Published:Updated:

‘ஊருக்கு ரோடு போட்ட மாப்பிள்ளை!’ - முன்னுதாரணமான விழுப்புரம் இளைஞர்

சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர்

அவங்க சாலை அமைத்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யப்பட்டேன். வித்தியாசமா இருக்கிறாரேன்னு ஒருவிதத் தயக்கமும் உருவாச்சு.

‘ஊருக்கு ரோடு போட்ட மாப்பிள்ளை!’ - முன்னுதாரணமான விழுப்புரம் இளைஞர்

அவங்க சாலை அமைத்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யப்பட்டேன். வித்தியாசமா இருக்கிறாரேன்னு ஒருவிதத் தயக்கமும் உருவாச்சு.

Published:Updated:
சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர்

திருமணத்துக்காகச் சேமித்த பணத்தில், ஊருக்காக சிமென்ட் சாலை அமைத்திருக்கும் இளைஞரைப் பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்க, அந்த ‘அடடே’ இளைஞரை நேரில் சந்தித்தோம்...

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது வீடு அமைந்திருக்கும் தெருவிலுள்ள சிமென்ட் சாலை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. குண்டும் குழியுமாகப் பழுதடைந்துபோன அந்தச் சாலை, மழைக்காலங்களில் நடமாட முடியாத அளவுக்குச் சேறும் சகதியுமாக இன்னும் மோசமாகிவிடுமாம்.

‘ஊருக்கு ரோடு போட்ட மாப்பிள்ளை!’ - முன்னுதாரணமான விழுப்புரம் இளைஞர்
‘ஊருக்கு ரோடு போட்ட மாப்பிள்ளை!’ - முன்னுதாரணமான விழுப்புரம் இளைஞர்

இது குறித்துப் பேசுகிற சந்திரசேகர், “மழைக்காலத்தில் குழந்தைகள், பெரியோர்கள் எனப் பலர் சாலையில் வழுக்கி விழுந்து அடிபடுவார்கள். அதையெல்லாம் வீடியோவாகப் பதிவுசெய்து, புதிய சாலை அமைத்துத் தரக் கோரி வானூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனால் நான் காண்பித்த வீடியோ காட்சிகளைப் பார்த்து வருத்தப்பட்ட அதிகாரிகள், ‘தற்சமயம் நிதியில்லை. லேட்டாகும்’ என்று சொன்னார்கள். இந்த பதிலைப் பெறுவதற்கே ஆறு மாதங்களுக்கு மேல் நான் அலையவேண்டியிருந்தது.ஆனாலும், சாலை அமைத்தாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததால், ‘நமக்கு நாமே திட்டம்’ பற்றி அதிகாரிகள் சொன்னார்கள். அதாவது, `சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு 10.5 லட்சம் என்றால், அதில் 50 சதவிகிதத்தை (5.25 லட்சம்) முன்கூட்டியே நாம் அரசுக்கு செலுத்திவிட்டால், அதைப் பரிசீலித்து, திட்டத்தை நிறைவேற்றும் பணி ஆணையுடன் 10.5 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்யும்’ என்றார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில், 50 சதவிகிதப் பணத்தை நம்பி டெபாசிட் செய்வதில் எனக்கு அச்சமிருந்தது. மேலும், இது சம்பந்தமான இதர செலவுகளையும் கூட்டிப் பார்த்தால் என் பங்கு 60 சதவிகிதமாக இருந்தது. எனவே, ‘என்னுடைய சொந்தச் செலவிலேயே சாலை அமைப்பது’ என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், ‘அதெல்லாம் முடியாது, கலெக்டரிடம் அனுமதி வாங்கணும்’ என்றனர் அதிகாரிகள். கலெக்டரிடமும் அனுமதி பெற்றேன். என்னுடைய திருமணத்துக்காகச் சிறுகச் சிறுக நான் சேர்த்த சேமிப்பிலிருந்து 10.5 லட்சம் மதிப்பீட்டில், 14 அடி அகலம், 290 மீட்டர் நீளத்துக்கு, கடந்த மார்ச் மாதம் சிமென்ட் சாலையை அமைத்து முடித்துவிட்டேன். நான் அமைத்த சாலையை கலெக்டர் திறந்துவைத்தால் மகிழ்ச்சி” என்றவரின் முகத்தில் சாதித்துவிட்ட திருப்தி.

‘ஊருக்கு ரோடு போட்ட மாப்பிள்ளை!’ - முன்னுதாரணமான விழுப்புரம் இளைஞர்
‘ஊருக்கு ரோடு போட்ட மாப்பிள்ளை!’ - முன்னுதாரணமான விழுப்புரம் இளைஞர்

‘உங்களோட வருங்காலத் துணைவி என்ன சொன்னாங்க..?’ என்று கேட்டோம், ‘நீங்களே கேட்டுக்கோங்களேன்...’ என்றவாறு, அவரது வருங்காலத் துணைவி சிவரஞ்சனியிடம் நம்மை போனில் பேசவைத்தார். “அவங்க சாலை அமைத்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யப்பட்டேன். வித்தியாசமா இருக்கிறாரேன்னு ஒருவிதத் தயக்கமும் உருவாச்சு. ஆனா ஊர் மக்கள், உறவுக்காரர்கள் என எல்லோருமே நல்லபடியாக அவரைப் பாராட்டிப் பேசும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார் வெட்கத்துடன்.

தொடர்ந்து பேசிய சந்திரசேகரின் பெற்றோர், “ஆரம்பத்தில் எங்களுக்கும் இதில் உடன்பாடில்லை. ‘உனக்கு எதுக்குப்பா வேண்டாத வேலை... ஏதாவது பிரச்னை வரப்போகுது’ எனச் சொல்லி பயந்தோம். அதேபோல, சில அரசியல் சிக்கல்களும் வரத்தான் செய்தன. ஆனாலும்கூட மாறாத அவனுடைய உறுதியைப் பார்த்த பிறகு, ‘சரி... நம்ம புள்ள ஊருக்கு நல்லதுதானே செய்யுறான்...’ என்பதைப் புரிந்துகொண்டோம்’’ என்றனர் பெருமிதத்துடன்.

எடுத்துக்கொண்ட பணியை என்ன செய்தாவது முடித்தே தீருவது என்ற சந்திரசேகரின் முயற்சி பாராட்டுக்குரியது; முன்னுதாரணமானது!