சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: டணால் பச்சைக்கிளி!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

என்னடா மாமியார் மருமகளெல்லாம் ஒற்றுமையா இருக்கீங்க, அதுவும் கூட்டுக் குடும்பமா!

? தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்ட சில ஐடியாக்கள் சொல்லுங்களேன்!

வெளியூர் வாக்காளர்கள் அவரவர் இருக்கும் இடங்களிலேயே வாக்களிக்க வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.

V. ராஜ்குமார், கிணத்துக்கடவு.

ஓட்டு போட்டவுடன் வாக்காளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தலா 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் மக்களுக்காக எவ்வளவோ செலவு செய்கிறது. இதைக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துபோய்விடாது. சமூகக் கடமையாற்றியதற்கு அரசு தரும் வெகுமதி. அவனவன் காலை 5 மணிக்கே வந்து ஓட்டுச் சாவடி வாசலில் படுத்துக் கிடப்பான். 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி.

எஸ். மோகன், கோவில்பட்டி.

வீட்டுக்கு ஒரு EVM மெஷின் கொடுக்கலாம்.

balasubramni12

வாசகர் மேடை:  டணால் பச்சைக்கிளி!

மொதல்ல... 99 சதவிகித வாக்குப்பதிவு நடக்க நீங்க ஒரு ஐடியா சொல்லுங்க... மீதியுள்ள 1 சதவிகிதத்துக்கு நான் சொல்றேன்!

LAKSHMANAN_KL

ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு வருடம் ரயில் பயணம் இலவசம் என்று அறிவிக்கலாம்.

SriRam_M_

விரலில் மை வைத்தவுடன், சில்லுனு ஒரு நன்னாரி சர்பத் கொடுக்கலாம்.

IamUzhavan

? பிளாக் அண்ட் ஒயிட் கால காமெடியன்களை வடிவேலுவின் புகழ்பெற்ற கேரக்டர்களில் நடிக்க வைக்கலாமென்றால் யார் யார் என்னென்ன ரோல்களில் நடிக்கலாம்?

நாய் சேகராக சுருளி ராஜன். ‘இலவு காத்த கிளி’ கதை சொல்லிக் கேட்டால் நானும் ரௌடி தான்!

நா. இரவீந்திரன், வாவிபாளையம்.

சந்திரமுகி முருகேசன் - டி.எஸ்.பாலையா

பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

படித்துறை பாண்டியாக டணால் தங்கவேலு நடிக்கலாம், டயலாக் டெலிவரி டக்கு டக்குனு வெடிக்கும்..!

பெ. பச்சையப்பன், கம்பம்.

‘பச்சைக்கிளி’ கேரக்டரில் சபாபதி பட டி.ஆர்.ராமச்சந்திரன் நடிக்கலாம்! வெள்ளந்தியான நடிப்புக்கு அச்சுப் பிசகாமல் பொருந்திப் போவார்!

absivam

‘‘என்னதான் வேணும்?” “அட... எண்ணெய் தான் வேணும்” காமெடிக்கு நாகேஷும் (வடிவேலு), உசிலைமணியும் (சிங்கமுத்து) பொருத்தமாக இருப்பார்கள்.

Pachaicumbum

மனதைத் திருடிவிட்டாய் ‘ஸ்டீவ்வா மார்க்வா’வாக, ‘ஸ்டைலா’ நடனமாடும் சந்திரபாபு நடிக்கலாம். ‘சொய்ங் இன் த ரைன்’ பாடலை சந்திரபாபுவே சொய்ங்னு ஜோக்கா பாடிடுவார்.

Kirachand4

வாசகர் மேடை:  டணால் பச்சைக்கிளி!

? உதயநிதிக்குப் போட்டியாக ஓ.பி.ரவீந்திரநாத்தும் சினிமாவுக்கு வந்தால் அவர் எந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்?

உதயநிதி ‘மனிதன்' பட டைட்டிலை எடுத்து நடித்திருப்பதால், போட்டியாக ‘மிருகம்' டைட்டிலை வாங்கி ரவீந்திரநாத் நடிக்கலாம்!

LAKSHMANAN_KL

தந்தைக்கு நேர்ந்த அவமரியாதையை(!) துடைத்து, ‘வெற்றிவாகை’ சூடும்‘சவாலே சமாளி’ திரைப்படம்.

Suyambu

உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சைக்கோ’ போன்ற படங்களையே ரீமேக் பண்ணலாம்... அவருடன் மோதத் திறமை இருக்கிறதா என்று தெரிந்துவிடும்..!

Pachaicumbum

‘கரகாட்டக்காரன்’ ரீமேக்கில் நடிக்க வைக்கலாம், தலையில் கரகத்தை வைத்து `மாங்குயிலே பூங்குயிலே'ன்னு பாடும்போது மாஸா இருக்கும்!

San

ரஜினியின் ‘தர்மயுத்தம்’ படத்தில் ஓ.பி.ஆர் நடித்தால் கனக்கச்சிதமாக இருக்கும்.

ச.பிரபு, குற்றாலம்.

‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் நடிக்கலாம்.வேண்டுமானால் உதயநிதியையும் கூட நடிக்க வைக்கலாம்.

மீனலோசனி பட்டாபிராமன், VIRUGAMBAKKAM

? டிவி சீரியல் பார்க்கும்போது உங்களுக்குத் தோன்றும் வினோதமான சந்தேகம் எது?

வேறு வேறு சேனல், டைட்டில், ஒளிபரப்பு நேரம், நடிகர்கள்... ஆனால், ஒரே கதை..!

நா. இரவீந்திரன், வாவிபாளையம்.

டீ குடிக்கிற மாதிரி காட்டினால் சினிமா... டீ போடுற மாதிரி காட்டினால் சீரியல்.. சரிதானே!

jerry

ஒரு ஹீரோயினை மூணு நாலு ரௌடிகள் ரொம்ப நேரமா தொரத்துவாங்க.

ஹீரோயின் ரொம்ப கஷ்டப்பட்டு மூச்சு வாங்கி ஓடிக்கிட்டிருப்பாங்க.

ரௌடிங்க வேகமா தொரத்திக்கிட்டு வருவாங்க. ஆனாலும் சுமார் 20 அடி இடைவெளி அப்படியே ‘மெயின்டெய்ன்’ ஆயிட்டே இருக்கும்.

ஆர்.பத்மனாபன்

என்னடா மாமியார் மருமகளெல்லாம் ஒற்றுமையா இருக்கீங்க, அதுவும் கூட்டுக் குடும்பமா!

Its_Me_Prabakar

சீரியலில் பெண்கள் கட்டும் புதுப்புதுப் புடவைகள், நகைகள் இவற்றுக்கே வாங்கும் சம்பளம் சரியாகப் போய்விடாதா?

saroja.balasubramanian

திமிர் பிடிக்காத, அழாத, நீளமான வசனங்களைப் பேசாத டி.வி தொடர் நடிகைகளைக் ‘கண்டா வரச் ‌சொல்லுங்க...’

BaaluElango

பதில் சொல்றதுக்காகவே சீரியல் பார்க்கணும் போலிருக்கே. சத்திய சோதனை!

PG911

வாசகர் மேடை:  டணால் பச்சைக்கிளி!

? நம்மூருக்கு வரும் ஏலியனுக்கு ஒரே ஒரு உணவுவகையை மட்டுமே சாப்பிடத் தரலாம். நீங்கள் என்ன உணவுவகையைக் கொடுப்பீர்கள், ஏன்?

ஜெயலலிதா சாப்பிட்ட இட்லி இது என்று சொல்லி ‘அப்போலோ இட்லி' வாங்கித் தருவேன். அதுக்கப்புறம் ஏலியன்ஸ் மீண்டும் பூமிக்கு வருமா என்பது மர்மமோ மர்மம்.

 ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

கிரகம் விட்டு கிரகம் வந்ததால கிறங்கி வந்திருக்கும் ஏலியனுக்கு இளநீர் கொடுத்துப் புத்துணர்ச்சி கொடுப்பேன்.

Kirachand4

‘மன் கி பாத்' உரையைப் போட்டுக் காட்டுவேன்... அதில் ஜீ சுடுற சுவையான வடைகளை வயிறார உண்டு மகிழட்டுமே..!

LAKSHMANAN_KL

முதல்ல `கபசுரக்குடிநீர்' கொடுப்பேன். ஏன்னா, விருந்தாளி ஏலியனுக்கு கொரோனா தொற்றிக்கொள்ளக் கூடாதே..!

KmFarook6

திருநெல்வேலி அல்வா. எங்கள் மண்ணின் மணத்தை ஏலியன்ஸ் உணரவேண்டுமல்லவா!

ayyan.aar.9

ஏலியனுக்கு நம்மூர் சீதோஷ்ண நிலை ஒத்து வராமல் ஜுரம் வரலாம். எனவே ஆப்பிள் பழத்தை அளிப்பேன். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் அருகில் வரமாட்டார்.

venkat.

வாசகர் மேடை:  டணால் பச்சைக்கிளி!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? அஜித் மாஸ்க், விஜய் சைக்கிள் வரை அரசியல் குறியீடு கண்டுபிடித்துவிட்டார்கள். நடிகர்களின் சினிமாக் காட்சிகளை வைத்து ஜாலியான குறியீடுகள் சொல்லுங்கள்...

? முகக்கவசங்களில் எழுதுவதற்கு சுவாரஸ்யமான வாக்கியங்கள் சொல்லுங்கள்...

? ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலைப் பாடி அழைப்பது என்றால் யாரை அழைப்பீர்கள், ஏன்?

? சிம்பு படத்தை தனுஷும் தனுஷ் படத்தை சிம்புவும் ரீமேக் செய்து நடிப்பதாக இருந்தால் எந்தப் படங்களை யார் ரீமேக் செய்யலாம்?

? அரசியல்வாதிகள் அரசியலைத் தவிர இன்னொரு வேலை பார்க்கலாம் என்றால் யார் யாருக்கு என்ன வேலை தரலாம், ஏன்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com