடத்து விவகாரம் என்பதால், போலீஸ் மானம் போய்விடுமே என்று கமுக்கமாகப் பேச்சுவார்த்தை நடத்தி விஷயத்தை அமுக்கப்பார்க்கிறார்களாம் உயரதிகாரிகள்!