Published:Updated:

தனியார் கைகளில் சிக்கியிருக்கும் வன்னியர் அறக்கட்டளைச் சொத்துகள்!

வன்னியர் அறக்கட்டளை
பிரீமியம் ஸ்டோரி
வன்னியர் அறக்கட்டளை

- மீட்பு நடவடிக்கையில் வேகம் காட்டுமா அரசு?

தனியார் கைகளில் சிக்கியிருக்கும் வன்னியர் அறக்கட்டளைச் சொத்துகள்!

- மீட்பு நடவடிக்கையில் வேகம் காட்டுமா அரசு?

Published:Updated:
வன்னியர் அறக்கட்டளை
பிரீமியம் ஸ்டோரி
வன்னியர் அறக்கட்டளை

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்று வதற்காகப் பல வன்னிய செல்வந்தர்கள் தங்களின் சொத்துகளை அறக்கட்டளை மூலமாக உயிலாக எழுதிவைத்துள்ளனர். முதன்முதலாக 1846-ம் ஆண்டு கோவிந்த நாயக்கர் என்பவர் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை அறக்கட்டளைக்கு எழுதிவைத்தார். 25 மாவட்டங்களில் பரவிக் கிடக்கும் இந்தச் சொத்துகள் முறைப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், சில தனியார்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்திருப்பதால், அந்தச் சொத்துகளின் தற்போதைய நிலைமை குறித்து விசாரிக்கக் களமிறங்கினோம்...

வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்

வன்னியச் செல்வந்தர்களின் சொத்துகள், அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து, அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற ‘தமிழ்நாடு வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம்’ கடந்த 2009-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகள் கழித்துத்தான் (2019), சொத்துகளை முறைப்படுத்துவதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் சட்டம் வலுவாக இல்லாததாலும், வாரியத்துக்குப் போதிய அதிகாரம் இல்லாததாலும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சொத்துகளைக் கைப்பற்ற முடியாமல் திணறிவருகிறது வாரியம். அதை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த சேர்மன் உள்ளிட்ட நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் பிப்ரவரி மாதமே முடிந்துவிட்டது. பதவி வழி வந்த உறுப்பினர்கள் மட்டுமே பொறுப்பில் இருப்பதால், வாரியப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

தனியார் கைகளில் சிக்கியிருக்கும் வன்னியர் அறக்கட்டளைச் சொத்துகள்!

இதற்கிடையே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியாரிடம் இருந்த பி.டி.லீ.செங்கல்வராயர் அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரூ.87 கோடி மதிப்பிலான 12.6 கிரவுண்டு நிலம் மீட்பு, திருவொற்றியூரில் ரூ.50 கோடி மதிப்புள்ள வன்னியர் மகா சங்கத்துக்கான சொத்து கண்டுபிடிப்பு என்று தமிழகம் முழுவதும் வன்னியர்களின் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான 119 சொத்துகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நமக்குப் பெரிதாகத் தெரிந்தாலும், ‘மொத்த ஆக்கிரமிப்புடன் ஒப்பிடுகையில் இது மிகச் சொற்பம்தான்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அரசே நிலத்தை ஆக்கிரமிக்கிறது!

இது தொடர்பாக பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையோடு நம்மிடம் பேசிய வன்னியர் அறக்கட்டளையின் நிர்வாகி ஒருவர், “அறக்கட்டளைகள் விவகாரத் தில் நிறைய அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க என்றில்லாமல் அரசியல்வாதிகள் சிலர், தனியார் அறக்கட்டளைகள் மூலம் பல சொத்துகளைத் தங்கள் வசமாக்கி வைத்துள்ளனர். அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் அரசே ஓரிரு இடங்களை ஆக்கிரமித்துள்ளது. உதாரணமாக, மாமல்லபுரம் அருகில் வன்னியர் சமூகத்தின் கல்விக்கான உயில் எழுதப்பட்ட ஆளவந்தாருக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலத்திற்குள்தான் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது அரசு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் இருந்தபோதும் சரி, ராஜகண்ணப்பன் வந்த பிறகும் சரி வன்னியர் வாரியக் கூட்டம் நடைபெறவே இல்லை. வாரியக் கூட்டத்தைக் கூட்டினால்தான், எவ்வளவு சொத்து இருக்கிறது, அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்ற விவரமே தெரியவரும்” என்றார்.

தனியார் கைகளில் சிக்கியிருக்கும் வன்னியர் அறக்கட்டளைச் சொத்துகள்!

வாரியம் உருவாக சட்டப் போராட்டம் நடத்திய வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தியிடம் கேட்டபோது, “இதுவரை கண்டறியப்பட்ட 240 அறக்கட்டளைகளின் மொத்தச் சொத்து மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. அவற்றின் மூலம் மாதம்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால், 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் தனியார்வசம் இருப்பதால், அந்த வருமானம் வன்னிய மக்களுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. பி.டி.லீ.செங்கல்வராயர் அறக்கட்டளையின் நிதி லண்டன் பங்குச் சந்தையில் இருக்கிறது. ஆனால், அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வன்னிய மக்களிடமிருந்தும் பெறப்பட்ட நிதி மூலம் தொடங்கப்பட்ட ‘வன்னியர் கல்வி அறக்கட்டளை’கூட, இப்போது ‘ராமதாஸ் அறக்கட்டளை’யாக மாற்றப்பட்டுள்ளது. வாரியச் சட்டத்தின்படி இது முறைகேடு. ஆனால், யார் நடவடிக்கை எடுப்பது... வாரியத் தலைவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு நியமித்தால் மட்டுமே பணிகள் தொய்வில்லாமல் நடக்கும். எங்கள் மக்களுக்காகத் தொடங்கப்பட்ட அறக்கட்டளைச் சொத்துகளை முறைப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இந்தப் பிரச்னைகள் முழுவதையும் வாரியத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஜி.சந்தானத்திடம் சொல்லி, விளக்கம் கேட்டோம். “வாரியத்தின் மூலமாக நில அளவை, தணிக்கை முடிக்கப்பட்டு இதுவரை 63 அறக்கட்டளைகள் முழுமையாக வாரியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 23 பள்ளிகள், ஏழு கலை அறிவியல் கல்லூரிகள், இரண்டு பொறியியல் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, இரண்டு ஐ.ஐ.டி என மொத்தம் 36 கல்வி நிறுவனங்கள் இப்போது வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகின்றன. வட ஆற்காடு வன்னியர் சங்கத்தின் மூலமாக வேலூரில் அரசுப் பணிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தவறான ஆவணங்கள் மூலம் தனிநபர் பெயரில் பதியப்பட்ட பட்டா மற்றும் பத்திரங்கள் பதிவுத்துறை மூலம் நீக்கப்பட்டுள்ளன. எங்களிடமிருந்த வசதிகளைவைத்து இயன்ற அளவுக்குச் சொத்துகளை மீட்டுள்ளோம்” என்றார்.

ஜி.சந்தானம்
ஜி.சந்தானம்
சி.என்.ராமமூர்த்தி
சி.என்.ராமமூர்த்தி

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் வாழ்நிலையை உயர்த்த நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர்கள் எழுதிவைத்த சொத்துகளை முறைப்படுத்துவதில், அரசின் வேகம் போதாது என்பதையே கள நிலவரம் காட்டுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism